சினிமா வியாபாரம்: விலங்குகள் திறந்துவைத்த கதவு!

By கா.இசக்கி முத்து

சமீபகாலமாக மிருகங்களை வைத்துப் பல படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பின்னணியில் ஒரு வியாபார நோக்கம் இருப்பதாகத் திரையுலகினர் தெரிவிக்கவே முழுமையான பின்னணியைத் துருவத் தொடங்கினோம்.

முன்பு ஒரு படம் தொடங்கப்பட்டதும் அதன் தொலைக்காட்சி உரிமம் விற்றுவிடும். இன்றைய சூழலில் படம் வெளியாகி மக்களிடையே வரவேற்பு பெற்றால் மட்டுமே தொலைக்காட்சியினர் படம் வாங்குகிறார்கள். இதில் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் மட்டும்தான் விதிவிலக்கு.

தற்போது இந்தச் சூழல் மாறியுள்ளது. தொலைக்காட்சி உரிமத்தைத் தாண்டி இந்தி மொழிமாற்று உரிமை, இந்தி தொலைக்காட்சி உரிமம் ஆகியவற்றால் மதிப்பு கூடியிருக்கிறது. தமிழில் வியாபாரம் தொடங்கும் முன்பே, இந்த உரிமைகள் விற்கப்பட்டுக் கணிசமான தொகை தயாரிப்பாளர்களுக்கு வந்துகொண்டிருக்கிறது. தமிழ்ப் படங்களின் உரிமையை வாங்கும் ஸ்டார் இந்தியா, ஜீ நிறுவனங்கள், அவற்றுடன் சேர்த்து இந்தி உரிமையையும் கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள்.

ஆனால், சில தயாரிப்பாளர்கள் இதற்கு உடன்படுவதில்லை. ஏனென்றால், இவர்கள் கொடுக்கும் தொகையைவிட இதர வட இந்தியத் தொலைக்காட்சி நிறுவனங்கள் கொடுக்கும் தொகை கணிசமானது என்கிறார்கள், அப்படி விற்ற பல தயாரிப்பாளர்கள்.

தேவை என்ன?

மிருகங்கள், பேய்ப் படங்கள் ஆகியவற்றுக்கான இந்தி உரிமைகளுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. தவிர கிராஃபிக்ஸ் காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் படங்களுக்கும் நல்ல விலை கொடுக்கிறார்கள். குரங்குகள், பாம்புகள், குதிரைகள் ஆகியவற்றை வைத்துக் குறைந்த முதலீட்டில் நல்ல படங்கள் எடுத்தால் ஜாக்பாட்தான்.

இப்படங்களுக்கான தமிழ்த் தொலைக்காட்சி உரிமையை ஒரு கோடிக்கு வாங்குகிறார்கள் என்றால், அதன் இந்தி மொழிமாற்று உரிமை மட்டும் சுமார் 40 லட்சம் வரை விலை போகிறதாம். சமீபத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘கொரில்லா' படத்தை நல்ல விலைக்கு விற்றிருப்பதாகத் தயாரிப்பு வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது. இதைத் தெரிந்து கொண்டுதான் ‘கூர்கா', ‘இருட்டு', ‘தும்பா', ‘பன்னிக்குட்டி', ‘ராஜபீமா' உட்பட விலங்குகளைக் கொண்டு பல படங்கள் தமிழில் உருவாகி வருகின்றன.

தொலைக்காட்சிக்கும் டப்பிங்

ரஜினி, கமல் படங்களைத் தாண்டி பெரும்பாலும் மற்ற கதாநாயகர்களின் படங்கள் பெரும்பாலும் இந்தியில் வெளியாகாத நிலை இருந்தது. ஆனால், தற்போது நல்ல விலைக்கு இந்தி மொழிமாற்று உரிமை விற்கப்பட்டு வருகிறது. முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் மொழிமாற்று உரிமையைக் கைப்பற்றி, டப்பிங் செய்து அதனை ஒளிபரப்புகிறார்கள்.

விஜய் நடித்த ‘சர்கார்' படத்தின் இந்தி உரிமை 20 கோடிக்கும், அஜித் நடித்த ‘விஸ்வாசம்' பட இந்தி உரிமை 15 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. மேலும், தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்து யூடியூப் பக்கத்தில் அதிகாரபூர்வமாகப் பதிவேற்றிவிடுகிறார்கள். அவற்றையும் பல லட்சம் பேர் பார்த்துவிடுகிறார்கள்.

பிரபு தேவாவுக்கு மவுசு

தமிழ்ப் படங்களுக்கான இந்தி மொழிமாற்று உரிமைச் சந்தையைப் பொறுத்தவரை பிரபு தேவா படங்களுக்கு நல்ல மவுசு இருக்கிறது. இந்தியில் முன்னணி இயக்குநர் என்பதால், அவர் நடிக்கும் தமிழ்ப் படங்களை நல்ல விலை கொடுத்து வாங்கிவிடுகிறார்கள். 'தேவி 2', 'எங் மங் சங்', 'பொன் மாணிக்கவேல்', 'தேள்', 'ஊமை விழிகள்' உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இவற்றில் சில படங்களுக்கு இந்தி மொழிமாற்று உரிமை விலை பேசி முடிக்கப்பட்டும், சில படங்களுக்கு விலை பேசப்பட்டும் வருகிறது.

தற்போது இந்தியில் சல்மான்கான் நடிக்கும் ‘தபாங் 3' படத்தை இயக்கிவருவதால், இவரது படங்களின் இந்தி மொழிமாற்று உரிமையின் விலை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் வரவேற்பு பெறாவிட்டாலும் இந்தி உரிமையை விற்று லாபம் பார்த்துவிடலாம் என்பதுதான் பிரபுதேவா படங்களின் தயாரிப்பாளர்களுடைய எண்ணமாக இருக்கிறது.

சீன மொழிமாற்று உரிமை

வட இந்தியச் சந்தையைத் தாண்டி தற்போது சீன மொழிமாற்று உரிமைகளும் கன ஜோராக விற்கப்பட்டு வருகின்றன. சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மிஸ்டர் லோக்கல்' படத்தின் சீன மொழிமாற்று உரிமை 25 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.

சிறு படங்கள், கவர்ந்து இழுக்கும் கதைக்களங்கள் கொண்டவையாக எடுக்கப்படும்போது, சீன மொழிமாற்று உரிமையை வாங்குபவர்களின் பார்வை அவற்றின் மீதும் திரும்பக்கூடும்.

தமிழ்ப் படங்களைச் சீனாவில் வெளியிடத் தடுமாறிவரும் இந்தக் காலகட்டத்தில், சீன மொழிமொழிமாற்று உரிமை விற்கப்பட்டு அங்குள்ள தொலைக்காட்சிகளில் ஒளிபரப் பாகிறது. சில தமிழ்ப் படங்களுக்கு தைவான் மொழிமாற்று உரிமையும் விற்கப்பட்டிருப்பதாகத் தகவல் தருகிறார்கள் தயாரிப்பாளர்கள்.

கதையில் கவனம்

தயாரிப்பாளர்கள், தங்களுடைய படங்களின் வெளிநாட்டுத் திரையரங்க உரிமையை விற்கும்போது, அதன் வெளிநாட்டு மொழிமாற்று உரிமைகளையும் அதனுடன் சேர்த்து விற்காமல் இருக்க வேண்டும். அப்படி விற்றுவிட்டால் சீன மொழி, தைவான் மொழி உள்ளிட்ட மொழிமாற்று உரிமையைத் தனியே விற்க இயலாது. இதில் மிகவும் கவனமாக இருந்தால் நல்ல லாபம் அடையலாம் என்கிறார்கள் லாபம் ஈட்டிய தயாரிப்பாளர்கள் பலர்.

இந்தி உள்ளிட்ட இதர மொழிமாற்று உரிமைகள் என்ற இந்தப் புதிய வியாபாரக் கதவு தற்போதுதான் திறந்துள்ளது. விலங்குகளை வைத்து படம் பண்ணினால் நல்ல லாபம் என்று தொடர்ச்சியாக ஒரே மாதிரியான படங்களைப் பண்ணாமல், வித்தியாசமான, அழுத்தமான கதைகளைத் தேர்ந்தெடுத்துப் படமாக்கினால் அந்த வியாபாரக் கதவு திறந்தே இருக்கும்.

தொடர்புக்கு: esakkimuthu.k@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

1 hour ago

மேலும்