அகிம்சையைக் கண்டடைந்த கலைஞன்: ரிச்சர்டு அட்டன்பரோ மறைவு

By ஜெய்

பிறப்பு: 29.08.1923 / இறப்பு: 24.08.2014

‘ரிச்சர்டு அட்டன்பரோ’1940களில் இங்கிலாந்தில் மிகப் பிரபலமாக உச்சரிக்கப்பட்ட பெயர். 1947-ல் வெளிவந்த ‘ப்ரிக்டன் ராக்’ (Brighton Rock) என்ற திரைப்படத்தில் பிங்கி பிரவுன் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்தார். குழந்தை முகம்கொண்ட கொலைகார கதாபாத்திரம் அது. இந்தப் படம் இங்கிலாந்து திரையரங்குகளில் பெரும் கைத்தட்டல்களை அள்ளியது. ரிச்சர்டு அட்டன்பரோ ‘பிங்கி’என்ற பெயராலேயே அறியப்பட்டார். அதற்கு முன்பே அவர் சில படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படமே அவருக்கு அடையாளத்தைப் பெற்றுத்தந்தது. இந்த வெற்றியால் 40களின் இறுதியில் இருந்து 50களின் தொடக்கம்வரை இங்கிலாந்து திரையுலகில் ரிச்சர்டு அட்டன்பரோவின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது. தொடர்ந்து அவரது நடிப்பில் வெளிவந்த ‘டான்சிங் வித் க்ரைம், ‘த மேன் வித்இன்’ போன்ற படங்களும் அவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தன. அந்தக் காலகட்டத்தில் அவருக்கு வந்த அனைத்து வாய்ப்புகளும் ‘பிங்கி’ கதாபாத்திரத்தைப் போலவே இருந்தன. அந்த அளவுக்கு அட்டன்பரோவின் ‘பிங்கி’ கதாபாத்திர நடிப்பு இங்கிலாந்து மக்களிடம் அடுத்த பத்தாண்டுகளுக்குச் செல்வாக்கு செலுத்தியது.

ராயல் அகாடமியின் மாணவர்

தொடர் வெற்றிகள் அட்டன்பரோவுக்கு ஹாலிவுட் வாய்ப்புகளைப் பெற்றுத்தந்தன. அவரது முதல் ஹாலிவுட் படமான ‘தி கிரேட் எஸ்கேப்’(The Great Escape) அவர் அதுவரை அடைந்த வெற்றிகளையெல்லாம் முறியடித்துச் சாதனை படைத்தது. ஹாலிவுட் என்ற திரைப்பரப்பைத் தாண்டி, இந்திய இயக்குநர்களான சத்யஜித் ராயின் ‘சத்ராஞ்ச் கே கிலாரி’ படத்திலும் சேகர் கபூரின் ‘எலிசபெத்’ படத்திலும் அட்டன்பரோ தன் சிறப்பான நடிப்பை நல்கியுள்ளார்.

காந்தி, சார்லி சாப்ளின் ஆகியோர்களின் வாழ்க்கை வரலாற்றைத் திரையில் செதுக்கிய ரிச்சர்டு அட்டன்பரோ இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் பிறந்தார். அவரது நடிப்புப் பயணம் 1943-ல் தொடங்கியது. இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து ராயல் விமானப் படையில் பணியாற்றிய அட்டன்பரோ, அதன் திரைப் பிரிவில் பணிக்கு அமர்த்தப்பட்டார். அவர் நடிப்புக் கலைக்கான ராயல் அகாடமியில் (Royal Academy of Dramatic Art) கல்வி பயின்றிருந்ததால் இந்த வாய்ப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. விமானப் படை தொடர்பான விஷயங்களை ஆவணப்படுத்துவதற்காக இந்தத் திரைப் பிரிவு தொடங்கப்பட்டது. பைன்வுட் ஸ்டுடியோவில் இயங்கிய ராயல் விமானப் படை திரைப் பிரிவில் அட்டன்பரோ சில காலம் பணியாற்றினார். அப்போது திரைக் குழுவினருடன் பல இடங்களுக்கு விமானத்தில் பறந்து படமாக்குவதில் உதவினார். இந்த அனுபவம்தான் அவரைப் பின்னாளில் உலகின் மிகப் பெரிய இயக்குநராகப் புகழ்பெற அடித்தளம் அமைத்துக்கொடுத்தது.

போர்கள் மீதான பார்வை

நடிகராக வெற்றிபெற்ற அட்டன்பரோ 1950களில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கித் தயாரிப்பாளராகப் புதிய அவதாரம் எடுத்தார். தொடர்ந்து ‘தி லீக் ஆஃப் ஜென்டில்மேன்’(The League of Gentlemen) என்ற படத்தை 1959-ம் ஆண்டு தயாரித்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் ‘தி ஆங்ரி சைலென்ஸ்’(1960), ‘விசில் டவுண் த விண்ட்’(1961) ஆகிய இரு படங்களைத் தயாரித்தார். பிறகு சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 1969-ம் ஆண்டு ‘ஓ! வாட் ஏ லைவ்லி வார்’ (Oh! What a Lovely War) என்ற படத்தைத் தயாரித்து இயக்கினார். ரிச்சர்டு அட்டன்பரோ இயக்கிய முதல் படம் இதுதான். முதல் உலகப் போரில் பிரிட்டிஷ் வீரர்கள் பாடிய பாடல்களைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் போர்களை மறுபார்வைக்கு உட்படுத்தியது. விமர்சன ரீதியாக மிக அதிக விவாதங்களை இந்தப் படம் கிளப்பியது. இதில் அட்டன்பரோ பயன்படுத்திய குளோஸ்-அப், கேமரா இடம் - வலம் மெதுவாக நகரும் பான் காட்சிகளும் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் படங்களுக்கு ஆதாரமாக அமைந்தன என உலகத் திரை விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானியப் படைகள் மீது இங்கிலாந்து விமானப் படை மேற்கொண்ட தாக்குதல் திட்டமான மார்கெட் கார்டனின் (Operation Market Garden) தோல்வியைக் குறித்து அட்டன்பரோ இயக்கிய ‘ஏ பிரிட்ஜ் டூ ஃபார்’ (A Bridge Too Far) என்ற படம் உலக அளவிலான கவனத்தை ஈர்த்தது. இதற்கிடையில் 1972-ல் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சிலின் சுயசரிதையை அடிப்படையாகக்கொண்டு ‘யங் வின்ஸ்டன்’(Young Winston) என்ற படத்தையும் இயக்கினார். உலகெங்கிலும் பல திரை விழாக்களில் அட்டன்பரோவுக்கு விருதுகளைப் பெற்றுத்தந்த ‘காந்தி’திரைப்படத்தை 1982-ல் இயக்கினார். மகாத்மா காந்தியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்ளிட்ட எட்டு விருதுகளை வாங்கிக் குவித்தது. போர்களை விமர்சனத்திற்கு உள்ளாக்கிய அட்டன்பரோ, அஹிம்சையின் அடையாளமான காந்தியை நோக்கி நகர்ந்ததில் வியப்பேதும் இல்லை.

“காந்தி படம் அவர் உலகுக்கு அளித்த பரிசு. ஜான் ஹம்மான் பாத்திரத்தின் மூலம் டைனோசர்களைத் தன் பின்னால் வரவழைத்த உண்மையான ரிங் மாஸ்டர் அவர்தான்” என ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தியுள்ளார். ஸ்பீல்பெர்க்கின் ‘ஜூராசிக் பார்க்’படத்தில் டைனோசர்களைத் திரும்ப உருவாக்கும் விஞ்ஞானியாக நடித்தவர் அட்டன்பரோதான்.

பலதரப்பட்ட படங்களை இயக்கியிருந்தாலும் வாழ்க்கை வரலாற்றுப் படங்களின் இயக்குநர் என்றே அவர் பெயர் வாங்கியிருக்கிறார். நேர்காணல் ஒன்றில் தனக்கு அவ்வகைப் படங்களை இயக்குவதில் ஆர்வம் இருப்பதாகவும் கூறியுள்ளார். திரைப்படங்களை உருவாக்குவதையே தன் வாழ்நாளின் முக்கியமான விஷயம் எனக் கூறிய அட்டன்பரோ தன் படங்களின் மூலம் உலகம் முழுவதும் கோடிக் கணக்கான மக்களிடம் உணர்வுபூர்வமான நெருக்கத்தை ஏற்படுத்தியவர். பல்வேறு இன, மொழி பேதங்களுக்கு அப்பாற்பட்டு பாரத மக்களை ‘இந்திய விடுதலை’ என்னும் ஒரு குடையின் கீழ் திரட்டிய காந்தியின் செயலுக்கு ஒப்பானது இது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்