திரைப் பார்வை: காட்சி முதல் கட்சி வரை - என்.டி.ஆர் கதாநாயக்குடு (தெலுங்கு)

By டோட்டோ

வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு சூப்பர் ஸ்டார்கள். ஸ்மார்ட் போன், செயலிகளின் காலம் என்றாலும் இவர்கள் திரையில் தோன்றும்போது கற்பூர ஆரத்தி காட்டி, தேங்காய் உடைத்து வழிபடப் பெருங்கூட்டம் காத்திருக்கிறது. அரிதாரம் பூசிய அவதாரமாக, காலண்டர் தொடங்கி கடவுளின் உருவமாக வணங்கப்பட்டதொரு தென்னிந்திய நட்சத்திரம் என்.டி.ஆர். 288 திரைப்படங்களில் நடிப்பு, சில படங்களுக்குக் கதை, திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு எனக் கிட்டத்தட்ட 44 வருடங்கள் தெலுங்குத் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர்.

அரசியல் கட்சி தொடங்கி வெறும் ஒன்பது மாதங்களில் ஆட்சியைப் பிடித்தது மட்டுமல்லாமல், மூன்று முறை ஆந்திர மாநிலத்தை ஆண்டிருக்கிறார். அவரது திரை வாழ்வு முதல் கட்சி தொடங்கியது வரையில்பேசும் முதல்பகுதி தான் – ‘என்.டி.ஆர். கதாநாயக்குடு’ திரைப்படம். ஆந்திராவின் முதல்வராக இவரது அரசியல் வாழ்வைப் பேசி இருக்கிறது அடுத்து வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ‘மகாநாயக்குடு’.

சொதப்பிய இயக்குநர்

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் ஒரு பழைய போட்டோ ஆல்பம் பார்ப்பதில் தொடங்குகிறது கதை. அரசுப் பணியிலிருந்து விலகி, ஆசைப்பட்ட சினிமாவுக்குள் நுழைகிறார் இளைஞர் என்.டி.ஆர். அங்கே ராமர் முதல் ராவணன்வரை தன்னால் செய்ய முடியாது என்று சொல்லப்பட்ட அத்தனை கதாபாத்திரங்களிலும் ஜொலிக்கிறார்.

திரைவாழ்வுக்கு இணையாக என்.டி.ஆரின் பொதுவாழ்வும் தொடங்கிவிடுவதைக் காட்சிகள் சொல்லிச் செல்கின்றன. மொழிப்பற்று, மாநிலப்பற்று, மக்கள் சேவை, நிதியுதவியில் தொடங்கி, தெலுங்கு தேசம் என்ற அரசியல் கட்சியை அறிவிப்பது வரையில் விரிந்துசெல்கிறது இந்த முதல்பாகம்.

கற்பனையான தனிமனிதரோ வாழ்ந்த பிரபலமோ பயோபிக் வகைத் திரைப்படத்துக்கான, திரைக்கதைக்கான முதல் தேவை கச்சிதம். கற்பனையே ஆனாலும், வேலு நாயக்கரின் கதை மிகச்சிறந்த உதாரணம். மற்றொன்று, ’மகாநடி’யாக வெளிவந்த சாவித்திரியின் கதை. அவமானங்கள், ஏற்றத்தாழ்வுகள், வலிகள், தோல்விகள், வெற்றி, கொண்டாட்டம் என ஒரு சாதாரணன், நட்சத்திரம் ஆகும் மாயம் நிகழ்ந்திருக்க வேண்டும்.

அரசுப் பணியிலிருந்து வந்த ராமா ராவ்  என்.டி.ஆர் ஆகும் வளர்ச்சி படிப்படியான ஏற்றமாகச் சொல்லப்படாமல், சற்றே அதிக புகழ்ச்சி வசனங்கள், ஒரு தொடக்கநிலை நடிகருக்குப் பெரிய இயக்குநர்கள் இறங்கி வருவது போன்ற நம்பகத்தன்மையற்ற, அழுத்தமில்லாத காட்சிகளாலும் வெகுசில நிகழ்வுகளின் தோரணங்களாலும் காட்டியிருக்கிறார் இயக்குநர் கிருஷ். ‘மகாநடி’ படத்துக்காகத் தேசிய விருது பெற்றவர்தான் இப்படிச் சொதப்பியிருக்கிறார்.

நடிகர் பாலகிருஷ்ணா முதன்முறையாக கிருஷ்ணர் வேடம் போட்டு என்.டி.ஆரை நம் கண்முன் கொண்டு வருகிறார். தான வீர சூர கர்ணனாக வருவது, எமர்ஜென்சி காலத்தில் தனது படத்தை வெளிவரச் செய்து, கம்பீரமாக வேட்டியை உதறி நடப்பது எனச் சில நல்ல கதாநாயகக் கணங்களில் கச்சிதமாகப் பொருந்திவிடுகிறார்.

சின்ன சின்ன அசைவுகளில் தொடங்கி இவரைத் தவிர வேறு யாரும் செய்ய முடியாது என்பதையும் மீறி, பல இடங்களில் என்.டி.ஆரின் பிம்பமாகவே உடலாலும் குரலாலும் முழுவதுமாக மாறி கைத்தட்டல் பெற்றுவிடுகிறார் பாலகிருஷ்ணா. அவருடைய மனைவியாக வரும் வித்யா பாலனுக்கு அதிக வேலையில்லை. பிரதான நடிகர்களின் நடிப்பு மட்டுமே ஒரு படத்தைக் காப்பாற்ற முடிவதில்லை.

என்.டி.ஆரின் தம்பியாக டக்குபாட்டி ராஜா (‘கருத்தம்மா’ பட நாயகன் ராஜா)], நாகேஸ்வர ராவாக சுமந்த், நாகி ரெட்டியாக பிரகாஷ்ராஜ், சந்திரபாபு நாயுடுவாக ராணா எனப் பலர் வந்து போகின்றனர். இசையமைப்பாளர் கீரவாணி டைட்டில் இசை, சில இடங்களில் பின்னணி இசையிலும் தான் இருப்பதை உறுதி செய்கிறார். ஆந்திர வெள்ளக்காட்சி, ஸ்டுடியோ காட்சிகள் என நிறைவாகச் செய்திருக்கிறதுஒளிப்பதிவாளர் ஞானசேகர் –கலை இயக்குநர் சாகி சுரேஷ் கூட்டணி.171 நிமிடங்கள் கொண்ட படத்தைச் செதுக்கி, சுவாரசியப்படுத்துவதில் பின் தங்கிவிட்டார் படத்தொகுப்பாளர் ராமகிருஷ்ணா.

ஒரு சூப்பர் ஸ்டாரின் திரைவாழ்வை முதன்மைப்படுத்த முனையும் படத்தில் அவர் நடித்த சில முக்கியப் படங்களின் நினைவுகள் படமாக்கப்பட்டதற்காக மட்டும் இந்தக் குழுவைப் பாராட்டலாம். மற்றபடி, தட்டையான, திரைப்படக் கணங்கள் இல்லாமல் அலுப்பூட்டும் ஒரு பயோ-பிக். 

தொடர்புக்கு: tottokv@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

இந்தியா

22 mins ago

ஆன்மிகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்