டிஜிட்டல் மேடை 07: ஓர் எதிர்பாராத பயணம்!

By எஸ்.எஸ்.லெனின்

ஒரிஜினல்ஸ் வரிசையில் யூட்யூப் வீடியோ தளமும் களமிறங்கி விட்டது. ஏ.ஆர்.ரஹ்மான், ஷாருக்கான் ஆகியோருடன் தனது முதல் இந்திய ‘ஒரிஜினல்ஸ்’ வெளியீட்டை அறிவித்திருக்கிறது யூட்யூப்.

சூப்பர் சிங்கர் பாணியிலான, இந்தியாவின் மிகப்பெரும் குரல் தேடலுக்கான இசை நிகழ்ச்சியாக ரஹ்மானின் ‘ARRived’ இருக்கும் என்கிறார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய நிகழ்ச்சிக்கான முன்னோட்டப் பாடல் வெளியிடப்பட்டது.

இந்திய இசையுலகின் புதிய அலையைப் பிரதிபலிக்கும் இளம் பிரபலங்களான ஷான், கிளின்டன் செரிஜோ, வித்யா வாக்ஸ் ஆகியோருடன் ரஹ்மானும் ஷாருக்கானும் பங்கேற்கிறார்கள். ரஹ்மானின் பிரத்யேக யூட்யூப் பக்கத்தில் நவம்பர் 7 முதல் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணத்தில் கிடைக்கும் பாசம்

மிகச் சாதாரணமாக இணையத்தில் வெளியாகும் திரைப்படங்களில் பலவும், கணிப்புகளைப் பொய்யாக்கி பெரும் வரவேற்பைப் பெறுவதுண்டு. அந்த வகையில் நெட்ஃபிளிக்ஸ் தனது பிரத்யேகப் படங்களின் வரிசையில் ஆகஸ்டில் வெளியிட்ட ‘லைக் ஃபாதர்’ திரைப்படமும் சேர்ந்துள்ளது.

தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பாசப் போராட்டத்தை கதையின் அடிநாதமாகக் கொண்டு, உலகின் பல்வேறு நாடுகளிலும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது ‘லைக் ஃபாதர்’. ஆகஸ்ட்டில் நூற்றுக்கும் மேலான நாடுகளில் இந்தத் திரைப்படம் வெளியாகிய 2 வாரங்களில் மட்டுமே ஒரு கோடிக்கும் மேலான சந்தாதாரர்கள் படத்தை ரசித்தனர்.

‘தேனிலவு பயணம் செல்லும் அப்பா-மகள்’ என்ற ஒரு வரியை எடுத்துக்கொண்டு சுவாரசியமான திரைக்கதையைப் பின்னியிருக்கிறார்கள். சதா வேலையைக் கட்டிக்கொண்டு பரபரவென உலாத்தும் நாயகியின் இந்த சுபாவமே அவரது திருமணத்துக்கு வேட்டு வைக்கிறது. திருமண மேடையில் வைத்து மணமகன் மறுப்பு சொல்ல, அவள் அவமானமடைகிறாள்.

அந்த அவமானச் சூழலில் அவளை 5 வயதில் பரிதவிக்கவிட்டு விலகிச் சென்ற அப்பாவைத் திருமண விருந்தினர் மத்தியில் சந்திக்க நேரிடுவது, அவளை அதிகம் பாதிக்கிறது. அந்தத் தந்தை மகளைத் தேற்ற முயல்கிறார். ஆனால் அப்பாவை மனதார வெறுக்கும் அவளோ எரிச்சலடைகிறாள்.

இதற்கிடையே திருமணம் முடித்து கரீபியன் கடலில் தேனிலவை கழிப்பதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட உல்லாச குரூஸ் கப்பலில் அப்பாவும் பெண்ணும் தவிர்க்கவியலாது பயணிக்க வேண்டியதாகிறது. உடன் வரும் ஏராளமான தம்பதியர் மற்றும் அவர்களின் வித்தியாசமான அனுபவங்கள் மத்தியில் தந்தையும் மகளும் பயணத்தை தொடருகின்றனர்.

பயணத்தின் போக்கில் ஒரு கட்டத்தில் தந்தையைப் புரிந்துகொண்டு அவரது பாசத்தை உணரும் சந்தர்ப்பத்தில் அப்பா குறித்த இன்னொரு அதிர்ச்சிகரமான தகவல் மகளுக்குக் கிடைக்கிறது. மறுபடியும் அப்பாவுடன் மகள் முட்டிக்கொள்வதும் அந்தச் சண்டையின் போக்கில் தொடரும் திருப்பங்களுமாகப் படம் செல்கிறது.

அப்பா- மகள் பாசம் என்ற ஒரு இழையை வைத்துக்கொண்டு எந்த நாட்டில் வாழ்பவரையும் ரசிக்க வைக்கும் வகையில் படமெடுத்துள்ளனர். அதிலும் அப்பாவாக வரும் கெல்ஸி கிராமர் கண்கலங்க வைக்கிறார். நடிகையும் கதாசியருமான லாரன் மிலர் ரோகன் படத்தின் நெருடலான காட்சிகளைக்கூட தனது இயக்கத்தில் லாகவமாகக் கையாண்டுள்ளார். படம் நெடுக இழையோடும் நகைச்சுவையும் அதன் வெற்றிக்கு ஒரு காரணம்.

குடும்ப அமைப்பு சிதறிப்போன நாடுகளிலும் உறவுகளுக்கு மத்தியில் இன்னமும் ஈரத்துடன் காத்திருக்கும் பாச உணர்வும் அது தரும் நெகிழ்ச்சியும் சுவாரசியம் தருகின்றன.

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்