நம்பியார் 100: எம்.ஜி.ஆருக்காகப் பிறந்த கலைஞன்!

By எஸ்.வி.வேணுகோபாலன்

ஒளிமயமாக ஜொலிக்கும் சூரிய வெளிச்சத்துக்குப் பின்னால், அதைப் பெரிதாக உணர வைக்கும் இருளுக்கு முக்கியப் பங்கிருக்கிறது. எல்லா விதங்களிலும் மிக நல்லவர்களாக, கருணை மிக்கவர்களாக, நீதியைக் காப்பவர்களாக, நேர்மையின் தூதர்களாக வலம்வரும் கதாநாயகனை, அந்த அந்தஸ்துக்கு உயர்த்த சம அந்தஸ்துமிக்க வில்லன் தேவைப்படுகிறார்.

நட்பு முரண்களும் பகை முரண்களும் அற்ற வாழ்க்கை சுவாரசியம் அற்றதாகிறது. அக்கால நாடக மேடைகளில், ராஜபார்ட் நடிப்புக்கு ஈடாகவும், ஆளைப் பொறுத்து, மேலாகவும் கொண்டாடப்பட்டது கள்ள பார்ட் பாத்திரம்! எந்தக் கதையிலும் வில்லன்களும் தீமையும் இறுதியில் தோற்றே தீரவேண்டும் என்பது கலைகளின் அறம்.

திரைப்படம் மட்டும் அதிலிருந்து விதிவிலக்காக இருக்க முடியுமா? திரையில் தோன்றி ஒரு மாபெரும் நட்சத்திரமாக வெற்றி பெற்றுவிட்டாலும் ஏற்று நடித்த கொடூர வில்லன் கதாபாத்திரங்கள் மூலம் மக்களின்  'வெறுப்புக்கு' உள்ளான நடிகர்களில் மகத்தான நடிகர் நம்பியார்.

அவர் கட்டமைத்த உருவம்

கள்ளபார்ட் உருவாக்கத்தில், என்னென்ன கொடுமைகள் எல்லாம் ஒரு தீய மனிதன் செய்ய முடியுமோ, அப்படியான விதவிதமான அராஜகங்களை எல்லாம் கற்பனை செய்து, சிந்தித்து வில்லன் கதாபாத்திரத்தை அதன் 'உன்னத' நிலைக்கு உயர்த்திக்கொண்டுபோகும் அளவுக்குத் திரைக்கதை ஆசிரியர்களைத் தூண்டிக்கொண்டே இருந்தது நம்பியாரின் நடிப்பாளுமை.

துளியும் இரக்கம் காட்ட மறுக்கும் கண்கள், வில்போல் மேல் நோக்கி உயர்ந்து, கண்களை அகல விரித்து பார்வையைப் படுபயங்கரமாக நெரித்துகாட்ட உதவும் புருவங்கள், வசனத்தைவிடவும் இறுக்கமாக முறுக்கிக்கொண்டு நிற்கும் மீசை, கழுத்தை இஷ்டப்பட்ட விதத்தில் வெட்டி, அசாத்திய அதிர்ச்சி தரும் கோணங்களுக்குத் திரும்பி மிரட்டும் முகம், எங்கோ பார்த்தபடி என்னென்ன செய்யப்போகிறேன் என்று எதிரே இருப்பவர் மிரளும்படி சொல்லிக்கொண்டு போகும் மிரட்டலான குரல், எதிரியைப் பிழிவதற்கான ஒத்திகைபோலப் பிசைந்தபடி துடிக்கும் கைகள், நடையிலேயே பார்வையாளர்களுக்குப் பயத்தை உண்டு பண்ணும் நடிப்பு என வில்லன் என்பதற்கான அடையாளமாகவே தன்னைக் கட்டமைத்துக் காட்டியவர் நம்பியார்.

கதாநாயகியைத் தனக்கு இணங்கச் செய்ய ஒரு வில்லன் கையாளும் உத்திகளுக்காக அவர் மேற்கொண்டிருந்த உடல்மொழியும் நைச்சிய பேச்சு மொழியும் இணங்க மறுத்தால் என்ன நடக்கும் என்பது பற்றிய அச்சமூட்டுதல் ஆகியவற்றுக்கும் நம்பியார் முன்னுதாரணம் இல்லாத நடிப்பை வழங்கினார்.

நாயகன் தரும் சவால்கள் அத்தனைக்கும் ஈடுகொடுக்கக் கூடிய சரிக்குச் சமமான நடிப்பாளுமையாக நம்பியார் இருந்தார்.  எப்போதும் சதித் திட்டங்களிலேயே மூழ்கி இருக்கும் ஒரு ஜீவனுக்கு நகைச்சுவை உணர்ச்சி இருக்குமா என்றால் இருக்கும் என்பதற்கான அசத்தலான சாத்தியத்தையும் உருவாக்கி வைத்திருந்த நம்பியார், ‘வில்லத்தன நகைச்சுவை’ வழியாக உறுதியாகச் சிரிக்கவும் வைத்தவர்.

எம்.ஜி.ஆருக்காக...

எம். ஜி. ஆர். படம் என்றாலே, நம்பியார் உண்டா இல்லையா என்று ரசிகன் தேடுவான், இருக்கையில் நெளிவான், நம்பியாரை மனதாரச் சபித்தபடி காத்திருப்பான். அவரது அட்டகாசங்களை மிகுந்த பொறுமையோடு ரசித்திருப்பான். கிளைமாக்ஸ் காட்சியில் அவருக்குக் கிடைக்க வேண்டியதை எம்.ஜி.ஆர் வந்து வழங்கும் நேரத்தில், தன்னை மறந்து எழுந்து நின்று விசில் அடித்துக் கூத்தாடுவான்.  

 ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் அவர் அப்பாவி எம். ஜி. ஆரைச் சவுக்கால் வெளுத்து எடுக்கும்போது துடித்துப் போகும் ரசிகர்கள், எந்த நம்பிக்கையில் சகித்துக்கொண்டு காத்திருந்தார்கள்! பிற்பகுதியில் இரட்டைப் பிறவியில் அடுத்த உருவில் வீரநாயகனாக வந்து அதே எம். ஜி. ஆர். அதே சவுக்கைச் சாதுரியமாகக் கைமாற்றிப் பற்றிக்கொண்டு நம்பியாரைப் பழிக்குப் பழி வாங்குவார் என்ற நம்பிக்கையில்தான்!

‘நான் ஆணையிட்டால்..’ என்ற அந்தப் பாடல் வரி, எம்.ஜி.ஆரின் அரசியல் பயணத்தின் முக்கிய மைல் கல்! அதை வடிவமைத்த திரைக்கதையில் நம்பியார் ஏற்ற கதாபாத்திரத்தின் நயவஞ்சகமும் நரித்தனமும்தாம் மிக முக்கிய இடத்தை வகித்தன என்பதை உணர்ந்துகொள்ள முடியும். எத்தனையோ படங்களில், எம். ஜி. ஆர்., நம்பியாரைத் தனது மென் புன்னகையால் வரவேற்பார். அவரைத் தமது கள்ளச் சிரிப்பால் எதிர்கொள்வார் நம்பியார்.

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் எம். ஜி.ஆரைத் தனது கடல் கொள்ளைக்கு உதவியாக வரவழைக்க மேற்கொள்ளும் தந்திரம், ஜெயலலிதாவை எப்படியாவது கவர்ந்து செல்ல வகுக்கும் திட்டம் இவையெல்லாம் ஒரு பக்கம். ஆனால், வேறு படங்களில் அமையாத ஒரு காட்சி ‘ஆயிரத்தில் ஒருவ’னில் இடம் பெற்றிருந்தது - கதாநாயகன் தன் தோழர்களோடு உற்சாகக் குரலெடுத்துப் பாடுகையில் அந்தக் காட்சியில் துள்ளிக் குதித்து ரசித்து ரசித்துச் சிரிக்கும் புதுமையான வில்லனாக நம்பியார் தோன்றியிருப்பார். 

இரண்டையும் ஏற்றுக்கொண்டனர்

சிவாஜி - நம்பியார் எதிரெதிர் கதாபாத்திரப் படைப்புகள் வேறு ஒரு தினுசான சுவையையும் சுவாரசியத்தையும் கொண்டிருக்கும். ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் மதன்பூர் மகாராஜாவாக வந்து, மோகனாம்பாளின் அழகில் சொக்கித் தடுமாறி தத்தளிக்கும் கதாபாத்திரம். கலக்கி எடுத்திருப்பார்.

தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்குமிடத்தில் அந்தக் கதாபாத்திரம் எதிர்மறையின் உன்னதத்தை ஒரு பார்வையில் வெளிப்படுத்திவிடும். ஒரு கட்டத்துக்குப்பின்  நகைச்சுவை கலந்த குணச்சித்திரக் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கத் தொடங்கினார். நம்பியாரின் குணச்சித்திர முகத்தையும் அப்படியே ஏற்றுக்கொண்டார்கள் ரசிகர்கள்.

கதாநாயகனாக இருந்தால்தான் மக்களின் நினைவில் நிற்க முடியும் என்ற நம்பிக்கையைத் தகர்த்த நம்பியாரின் நடிப்பாளுமை எந்த முன்னுதாரணமும் இல்லாதது என்பதே அவரது வெற்றின் தனித்துவம். 

- தொடர்புக்கு: sv.venu@gmail.com | படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்