திரைப்பள்ளி 23: நீங்களும் ஒரு பொறியாளர்!

By ஆர்.சி.ஜெயந்தன்

சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்பவர், தான் பிறந்து வளர்ந்த நிலப்பரப்பின் கலாச்சார அடையாளங்களைக் கதையிலும் காட்சிகளிலும் பிரதிபலிக்கத் தயங்க மாட்டார் என்பதைக் கடந்த வகுப்பில் கண்டோம். அதேபோல எவையெல்லாம் கலாச்சார அடையாளங்கள் என்பதையும் தெரிந்துகொண்டோம். இந்த அத்தியாயத்தில், திரைக்கதை ஒன்றை எழுதிப் பயிற்சியைத் தொடங்கும் முன், சினிமா தொழில் சார்ந்த சில நடப்புகளை அறிந்துகொண்டு எழுதத் தொடங்குவது எவ்வளவு முக்கியம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

வீடும் திரைக்கதையும்

புதிதாக வீடு கட்டுகிறீர்கள், அதற்கு முதல் தேவை நிலம். அதைக் கதையின் கரு; அதாவது ‘ஸ்டோரி அவுட்லைன்’ என்று வைத்துக்கொள்ளுங்கள். அடுத்து? செங்கல், மணல், கம்பி என்று நினைக்கலாம். அதுதான் இல்லை.

வீட்டின் வரைபடம் தேவை. அப்போதுதான் வீட்டில் எத்தனை அறைகள், ஒரு தளமா, இரு தளங்களா, நடுக்கூடத்தின் அளவு, எத்தனை குளியல் மற்றும் கழிவறைகள், சமையலறை, மாடிப்படி எந்தப் பக்கம் வரவேண்டும், காண்போரை ஈர்க்கும்விதமாக வீட்டின் முகப்பை (திரைக்கதையின் தொடக்கம்) எப்படி அமைப்பது என அத்தனையும் உங்கள் இன்ஜினீயர் வரைந்துதரும் அந்த வரைபடத்தில் இருக்குமல்லவா? வரைபடத்தை அடிப்படையாக வைத்துதான் கட்டிடத்தை எழுப்பும் மேஸ்திரி அஸ்திவாரம் தோண்டுவார்.

கட்டிடத்தின் உயரத்தை வைத்து அஸ்திவாரத்தின் ஆழத்தை அவர் முடிவு செய்கிறார். வரைபடத்தில் இருக்கும் அளவுகளைப் பார்த்து, கொத்தனார் சுவர்களை எழுப்பத் தொடங்குகிறார். வீட்டின் வரைபடத்தை வைத்துதான் அந்த வீட்டுக்குத் தேவைப்படும் கம்பிகளின் அளவு, மின்சார வயர் தொடங்கி ஒவ்வொன்றையும் முடிவு செய்கிறார்கள்.

வீட்டின் வரைபடத்தைத் திறமையான சிவில் இன்ஜினீயர் வரைந்துகொடுத்துவிட்டுப் பல நேரம் விலகிவிடுகிறார். அதன்பிறகு அந்த வரைபடத்தைக் கொண்டுதான் கட்டிடத்தை எழுப்புகிறார்கள். வரைந்த இன்ஜினீயர் அருகில் இல்லாவிட்டாலும் கட்டுமானக் கலைஞர்களுக்கு எளிதில் புரியும்விதமாகப் படம் வரைந்து பாகம் குறிக்கப்பட்டிருக்கும் வரைபடமே வீட்டைக் கட்டப் போதுமானதாக இருக்கிறது.

வழிகாட்டும் ஆவணம்

ஒரு திரைக்கதையும் வீட்டின் வரைபடம் போன்றதே. திரைக்கதாசிரியரும் ஒரு திறமையான பொறியாளர் போன்றவர்தான். ஒரு திரைக்கதை எழுதி முடிக்கப்பட்டுவிட்டது என்றால், அதைப் படமாக்க அந்தத் திரைக்கதாசிரியர் படப்பிடிப்பில் இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

ஏனென்றால், திரைக்கதை என்பது படத்தை இயக்கும் இயக்குநர், அதில் நடிக்கும் நடிகர்கள், செட்களை நிர்மானிக்கும் கலை இயக்குநர், கதாபாத்திரங்களுக்கான ஆடைகளை உருவாக்குபவர், ஒளிப்பதிவு செய்யும் கேமராமேன், ரெக்கார்டிஸ்ட், எடிட்டர், இசையமைப்பாளர் வரை படக்குழுவின் முக்கியத் தொழில்நுட்பக் கலைஞர்கள் அத்தனை பேருக்கும் எளிதில் புரிந்து வழிகாட்டும் ஆவணமாக இருக்க வேண்டும்.

நீங்கள் எழுதிய திரைக்கதையை அதற்குரிய விலையைக் கொடுத்துப் பெற்றுக்கொள்ளும் ஒரு இயக்குநர் அல்லது தயாரிப்பாளர், அதைப் படமாக்க முன்வந்துவிட்டார் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் திரைக்கதையில் எத்தனை கதாபாத்திரங்கள், அவை எப்படிப்பட்டவை, அவற்றுக்கு என்ன நடக்கிறது, அவை எப்படி நடந்துகொள்கின்றன என்பதை நீங்கள் ஒவ்வொரு காட்சியாக விளக்கிக்கொண்டே வந்திருப்பீர்கள்.

இப்படியான விரிவான காட்சி விளக்கமே கதாபாத்திரத்தின் தோற்றத்தை நிர்ணயிக்க இயக்குநருக்கு உதவுகிறது. உங்கள் திரைக்கதையைப் படித்துப் பார்க்கும் நடிகர், அவர் ஏற்கும் கதாபாத்திரத்தின் உணர்ச்சியைத் தனக்குள் கடத்துகிறார். அந்தக் கதாபாத்திரத்துக்கான உடல்மொழியை முடிவுசெய்து, அதை நடிப்பில் வெளிப்படுத்துகிறார். கலை இயக்குநர் காட்சியில் விளக்கப்பட்டிருக்கும் இடம், இண்டோர் என்றால் அது வீடா, அலுவலகமா அல்லது வேறு ஒரு இடமா என்பதை அறிந்து அங்கே அரங்கப் பொருட்களை இடம்பெறச் செய்கிறார்.

ஒளிப்பதிவாளர், காட்சி நடப்பது இண்டோரா-அவுட்டோரா என்பதைத் திரைக்கதையைப் படித்தே அறிந்துகொள்கிறார். உட்புறக் காட்சி என்றால் அந்தக் குறிப்பிட்ட காட்சியில் கதாபாத்திரத்தின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதைப் பொறுத்து அந்தக் காட்சிக்கான ஒளியமைப்பை (Lighting) முடிவு செய்கிறார்.

ஒரு காட்சியை எந்த அளவுடன் எழுத்தாளர் நிறுத்தியிருக்கிறார் என்பதைத் திரைக்கதையைப் படித்தே எடிட்டர் உணர்ந்துகொள்கிறார். அதை இயக்குநர் எவ்வாறு, காட்சிப்படுத்தியிருக்கிறார் என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார். அதன்பிறகே அடுத்தடுத்த காட்சிகளை நோக்கி கதை நகர்வதற்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு காட்சியின் நீளம் எவ்வளவ இருக்க வேண்டும், எந்த இடத்தில் கத்தரிக்க வேண்டும் என்பதை முடிவுசெய்கிறார்.

இப்படிப் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்கும் கூட்டுப் பங்களிப்பு கொண்ட கலையாகத் திரைப்பட உருவாக்கம் இருப்பதால், அதற்கு அடிப்படையான வழிகாட்டி வரைபடமாக இருப்பது காட்சிகளாக விவரிக்கப்பட்டிருக்கும் திரைக்கதைதான்.

அடிப்படையான அளவுகோல்கள்

இந்த இடத்தில் திரைக்கதை எழுத்தாளர் ஒன்றை எப்போதுமே மறந்துவிடுவதில்லை. திரைப்பட உருவாக்கம் என்பது ஒரு காட்சிக் கலை (Visual medium), எனவே, திரைக்கதையில் நிகழும் அனைத்தையும் அவர் காட்சியின் வடிவில், ஆனால் எழுத்தில் விவரித்துக் காட்டுகிறார். ஒரு திரைப்பட உருவாக்கத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு அவர் தனது திரைக்கதை வழியே கதையைச் சொல்வதில்லை, எழுத்துகள் வழியே காட்சிகளாகக்

காட்டுகிறார். திரைக்கதை எழுத்தாளர் தனது கதாபாத்திரங்கள் என்ன நினைக்கின்றன என்பதைக் காட்சியாக எழுதுகிறார். இந்தக் காட்சிகள்தாம் ‘ஸ்டோரி போர்டு’ ஓவியரின் கைவண்ணத்தில் உருவாகின்றன. இந்தக் காட்சிகள்தான் எந்த மாதிரியான ‘செட்’ தேவை என்பதை முடிவு செய்கின்றன. எப்படிப்பட்ட நடிகர்கள் தேவை என்பதை

முடிவு செய்ய வைக்கின்றன. காட்சிகளால் நிறைந்திருக்கும் உங்கள் திரைக்கதை, ஒரு படக்குழுவுக்கு முழுமையான வழிகாட்டியாக மாறுவதால் திரைக்கதையை எழுத சில அடிப்படையான அளவுகோல்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம். அதில் முக்கியமானது உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் திரைக்கதையின் ‘ரைட்டிங் ஃபார்மேட்’.

ஒரு திரைக்கதை எத்தனை பக்கங்களுக்குள் இருக்க வேண்டும், காட்சி நடப்பது இரவிலா, பகலிலா, கேமராவின் நகர்வு என்ன, காட்சியின் கோணம் என்ன என்பதில் தொடங்கி காட்சியில் நடக்கும் ‘ஆக்‌ஷ’னை எப்படி விவரித்து எழுதுவது என்பதுவரை நீங்கள் பின்பற்றியே தீரவேண்டிய அளவுகோல்களை அடுத்த அத்தியாயத்தில் தெரிந்துகொண்டு வேலையைத் தொடங்குவோம்.

தொடர்புக்கு:jesudoss.c@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

தமிழகம்

12 mins ago

சினிமா

18 mins ago

கருத்துப் பேழை

8 mins ago

தமிழகம்

33 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்