ராக யாத்திரை 07: மாரியம்மனும் மரிக்கொழுந்தும்

By டாக்டர் ஜி.ராமானுஜன்

 

மு

தலில் சென்றவாரக் கேள்வியோடு ஆரம்பிப்போம். கல்கியின் கதாநாயகி என்றதும் பலரும் சிவகாமி என யூகித்துவிட்டனர். ஆனால் ‘சிவகாமி மகனிடம்’, ‘சிவகாமி ஆடவந்தாள்’ எனப் பல்வேறு மாயாமாளவ கௌளையில் அமைந்த ‘சிவகாமி’ எனத் தொடங்கும் பாடல்களில் 'கிளிப்பேச்சுக் கேட்கவா'(1993) படத்தில் வரும் 'சிவகாமி நெனைப்பினிலே' என்ற பாடல்தான் அது. முதலில் சரியாகச் சொன்ன ஸ்ரீராம் மற்றும் சேலம் வெங்கடேசனுக்குப் பாராட்டுக்கள்.

எப்படியும் வளைக்கலாம்

இளையராஜாவின் ஆர்மோனியம் ஃபாசிலைக் கண்டதும் குஷியாகி மெட்டிசைக்கும். அப்படி ஒரு பாடல்தான் 'சிவகாமி நெனைப்பினிலே'. மா.மா கௌளையை 360 டிகிரி எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம் எனக் காட்டியவர் இசைஞானி. அசத்தலான நாட்டுப்புற மெட்டில் இந்தப் பாடலை அமைத்திருப்பார். எஸ்.பி.பி ஜானகி குரல்களில்.

கிராமிய மெட்டுகளுக்குள்ளே ஒளிந்து கிடக்கும் சங்கதிகளை வெளியே கொண்டுவந்து, செவ்வியல் இசை என்பது மக்களின் இசையிலிருந்து தோன்றியதே என்பதை நிரூபித்துக் காட்டும் ராஜாவின் ஆயுதங்களில் முக்கியமானது மாயா மாளவ கௌளை. அப்படி அமைந்த ஒரு அட்டகாசமான பாடல்தான் 'எங்க ஊரு பாட்டுக்காரன்'(1987) திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மதுரை மரிக்கொழுந்து வாசம்’ என்னும் பாடல். ராமராஜன் என்னும் நடிகரை கிராமராஜனாக ஆக்கி, வெற்றிப்பட ஹீரோவாகவும் ஆக்கிய படம். மனோ- சித்ரா குரல்களில் ஒலிக்கும் அற்புதமான பாடல். ‘ஜெகதேவவீருடு அதிலோக சுந்தரி’ என்னும் தெலுங்குப் படத்தில் ‘யமஹோ நீ யமா யமா’ என அக்கட தேசத்திலும் அபார ஹிட்டான மெட்டானது.

கிராமிய வாசம்

1989-ம் ஆண்டு நெல்லையில் எங்கள் வீட்டுக்கு அருகே இருந்த ‘பேரின்ப விலாஸ்’ திரையரங்கில் ஒரு திரைப்படம் வெளியானது. வெளியான தொடக்கத்தில் அந்தப்படத்தின் நாயகன் ராமராஜன் ஓட்டும் கார் போல் மெதுவாக ஓடிய படம், பின்னர் வேகம்பிடித்து மைக்கேல் ஷூமேக்கரின் ரேஸ் கார் போல் ஓடியது. அந்தப் படம் ‘கரகாட்டக்காரன்’. அப்படத்தின் பாடல் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் ‘மாரியம்மா மாரியம்மா’ என்னும் பாடல். மலேஷியா வாசுதேவன் சித்ராவுடன் இணைந்து ஹை-பிட்ச்சில் வெளுத்துக் கட்டியிருப்பார். அதுவும் மாயா மாளவ கௌளைதான். பாடல்களெல்லாம் சூப்பர் ஹிட்டான இன்னொரு படம் ‘சின்னத்தாயி’. அதில் ஒரு அருமையான பாடலை இந்த ராகத்தில் அமைத்திருப்பார். அதுதான் 'கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும்' என்ற பாடல்.

சோகத்திலும் சாதனை

கிராமிய மெட்டுக்கள் போன்றே சோக மெட்டுக்களுக்கும் இந்த ராகத்தை இசைஞானி ஏராளமான படங்களில் பயன்படுத்தியுள்ளார். ‘அரண்மனைக் கிளி’யில் ‘என் தாயென்னும் கோவிலை’, ‘சின்னத்தம்பி’யில் ‘குயிலைப்பிடிச்சி கூண்டிலடைச்சி’, ‘கோயில் காளை’யில் ‘தாயுண்டு தந்தையுண்டு’, ‘பணக்கார’னில் ‘உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி’ ‘குணா’வில் ‘அப்பனென்றும் அம்மையென்றும்’ எனத் தினமும் பல் தேய்ப்பதுபோல் சுலபமாகப் பல பாடல்களை இந்த ராகத்தில் சோக சாதனை படைத்திருக்கிறார்.

மறக்கமுடியாத பாடல்கள்

இந்த ராகத்தில் அமைந்த எல்லாப் பாடல்களையும் குறிப்பிடுவது இயலாத காரியம். ஆனால் விட்டுப்போன சில பாடல்களை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ‘முடிவல்ல ஆரம்பம்’ என்ற படத்தில் வரும் 'தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்' என்ற பாடல். மலேஷியா வாசுதேவன் - சுசீலாவின் குரலில் ஒரு இனிய மெட்டு. ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் இரண்டு அருமையான பாடல்கள் இந்த ராகத்தில் அமைந்திருக்கும். ஒன்று 'மனதில் உறுதி வேண்டும்' என்ற டைட்டில் பாடல் யேசுதாஸின் குரலில்.

இன்னொன்று ‘கண்ணின் மணியே கண்ணின் மணியே' என சித்ராவின் குரலில். இரண்டுமே மனஉறுதி, கம்பீரத்தை வெளிப்படுத்தும் பாடல்கள். இந்த ராகத்துக்கே உரிய குணங்கள் இவை. ‘சின்ன ஜமீன்’ படத்தில் வரும் ‘ஒனப்புத்தட்டு புல்லாக்கு’(ஒனப்புத்தட்டு என்றால் என்ன, தெரிந்தவர் கூறுங்கள்), ‘உடன்பிறப்பு’ படத்தில் வரும் ‘நன்றி சொல்லவே உனக்கு’ என்பனவும் குறிப்பிடத்தக்க பாடல்கள்.

பிற்காலப் படங்களில் வித்தியாசமாக ‘அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்’ என்ற பாடல் ‘சந்திரலேகா’(1995) என்ற படத்தில் இந்த ராகத்தில் அமைந்திருக்கும். பாடல்கள் இல்லாததால் அல்ல, இடம் இல்லாததால் இத்துடன் ராஜாவின் இந்த ராகப் படைப்புகளை நிறுத்திக் கொள்வோம்.

புலியின் தம்பி பூனையாகாது என்பதுபோல் கங்கை அமரனும் இந்த ராகத்தில் அருமையான இரண்டு பாடல்கள் அமைத்திருக்கிறார். ஒன்று ‘மௌனகீதங்கள்’ படத்தில் வரும் 'மூக்குத்திப் பூ மேலே' என்னும் பாடல். இன்னொன்று ‘இமைகள்’(1983) படத்தில் வரும் ‘மாடப்புறாவோ’ என்னும் பாடல். டி.எம்.எஸ்ஸுக்குப் பின் மலேஷியா வாசுதேவன் சிவாஜிக்கு பாடத்தொடங்கிய காலம்.

இனிமை சேர்த்த ஏனையோர்

எல். நரசிம்மன் இசையில் ‘கண்சிமிட்டும் நேரம்’ படத்தில் இடம்பெற்ற ‘விழிகளில் கோடி அதிசயம்’, சங்கர் கணேஷ் இசையில் ‘திருமதி ஒரு வெகுமதி’ படத்தில் ‘பார்த்துச் சிரிக்குது பொம்மை’, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘அல்லி அர்ஜுனா’ படத்தில் ‘சொல்லாயோ சோலைக்கிளி’ எனப் பிற இசையமைப்பாளர்களும் இந்த ராகத்தை இனிமையாகப் பயன்படுத்தியிருப்பார்கள்.

இத்துடன் மாயா மாளவ கௌளைக்கு மங்களம் பாடிவிட்டு, கேள்வியோடு அடுத்த ராகத்துக்குப் போவோம். ‘வேலாலே விழிகள்’ என்னும் க்ளாசிக் பாடல். படம்? ராகம்?

தொடர்புக்கு: ramsych2@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

3 mins ago

க்ரைம்

9 mins ago

க்ரைம்

18 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்