விவாதம்: விருது என்பது யாதெனின்…

By கா.இசக்கி முத்து, ஸ்ரீதர்

“விருது என்பது வியர்வையோடு வரும் குழந்தையை தாய் தலைகோதும் நிம்மதிக்குச் சமமானது.” - எந்தத் தத்துவ ஞானி சொன்னது இது என்கிறீர்களா? காமெடி நடிகர் சூரி. சமீபத்தில் மலேசியாவில் நடந்த சைமா விருது விழாவில் இப்படிப் பேசினார் சூரி. ஆனால் திரைத் துறைக்கான விருதுகள் உண்மையிலேயே இப்படிப்பட்ட உயரிய எண்ணங்களோடுதான் வழங்கப்படுகின்றனவா?

இன்று பல நிறுவனங்கள் விருதும், விருந்துமாக ரகளை கிளப்பிவருகின்றன. விருதுகளைக் கொடுப்பவர்களும், அதனை வாங்குபவர்களும் அதற்குத் தகுதியானவர்கள்தானா என்ற கேள்விகள் ஒவ்வொரு விருது விழாவின்போதும் எழுப்பப்படுகின்றன.

விருது விழாக்களின் வண்ணமயமான ஆர்ப்பாட்டத்திலும் வாராவாரம் ஒளிபரப்பாகும் விருதுக் காட்சிகளின் ஆரவாரத்திலும் இந்தக் கேள்விகள் அமுங்கிவிடுகின்றன.

விருதுக்கான தகுதி என்ன? விருது வழங்கப்படும் மேடைகளைப் பார்க்கும்போது சில ‘தகுதிகள்’ புலப்படுகின்றன. முன்னணியில் இருக்கும் நட்சத்திரமாக இருக்க வேண்டும். வித்தியாசமாக, விவகாரமாகப் பேசி கைத்தட்டலைப் பெறத் தெரிய வேண்டும். அதைப் பேசுபொருளாக மாற்றும் திறன் வேண்டும். அல்லது சென்டிமெண்டாகப் பேசிக் கொஞ்சம் கண்ணீர்த் துளிகளைச் சிந்தவைக்க வேண்டும்.

கேமராவின் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தால் புரமோவுக்கு உதவும். “விருது வழங்குகிறோம் என்று அழைத்தார்கள். அதனால் வந்தேன்” என்று நட்சத்திரங்கள் மேடையில் பேசுவதை வேறு எப்படிப் புரிந்துகொள்வது?

வீடு வீடாக மக்களிடம் வாக்கெடுப்பு, இணையம், மொபைல் போன்கள் மூலம் வாக்கெடுப்பு என்பன போன்ற அறிவிப்புகள் வரத்தான் செய்கின்றன. என்றாலும் விருதுகளின் பட்டியலைப் பார்க்கும்போது கேள்விகள் எழுவது நிற்கவில்லை.

கடந்த ஆண்டு விருதுப் பட்டியல்களில் இடம்பெறாத படங்கள், நடிகர்களின் பெயர்களைப் பார்க்கையில் இந்தக் கேள்விகளுக்குப் பின்னால் இருக்கும் ஆதங்கத்தையும் நியாயத்தையும் புரிந்துகொள்ளலாம். ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, '6 மெழுகுவர்த்திகள்', 'ஹரிதாஸ்' போன்ற படங்கள் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இவற்றை விருது தரும் அமைப்புகள் சீந்தக்கூட இல்லை. ‘சிறப்பு நடுவர் விருது’ என்ற பிரிவிலாவது இவற்றுக்கு விருது கொடுத்திருந்தால் விருது வழங்குபவர்களுக்குத் தரத்தின் மீதும் புதிய முயற்சிகளின் மீதும் இருக்கும் அக்கறை வெளிப்பட்டிருக்கும்.

மிஷ்கினின் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் இளையராஜாவின் உயிரோட்டமான பின்னணி இசையும் கொண்ட படம். ஜி.என்.ஆர். குமாரவேலனின் ‘ஹரிதாஸ்’, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனை வளர்ப்பதில் உள்ள சிக்கல்களை யதார்த்தமாகக் கையாண்டது.

குழந்தைகளைக் கடத்தும் கும்பலை மையமாகக் கொண்டு ‘6 மெழுகுவர்த்திகள்’ படத்தை வி. இசட். துரை இயக்கியிருந்தார். ‘6 மெழுகுவர்த்திகள்’ படத்தில் நன்கு நடித்திருந்த ஷாமுக்கு எந்த அங்கீகாரமும் இல்லை.

விருது விழாக்களில் வேறு சில முரண்பாடுகளும் அரங்கேறுகின்றன. தனுஷ் சிறந்த நடிகர் என்பதில் சந்தேகமில்லை. சென்ற ஆண்டில் வெளியான மரியான் உள்ளிட்ட பல படங்கள் அதற்குச் சான்று. ஆனால் சமீபகாலமாக நடிப்புக்கு அப்பாற்பட்ட காரணங்களுக்காக தனுஷ் விழா மேடைகளில் ஏறுகிறார்.

அல்லது ஏற்றப்படுகிறார். இசைக்கு யாரேனும் ஒருவருக்கு விருது கொடுத்துவிட்டால் இசைத் துறையைச் சேர்ந்த பிறரை எப்படி மேடையில் ஏற்ற முடியும்? அதனால் என்ன? அவர்கள் ஏதேனும் பாட்டுப் பாடியிருப்பார்கள் அல்லவா?

மக்களிடையே பிரபலமானவர்கள் பலரும் மேடையில் இருக்க வேண்டும் என்ற ஆவல்தான் இதுபோன்ற முரண்களுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது என்பதே பரவலான கருத்து. நிகழ்ச்சிக்கான ஸ்பான்சர்கள், விளம்பரங்கள், டி.ஆர்.பி. என்று பல அம்சங்கள் இருப்பதால் நட்சத்திரப் பட்டாளத்தின் அவசியத்தை முற்றிலும் புறக்கணித்துவிட முடியாது.

ஆனால் இதனால் திறமைசாலிகள் புறக்கணிக்கப்படாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் விருது வழங்கும் அமைப்பினர் யோசிக்க வேண்டும்.

சினிமா என்பது கேளிக்கை சார்ந்த கலை என்பதால் சினிமா சம்பந்தப்பட்ட விழாக்கள் கேளிக்கை அம்சம் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது இயல்பானதுதான். ஆனால் இதற்காக மெய்யான திறமைகள் அங்கீகாரம் பெறாமல் போகின்றனவே என்பதுதான் சினிமாவை நேசிப்பவர்களின் ஆதங்கம்.

விழாவுக்கு வசீகரம் கூட்ட நட்சத்திரங்கள் தேவைதான். அதற்கு மக்கள் விருது, பாப்புலர் விருது, மக்கள் மனம் கவர்ந்த கலைஞர் விருது போன்ற வகைகளைக் கூட்டிக்கொள்ளலாம்.

விருது என்பது பண்டம் அல்ல. ஒரு மாணவனுக்குக் கிடைக்கும் தகுதிச் சான்றிதழ்போல. கலைஞர்களின் கடின உழைப்புக்கான பரிசு. திறமைக்கான அங்கீகாரம்.

அந்தத் திறமையையும் உழைப்பையும் அடுத்த நிலைக்கு எடுத்து செல்வதற்கான ஊக்குவிப்பு. விருதுகளின் மீதான ஆர்வம் நல்ல கலைஞர்களின் ஏக்கமாக இருக்க வேண்டும்.

தகுதியானவர்களுக்கு வழங்கப்படும் விருது அதனைப் பெறுபவர்களுக்கு மட்டுமே பெருமை இல்லை; கொடுப்பவர்களுக்கும் சேர்த்துதான். விருது வழங்குபவர்கள் இதை மனதில் கொண்டு செயல்பட்டால் விருதுகளுக்கான மரியாதை பெருமளவில் கூடிவிடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 min ago

தமிழகம்

15 mins ago

விளையாட்டு

8 mins ago

தமிழகம்

19 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

52 mins ago

உலகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்