ஒரு கலைஞன் உதயமான தருணம்!

By திரை பாரதி

நாடகத்துக்கும் திரைத்துறைக்குமான வேறுபாடுகள் புரிந்துகொள்ளப்படாமல் சினிமாவையும் நாடகமாகவே கொடுத்துவந்த 70-களின் தமிழ் சினிமாவை எம்..ஜி.ஆர் முன்னிலையில் துணிவுடன் கிழித்துத் தோரணங்கட்டினார் அந்தக் கல்லூரி மாணவர். அவர்தான் பின்னால் காட்சிமொழியைத் திரையில் எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கு முன்மாதிரி காட்டிய மகேந்திரன். இத்தனைக்கும் தமிழ் நாடகத்தை ‘சினிமாவின் தாய்’ என்று சிலாகித்தவர். நாடக எழுத்தின் விரல் பிடித்துத் திரை எழுத்தின் படியேறி நடந்தவர். 

ஏழு மாதத்தில் குறைப்பிரசவமாகப் பிறந்தவர் மகேந்திரன். பால்யத்தில் ‘நோஞ்சான்’ என்றும் கல்லூரிக் காலத்தில் ‘வாத்துக்கால்’ என்றும் சக பையன்களால் பகடி செய்யப்பட்டார். அந்த பகடி அவரைத் துள்ளி எழ வைத்தது. மாலை மயங்கி, இருள் சூழ்ந்தபிறகு வீட்டுக்கு அருகிலிருந்த விளையாட்டு மைதானத்தில் தினந்தோறும் உறுதியுடன் ஓடிச் சுயமாகப் பயிற்சி செய்து சிறந்த ஓட்டப்பந்தய வீரராகப் பெயரெடுத்தார்.

வாத்துக்கால் என்றவர்களை வாயைப் பொத்திக்கொள்ளும்படி செய்தார் கல்லூரி மாணவர் மகேந்திரன். ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு வருகை தந்த எம்.ஜி.ஆர், அந்த விழாவில் கலந்து கொள்ளும்முன் மகேந்திரன் பயின்று வந்த கல்லூரியின் இலக்கிய மன்ற விழாவுக்கு வருகை தந்தார். “ நான் பேசியது போதும் என் முன்னால் மாணவர்கள் பேசட்டும். நான் கேட்கிறேன்” என்று எம்.ஜி.ஆர் கூறியதும் மாணவர்கள் பேசத் தொடங்கினார்கள்.

எம்.ஜி.ஆரை கண்ட வியப்பிலும் உணர்ச்சிப் பெருக்கிலும் நன்றாகப் பேசக் கூடிய மாணவர்களே உளறிக் கொட்டினார்கள்  மகேந்திரனின் முறை வந்தது. மகேந்திரன் பேசத் தொடங்கியதும் அதுவரை இறுக்கமாக அமர்ந்திருந்த எம்.ஜி.ஆரின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. கல்லூரியின் ஒழுக்கக் கட்டுப்பாடுகளை மீறி, வளாகத்துக்குள்ளேயே காதலித்து வரம்பு மீறிவிட்ட காதல் ஜோடியைத் தற்காலிகமாக ‘சஸ்பெண்ட்’ செய்திருந்த முதல்வர். அதை மறைமுகமாகத் தனது பேச்சில் சுட்டிக்காட்டினார் மகேந்திரன்.

kalaignan2jpg

“எம்.ஜி.ஆர். அவர்கள் கதாநாயகியின் கரம்பற்றி சினிமாவில் டூயட் பாடி ஆடிக்கொண்டு காதல் செய்வதை நமது மாநிலமே பார்க்கிறது. எம்.ஜி.ஆர். காதல் செய்வதை மட்டும்தான் இங்கே யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால், கல்லூரியில் காதல் என்றால் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்.” என்று பேசியபோது அரங்கம் அதிர்ந்தது.

எம்.ஜி.ஆரும் கைத்தட்டினார். அது மட்டுமல்ல; தமிழ் சினிமாவின் நாடகத்தனத்தை நார் நாராகக் கிழித்துத் தொங்கவிட்டார் இளைஞர் மகேந்திரன். ஐந்து நிமிடம் தரப்பட்ட மகேந்திரனை மேடையை விட்டு இறங்கும்படி மணியடித்தபோது எம்.ஜி.ஆர். மணியடித்த ஆசிரியரை பார்த்து இனி மணி அடிக்காதீர்கள் என்று கைகாட்டியதால் மகேந்திரன் 45 நிமிடங்கள் பேசினார்.

ஹீரோயிசத்தின் உச்சத்தில் மிகைநாயக பிம்பத்தின் விளிம்பில் சூப்பர் ஸ்டாராக இருந்த எம்.ஜி.ஆர். மகேந்திரன் என்ற இளைஞரின் துணிவையும் அதில் இருந்த நேர்மையையும் ரசித்தார். அந்த இளைஞனுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்த அந்த தருணம்தான் மகேந்திரன் எனும் கலைஞன் பிறக்கக் காரணமாக அமைந்த தருணம்.

மகேந்திரனைச் சென்னைக்கு அழைத்த எம்.ஜி.ஆர், பிற்காலத்தில் அவரைப் ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குத் திரைக்கதை எழுத பணித்தது வரை தொடர்ந்தது. ஹீரோயிசத்தால் திரையையும் அரசியலையும் வென்ற எம்.ஜி.ஆரால் கைதூக்கிவிடப்பட்ட மகேந்திரன் ஹீரோயிசத்தை உதறிவிட்டு எடுத்த படங்களை மனம்விட்டுப் பாராட்டியிருக்கிறார் எம்.ஜி.ஆர். அதற்குமுன் திரையில் அடையாளம் பெறப் போராடிய காலத்தில் மகேந்திரனுக்கு மாதந்தோறும் உதவித்தொகை அனுப்பி வைத்த எம்.ஜி.ஆர். காலம் கொண்டாட காத்திருக்கும் ஒரு கலைஞனை முன்னதாகவே அடையாளம் கண்டுகொண்டது தனிப்பட்ட அக்கறையால்தான்.

 -திரைபாரதி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

5 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

11 mins ago

ஆன்மிகம்

21 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்