சினிமா ஸ்கோப் 29: வண்ணக்கனவுகள்

தொண்ணூறுகளுக்கு முன்னரான காலம் இப்போது போலில்லை. சினிமா பார்க்க வேண்டும் என்றால் தியேட்டருக்குத் தான் செல்ல வேண்டும். விரும்பிய பாடலை மறுபடியும் பார்க்க வேண்டுமென்றால்கூடப் படத்தை மீண்டும் பார்ப்பது ஒன்றே வழி. அதனால் திரையரங்குடன் அந்தரங்க உறவு கொண்டிருந்த ரசிகர்கள் அநேகர். வண்ணக்கனவுகள் பொதிந்த பசுமையான வெளியாகத் திரையரங்கம் அவர்களது மனதில் நிலை கொண்டிருக்கும். இப்போது கேட்டாலும் அவரவரது ஊரில் இருந்த, இருக்கும் திரையரங்கின் கதையை ரசிக்க ரசிக்கச் சொல்வார்கள். அப்படியொரு ரசிகன்தான் வசந்தபாலன் இயக்கிய வெயில் (2006) படத்தின் நாயகன் முருகேசன்.

கரிசல் நிலத்தின் வாசனை

கூத்துப்பட்டறையில் பயிற்சிபெற்ற பசுபதி, சினிமாவால் வாழ்வைத் தொலைத்த, எம்.ஜி.ஆர். ரசிகனான முருகேசன் என்னும் வேடத்தை ஏற்றிருப்பார். ஆழப்புதைய சரியான ஆழிக்காகக் காத்திருப்பவர்கள் கூத்துப்பட்டறைக்காரர்கள். தானும் சளைத்தவரல்ல என்பதை இந்தப் படத்தில் காட்டியிருப்பார் பசுபதி. தோல்வி பெற்ற ஒருவனின் வாழ்க்கைச் சம்பவங்கள் என்பதால் பசுபதி ஆழ்கடலில் மூழ்கித் தரைதொட்டு மேலெழுவார். சினிமாவால் முருகேசனது வாழ்வு என்ன ஆனது என்பதன் பின்புலத்தில் காலத்தில் கரைந்துபோகும் கரிசல் வட்டாரத்தின், வாழ்வின் ஞாபகங்களை மண்ணின் மணத்துடன் மீட்டெடுக்க முயன்றிருப்பார் வசந்தபாலன். இதன் திரைக்கதையில் முருகேசனுக்கும் பாண்டிக்குமான பிரியம் வெளிப்பட்டிருந்த விதம் ஆண் பெண் உறவு பற்றிய அக்கறையுடன் கையாளப்பட்டிருக்கும்.

அண்ணன் தம்பி பாசம், காதல், தகப்பன் மகனின் விநோத உறவு, நலிவடையும் தொழில், உருப்பெறும் புதுத் தொழில், தொழில் போட்டி, பகைமை என ஒரு பொழுதுபோக்குப் படத்துக்குத் தேவையான விறுவிறுப்பான அம்சங்கள் அனைத்தை யும் கொண்டிருந்த படமாக வெயில் அமைந்திருந்தது. இந்தப் படத்தின் கன்னியப்பா டாக்கீஸ் காட்சிகள் அனைத்துமே இத்தாலிப் படமான ‘சினிமா பாரடைஸை நினைவூட்டும்.

வழுக்கிச் செல்லும் திரைக்தை

1990-ம் ஆண்டில் சிறந்த வெளிநாட்டுப் படம் பிரிவில் ஆஸ்கர் விருதைப் பெற்ற படம் சினிமா பாரடிஸோ (1988). சினிமா பாரடிஸோ என்னும் தியேட்டரில் தனது பால்யத்தையும் பருவத்தையும் கழித்துப் பின் சினிமா இயக்குநராக உயர்ந்த, சிறு வயதில் தோத்து எனச் செல்லமாக அழைக்கப்பட்ட, சல்வதோரி திவிதாவின் கதைதான் அந்தப் படம். ஆல்ஃப்ரெதோ என்னும் சினிமா ஆபரேட்டருக்கும் தோத்துவுக்குமான உறவின் பிணைப்பு வெளியாக அந்தத் திரையரங்கமே இருக்கும்.

அந்த ஊரின் பிரதான சதுக்கத்தில் மையமாக அமைந்த சினிமா பாரடிஸோவின் பின்னணியில் அவர்களது வாழ்வைச் சொன்ன படம் அது. ஆல்ஃப்ரெதோவின் மறைவுச் செய்தியுடன் படம் தொடங்கும். அதை அறிந்த சல்வதோரியின் நினைவுகளாகப் படம் திரையை நிறைக்கும். வெயிலில் படம் முருகேசனின் பார்வையில் தான் சொல்லப்படும். சினிமா பாரடைஸின் காட்சிக்கோணங்களும் வண்ணத் தோற்றமும் ரசிகர்களின் மனத்தில் அப்படியே அப்பிவிடும் தன்மை கொண்டது. சுவாரஸ்யமான திருப்பங்கள் கிடையாது. அது வாழ்வைச் சொல்லும் படம். எனவே, அதற்கேற்ற திரைக்கதை கண்ணாடித் தளத்தில் நீர் பரவுவதைப் போல் மென்மையாக வழுக்கிக்கொண்டு செல்லும்.

உன்னைப் பற்றிப் பேச வை

தோத்துவுக்கு சினிமா மீது ஏற்படும் காதலை இந்தப் படத்தின் திரைக்கதை மிகுந்த ரசனையுடன் காட்சிகளாகச் சித்தரித்திருக்கும். முருகேசன் வேறு வழியில்லாத சூழலில் கன்னியப்பா டாக்கீஸை தஞ்சமடைவான். ஆனால் தோத்துவுக்கு அப்படியல்ல; சினிமா பாரடிஸோ அவனது சொர்க்கம். அதன் ஒவ்வோர் அசைவையும் அவன் கூர்ந்து கவனித்து, ஆபரேட்டிங் வேலையைக் கற்றுக்கொண்டவன். தியேட்டரில் நெருப்புப் பற்றி ஆல்ஃப்ரெதோ கண் பார்வையைப் பறிகொடுத்த பின்னர் அந்த தியேட்டர் ஆபரேட்டராகப் பொறுப்பேற்றுக்கொள்வான் தோத்து.

ரசிகர்கள் சந்தோஷமாகத் திரைப்படம் பார்க்கும்போது, அவர்களுக்கு அந்த மகிழ்வை அடைந்த திருப்தி ஏற்படுவதை ஆல்ஃப்ரெதோ தோத்துவிடம் பிரியத்துடன் சொல்வார். என்னதான் விருப்பத்துடன் வேலைசெய்தாலும் அந்தப் பணி குறித்த சங்கடங்களையும் அவர் தோத்துவுடன் பகிந்துகொள்வார். அதனால்தான், ‘உன் பேச்சு போதும், உன்னைப் பற்றிய பேச்சு தேவை’ என்று தோத்துவை ஊரை விட்டு விரட்டுவார்.

தோத்துவும் தங்கமும்

தோத்து தியேட்டர் இருக்கையில் அமர்ந்துகொண்டு சிறு துவாரம் வழியே பார்க்கும் ஆல்ஃப்ரெதோவைப் பார்த்து சைகையில் பேசும் காட்சியைப் போலவே வசந்தபாலனின் வெயிலில் முருகேசனின் காதலி தங்கம் தியேட்டர் இருக்கையில் அமர்ந்துகொண்டு முருகேசனுடன் காதல் கலந்த சைகை மொழியில் பேசுவாள். போதிய ஆதரவு இல்லாமல் சினிமா பாரடிஸோ இடிக்கப்படுவதைப் போலவே கன்னியப்பா டாக்கீஸும் இடிக்கப்படும். வெயிலின் ஒரு பகுதி சினிமா பாரடிஸோவை நினைவூட்டுவதைப் போல் அதன் இன்னொரு பகுதி டெஸ்பரடோ ஸ்கொயர் என்னும் இஸ்ரேலியப் படத்தை ஞாபகப்படுத்தும்.

இன்னுமொரு ‘திரை’ப் படம்

2001-ல் வெலியான இந்த இஸ்ரேலியப் படம் டெஸ்பரடோ ஸ்கொயர் என்னும் ஒரு தியேட்டரை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டிருக்கும். ஊரை விட்டு 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஓடிப் போன, ஆவ்ரம் என்னும் பெயர் கொண்ட தம்பி, தன் அண்ணன் மோரிஸின் ஓராண்டு நினைவஞ்சலி தினம் அனுசரிக்கப்படும் வேளையில் ஊருக்குள் வருகிறான். இந்த வேளையில் மோரிஸ் தன் இரண்டாம் மகன் நிஸ்ஸிம் கனவில் வந்து, மூடிக் கிடக்கும் பழைய தியேட்டரில் இறுதியாக ஒரு படத்தைத் திரையிட வேண்டும் எனச் சொல்லி மறைகிறான். தியேட்டரைத் திறக்கும் முயற்சியில் இரு மகன்களான ஜார்ஜும் நிஸ்ஸிமும் ஈடுபடுகிறார்கள்.

தியேட்டரில் எந்தப் படத்தைத் திரையிட வேண்டும் என்று யோசிக்கும்போது இந்திப் படமான சங்கம் அங்கே திரையிடப்பட வேண்டும் என்கிறான் அந்த ஊரில் வாழும் இந்தித் திரைப்பட ரசிகனான இஸ்ரேல் -அவன் தியேட்டர் கூரை மேல் அமர்ந்து சுவரின் சிறு துவாரம் வழியே திரைப்படங்களைப் பார்த்து ரசிப்பவன். தியேட்டர் ஆபரேட்டரான ஆரோனும் அதை ஆமோதிக்கிறான். அந்தப் படத்தைத் திரையிட வேண்டாமென மறுக்கிறாள் மோரிஸின் மனைவியான செனியோரா.

ஆனால் மகன்கள் தாயின் மறுப்பைப் புறக்கணித்து சங்கம் படத்தைத் திரையிட முயல்கிறார்கள். சங்கம் படத்தின் பிரிண்ட் தேடி அலைகிறார்கள். அதுவோ ஆவ்ரமிடம்தான் இருக்கிறது. இரு நண்பர்கள் ஒரு பெண்ணைக் காதலிப்பதும் அதைத் தெரிந்துகொண்ட நண்பன் ஒருவன் நட்புக்காகக் காதலை விட்டுத் தருவதும் சங்கம் படத்தின் கதை. அதைப் போலவே மோரிஸின் வாழ்விலும் நடந்திருக்கிறது செனியோராவும் ஆவ்ரமும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். இது தெரியாமல் மோரிஸுடன் செனியோராவுக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. அண்ணனுக்காகத் தன் காதலைத் துறந்து ஊரை விட்டு ஓடிப்போனவன்தான் ஆவ்ரம். இந்த உண்மை மகன்களுக்குத் தெரியவருகிறது. இப்படிச் செல்லும் டெஸ்பரடோ ஸ்கொயரின் திரைக்கதை.

வெயில், டெஸ்பரடோ ஸ்கொயர் இரண்டு படங்களிலும் பிரதானமாக தியேட்டர் உண்டு; அண்ணன் தம்பி பாசமுண்டு; நினைவஞ்சலி சுவரொட்டி ஒட்டப்படுவதுண்டு; இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த ஊருக்குத் திரும்பும் கதாபாத்திரமுண்டு.

ஆனாலும் வெயில் ஒரு தமிழ்ப் படம். அதற்கான குணாதிசயங்களுடன் அது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதனாலேயே சிறந்த இந்தியப் படமென்ற தேசிய விருதும் வெயிலுக்குக் கிடைத்தது. இந்த மூன்று படங்களையும் பார்க்கும் ரசிகர் ஒருவர், வெயிலின் உருவாக்கத்தில் சினிமா பாரடைஸ், டெஸ்பரடோ ஸ்கொயர் போன்றவற்றின் சாயலைக் கண்டடைய முடியும், அவ்வளவுதான்.

தொடர்புக்கு: chellappa.n@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

8 hours ago

வாழ்வியல்

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்