ரஜினி ரசிகர்களின் ஆதங்கமும்.. எதிர்பார்ப்பும்...எப்படி இருந்திருக்கலாம் காலா

By செய்திப்பிரிவு

ரா

ஜசேகர் இயக்கத்தில் 1986 நவம்பர் 1-ம் தேதி வெளியான படம் ரஜினியின் ‘மாவீரன்’. மானசீக ஹீரோவாக மனதுக்குள் வைத்து ஆராதித்து வந்த ரசிகர்களை முதல்முறையாக பாலாபிஷேகம், போஸ்டர், 110 அடி உயர பிரம்மாண்ட கட்-கவுட் என வீதியில் களமிறங்க வைத்த படம். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. ஒன்று, ரஜினியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஆர்.கே.புரொடெக்சன்’ சார்பில் வெளியான முதல் படம். மற்றொன்று, அதே நாளில் வெளியான கமல்ஹாசனின் ‘புன்னகை மன்னன்’ திரைப்படம். திருச்சி மாரீஸ் திரையரங்கில் யானை மீது படப்பெட்டியை வைத்து ஊர்வலம் நடத்தி அதிரவைத்தனர் ரஜினி வெறியர்கள்.

அதற்குப் பிறகு, ‘ரஜினி படம்’ என்பது ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்கள் மத்தியிலும் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிற, அந்த எதிர்பார்ப்புக்கு மேலாக பூர்த்திசெய்கிற அம்சமாகிவிட்டது. மாநில, தேச எல்லையைத் தாண்டியும் வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கியது. வசூல் சற்று கூடக் குறைய இருந்தாலும், ‘ரஜினி பட ரிலீஸ்’ என்பது ஒரு திருவிழா போல நடப்பது இப்போதுவரை தொடர்கிறது.

இந்த சூழலில், வழக்கம் போல எதிர்பார்ப்புக்கு நடுவே ரிலீஸான ‘காலா’ திரைப்படம் வெளியாகி 10 நாட்கள் கடந்தாகிவிட்டது. பொதுவாக, ரஜினி படம் ரிலீஸானால், குறைந்தபட்சம் 3 வார இடைவெளிக்குப் பிறகுதான், அடுத்த படங்கள் வெளியாகும். ஆனால் ’காலா’ வெளியான அடுத்த வாரமே (8-வது நாளில்) ‘கோலிசோடா 2’ திரைப்படம் ரிலீஸாகியுள்ளது.

இத்தனைக்கும், ‘மாவீரன்’, ‘மனிதன்’, ’குரு சிஷ்யன்’, ‘தளபதி’, ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’ என்று கொண்டாடிய ரசிகர்கள் இப்போதும் இருக்கிறார்கள். அதில் பலர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், தொண்டர்கள். ஆனாலும், ‘காலா’ பெரிதாக கொண்டாடப்படவில்லை. ரிலீஸ் நாளில் ரசிகர்கள் மத்தியில் காணப்பட்ட உற்சாகம் பிறகு இல்லை.‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’விடம் இருந்த ஏதோ ஒன்று ‘காலா’விடம் இல்லையே, அது என்ன? தமிழகம் முழுவதும் பரவலாக அவரது ரசிகர்களிடம் பேசியபோது, அவர்கள் பகிர்ந்தவற்றின் தொகுப்பு..

தலைவரை இதுக்கு முந்தைய படங்கள்ல பார்த்த மாஸ் ஓபனிங் ‘காலா’வுல மிஸ்ஸிங். படத்தோட முதல் பிரச்சினையே அதுதான். ஓபனிங் ஸீன்ல தலைவரு கிரிக்கெட் ஆடுறாரு. அவருக்கு பந்து போடறாங்க. பேட்டை சுத்துறாரு. கிளீன் போல்டு! இதை ஒரு ரசிகரா எங்களால எப்படி ஏத்துக்க முடியும். அதே நேரத்துல, பந்து வீசுறப்போ, அவரு ஒரு சுழற்று சுழற்றுறாரு. பந்து விர்ர்னு பாய்ந்து, எதிராளிகள் பூமி பூஜை போடும் இடத்தை நோக்கி பறக்குது. இப்படி இருந்தா, அந்த ஸீன் செம மாஸா இருந்திருக்கும்.

‘வேங்க மவேன் ஒத்தையில நிக்கேன்’ என்று டிரெய்லர்ல டயலாக் பேசுவாரு ரஜினி. அந்த டிரெய்லர் வந்ததுல இருந்து, அவரை எதிர்க்கும் எல்லா கட்சிக்காரங்களும் மாத்தி மாத்தி மீம்ஸ் போட்டு, அந்த டயலாக்கை கிண்டல் பண்ணாங்க. அப்படீன்னா, அந்த மீம்ஸ் மொத்தத்தையும் காலி பண்ற மாதிரி, படத்துல அந்த ஸீன் வந்திருக்கணும். ஆனா, மொக்கை ஆக்கிட்டாங்க. படத்துல அந்தக் காட்சியை பார்க்கும்போது ‘தலைவருக்கு என்ன ஆச்சு?’ என கேட்க வச்சுட்டாங்க.

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா, சின்னக் குழந்தையும் சொல்லும். இந்தப் படத்துலயும் வில்லன் வீட்டு சுட்டிக் குழந்தை வரை காலாவைத் தெரியுது. ஆனால, இந்த மாஸை அப்படியே டெவலப் பண்ணாம, தன் காலணிகளைக் காட்டி காலாவை துடைக்கச் சொல்கிறார் வில்லன். ரசிகன் கொந்தளிக்காம என்ன செய்வான்?

காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்ட ‘காலா’வை வில்லன் ஹரிதாதா அடிச்சிருந்தாகூட, ‘சரி, பெரிய வில்லன்’னு நெனச்சு விட்டுறலாம். போலீஸை விட்டு அடிக்கவிட்டது கொடுமை.

ஹரிதாதாவைப் பார்த்து ‘என்னை தொட்டுட்டல்ல’ன்னு காலா கேட்பார். அப்போ, தியேட்டர்ல விசில் பறந்தது. அடிச்சு துவம்சம் பண்ணப் போறார்னு பார்த்தா, கடைசிவரைக்கும் ஹரிதாதாவை காலா ஒரு அடிகூட அடிக்கவில்லை. தெரியாம விசில் அடிச்சிட்டமோன்னு எங்களுக்கே கூச்சமாகிடிச்சு.

இமயமலை பாபாஜி கோயில், மந்த்ராலயம் ராகவேந்திரர் கோயில் என அவ்வப்போது ஆன்மிகப் பயணம் செல்பவர் தலைவர் ரஜினிகாந்த். அதோடு, ரசிகர்களுக்கு ஆன்மிகக் கதைகள், கருத்துகள் சொல்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அரசியலைக்கூட ஆன்மிகத்துடன் இணைத்துப் பேசுபவர். அப்படிப்பட்டவர் படத்தில் நாத்திகர் போலவே பேசி நடித்திருக்கிறார். அதோடு ராம காவியம், ராவண காவியம் என்று ஏதேதோ சொல்கிறார்கள். அதெல்லாம் புரியும்படி இல்லை. இதை இயக்குநர் பா.இரஞ்சித்தின் படமாக ஏற்றுக்கொள்ளலாமே தவிர, ஒரு ரஜினி படமாக சத்தியமாக எங்களால் ஏற்கவே முடியாது. எங்களை மனதில் வைத்து ரஜினி கதை கேட்கவில்லை என்றே நினைக்கிறோம்.

மனைவி, மகனைப் பறிகொடுத்துவிட்டு, எதிரியை சூறையாடுகிற வெறியோடு தனி ஆளாக அவரது வீட்டுக்குப் போகிறீர்கள். கத்தியை அலசி துடைத்தபடியே வந்து அமரும் ஹரிதாதாகிட்ட அவரது பேத்தி, ‘காலா நல்லவரு. அவரைக் கொன்னுடாதீங்க தாத்தா’ என்று சொல்லிவிட்டு அறைக்குள் ஓடுவாள். இதுதான் சூப்பர் ஸ்டாருக்கான காட்சியா? இதுவே அந்த சிறுமி ‘காலா’கிட்ட வந்து, ‘எங்க தாத்தா பாவம் அவரை ஒண்ணும் செய்துடாதீங்க காலா?’ன்னு கேட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்..

தாராவி தாதாவாக வரும் தலை வர் அவரது குடும்ப நபர்கள் தொடங்கி முன்னாள் காதலி வரை அனைவராலும் கிண்டலடிக்கப்படுகிறார். இதனால், ஒரு மாஸ் ஹீரோ என்பது ஆரம்பத்திலேயே அடிபட்டுப் போகிறது. ‘தர்மதுரை’, ‘பாட்ஷா’, ‘படையப்பா’வில் ரஜினி வந்து நின்னாலே அப்படி இருக்கும். இங்கே அந்த மாஸ் காட்சிகளை எல்லாம் வில்லன் நானா படேகர் அள்ளிக்கொண்டு போகிறார். நீங்கள் எளிமையானவர்தான். அதற்காக, அறிமுக கதாநாயகன் போல உட்கார்ந்து இரஞ்சித்திடம் கதை கேட்டீர்களா? ரஜினி ரசிகனுக்காகவே பல படங்கள் கொடுத்த உங்களுக்கு, படப்பிடிப்பில்கூட எங்கள் ஞாபகம் வராதது ஏன்?

‘நிலம் எங்கள் உரிமை’ திட்டத்தின்படி மும்பையில ஹரிதாதாவை வீழ்த்துறீங்க.. உங்கள் கனவுத் திட்டமான மாடர்ன் தாராவியை உருவாக்கி, மக்களை சந்தோஷப்படுத்துறீங்க. ‘‘இங்கே என் வேல முடிஞ்சுபோச்சு. தமிழ்நாட்டுலதான் இனிமே நெறயா வேல இருக்கு’’ன்னு ஸ்டைலா ஒரு டயலாக் பேசிட்டு, ஆனந்தக் கண்ணீரோட நிக்கிற மக்கள்ட்ட இருந்து விடைபெற்று, தமிழ்நாட்டுக்குப் புறப்படுற மாதிரி கிளைமாக்ஸ் இருந்திருந்தா, இப்போதைய அரசியல் சூழ்நிலையில, பட்டையக் கிளப்பியிருக்கும் தலைவா.. மிஸ் பண்ட்டீங்களே..!

இவ்வாறு ஸீனுக்கு ஸீன் ஆதங்கப்படும் ரசிகர்களுக்கு ‘காலா’ சேட்டுதான் (அடுத்த படத்தில்) பதில் சொல்ல வேண்டும்?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

40 mins ago

விளையாட்டு

31 mins ago

தமிழகம்

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்