மொழி கடந்த சினிமா! - ஆர்.ரவிக்குமார் நேர்காணல்

By ஆர்.சி.ஜெயந்தன்

ஒரு சிறந்த படம் கொடுத்துவிட்டால், எத்தனை ஆண்டுகள் வேண்டு மானாலும் ரசிகர்கள் காத்திருப்பார்கள் என்கிற தன்னம்பிக்கையை காண்பது அரிது. ‘இன்று நேற்று நாளை’ படத்தின் மூலம், புத்தாயிரத்தின் தமிழ் சினிமாவுக்குத் தரமான அறிவியல் புனைவு சினிமா கொடுத்த ஆர்.ரவிக்குமார், அப்படியொரு தன்னம்பிக்கைக்காரர்தான். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘அயலான்’ படத்தின் மூலம் தனது இரண்டாவது அறிவியல் புனைவை மிகுந்த பொறுமையுடன் உருவாக்கியிருக்கிறார். படம், பொங்கல் வெளியீடாக ரிலீஸாகவிருக்கும் நிலையில் அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

அறிவியல் புனைவுக் கதைகளின் மீது தீராக் காதல் ஏன்? - பள்ளியில் அறிவியல் பாடத்தின் மீதுதான் ஆர்வம் அதிகமாக இருந்தது. பாடத்தைத் தாண்டி, தமிழில் வெளியான அறிவியல் சார்ந்த புத்தகங்களைத் தேடினேன். சுஜாதா எழுதிய ‘ஏன்.. எதற்கு.. எப்படி?’ என்கிற புத்தகம் என்னை மிகவும் கவர்ந்தது. அறிவியலை அவ்வளவு எளிமையாக, சுவாரஸ்யமாக அவர் ஒருவர்தான் அப்போது தமிழில் எழுதியிருந்தார்.

அந்தப் புத்தகத்தின் இரண்டு தொகுதிகளையும் வாசித்து விட்டேன். அறிவியல் விஷயங்கள் பற்றி வகுப்பில் பேச்சு வரும்போது, நான் ‘லாஜிக்’குடன் கூறும் விளக்கங்களை ஆசிரியர் உட்பட வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள். அதனால், பள்ளி யில் என்னை ‘சயிண்டிஸ்ட்’ என்றே கூப்பிடுவார்கள்.

இப்படித்தான் அறிவியல் சார்ந்த எனது ஆர்வமும் தேடலும் விரிந்துகொண்டே போனது. எனது களம் சினிமா என்று முடிவானதும், நிதர்சனமான கதைக்குள் அறிவியல் புனைவு, அது சார்ந்த ஃபாண்டஸியை இணைத்து எழுதும்போது அங்கே என்னால் ஒரு ‘மேஜிக்’கை ஏற் படுத்த முடிகிறது. அது எனக்குப் பிடித்திருப்பதுடன் அதுதான் என்னை முன்னகர்த்துகிறது என்று நம்புகிறேன்.

ஒரு படைப்பாளியின் அணுகுமுறை அறிவியல் புனைவுக்கான திரைமொழியில் எப்படி இருக்க வேண்டும்? - எனது அணுகுமுறை என்னவென்றால், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸைப் பயன்படுத்திக் கதைக்குள் எப்படி ஒரு மேஜிக்கைக் கொண்டு வருவது என்பதுதான். அதன் வழியாக இதுவரை ரசிகர்கள் பார்க்காத ஒரு விஷுவலை எப்படிக் கொண்டுவருவது என்பதில் தீர்மான உணர்வுடன் இருப்பேன்.

தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே இருப்பதால், ஒரு திரைப்படத்தை இப்படியும் ரசிக்கலாம் என்கிற ரசனை மாற்றமும் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு கதை சொல்வதற்குத் துணிவையும் நம்பிக்கையையும் என்னைப் போன்றவர்களுக்குக் கொடுத்திருக்கிறது. ரசிகர்களின் பங்கேற்பும் ரசனையும் இல்லாமல் இது சாத்தியமில்லை. ஒரு வகையில் ரசிகர்கள் - படைப்பாளி இடையிலான கூட்டுச் செயல்பாடு என்றே இதை நினைக்கிறேன்.

வேற்றுக்கிரகவாசிகள் குறித்த கதையைக் கையிலெடுத்தபோது, அதை இன்றைய, ‘பான் இந்தியா’ சினிமாவாகக் கொடுக்க வேண்டும் என்பதற்காக உங்களது ஒரிஜினல் கதையில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்ததா? - இல்லை. சினிமாவுக் கென்று ஒரு மொழி இருக்கிறது. எந்த நாட்டில் படம் எடுத்தாலும் அதன் பார்வையாளர்கள் பேசும் மொழி வெவ் வேறாக இருந்தாலும் சினிமாவுக்கான மொழி ஒன்றுதான்.

அதில் இருக்கும் உணர்வு ஒன்றுதான். ஆனால், கதை என்று வருகிறபோது, உள்ளூர் தன்மை அதிகம் இல்லாமல், எல்லைகளைக் கடந்து, எல்லாப் பகுதி மக்களும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய தன்மை அமைந்துவிடும்போது, அது மொழி கடந்த சினிமாவாக மாறிவிடும்.

‘அயலான்’ அப்படிப்பட்ட கதையைக் கொண்ட படம்தான். ஹாலிவுட் படங்களின் வெற்றி இந்தச் சூட்சுமத்தில் இயங்குவதுதான். இது வணிகத்துக்காக உருவாக்கப்பட்ட ஓர் உத்தி. அதேநேரம், ‘ரூட்டெட்’ ஆன கதைகளையும் தற்போது ரசிகர்கள் தேடத் தொடங்கிவிட்டார்கள்.

சிவகார்த்திகேயன் சம்பளம் வாங்காமல் நடிக்க வேண்டிய சூழல் ஏன் உருவானது? - நாங்கள் 2018இல் படத்தைத் தொடங்கினோம். அப்போதே சாட்டிலைட், டிஜிட்டல் உட்படப் படத்தின் மொத்த வியாபாரமும் முடிந்துவிட்டது. கரோனாவுக்கு பிறகுதான் ‘ஓடிடி’யும், ‘பான் இந்தியா’ சினிமாவும் பிரபலம் அடைந்தன. வியாபாரமும் இரண்டு மடங்காக விரிவடைந்தது. இன்று அதிக பட்ஜெட்டும் கிடைக்கிறது. நாங்கள் தொடங்கிய வேகத்தில் வியாபாரத்தை முடித்துவிட்டோம்.

‘அயலான்’ இன்றைக்கு வியாபாரம் ஆகியிருந்தால் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆகியிருக்கும். அன்றைக்கே வியாபாரம் முடிந்ததால் பெரிய இழப்புதான். படத்தின் உருவாக்கத் தரத்தில் சமரசம் கூடாது என்பதற்காக சிவகார்த்திகேயன் தனது ஊதியம் முழுவதையும் விட்டுக்கொடுத்துவிட்டார். இது தனது ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக அவர் செய்திருக்கும் செயல்.

‘அயலான்’ பற்றிப் பேசும்போது, படத்தில் வரும் வேற்றுக்கிரக வாசியின் தோற்ற வடிவமைப்பு, கிராஃபிக்ஸ் தரம் பற்றி, சமூக ஊடகங்களில் ரசிகர்கள் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். இது எப்படிச் சாத்தியமானது? - ‘அயலா’னுக்கு கிராஃபிக்ஸ் வி.எஃப்.எக்ஸ் செய்திருப்பவர்கள் ‘பேந்தம் எஃப்.எக்ஸ்’ (phantomfx) நிறுவனம். கடந்த 25 ஆண்டுகளாக 200க்கும் அதிகமான ஹாலிவுட், இந்தியப் படங்களுக்கு முதுகெலும்பாக இருந்து வி.எஃப்.எக்ஸ் செய்திருக்கும் பிஜாய் அற்புதராஜ் என்கிற ஒரு தமிழரின் நிறுவனம். தலைமையகம் சென்னை அம்பத்தூரில்தான் இயங்குகிறது.

இந்நிறுவனத்துக்கு ஹாலிவுட்டில் அலுவலகம் இருந்தாலும் அங்கிருந்து திரைப்பட இயக்குநர்கள் சென்னைக்கு வந்து செல்கிறார்கள். பேந்தம் எஃப்.எக்ஸ் நிறுவனம் ஒரு அசோசியேட்போல மாறி, ஒரு கட்டத்தில் அவர்களே ‘ஃபண்டிங்’ செய்து ‘அயலான்’ படத்தின் காட்சிகளைத் தரமாக முடித்துக் கொடுத்தார்கள்.

தயாரிப்பாளர் கே.ஜே.ஆரும் சரி, பேந்தம் எஃப்.எக்ஸ் நிறுவனமும் சரி, சிவகார்த்திகேயனும் சரி ஆளுக்கொரு சக்கரம்போல் இருந்து ‘அயலா’னைக் கடனிலிருந்தும் வழக்குகளிலிருந்தும் மீட்டெடுத்து ரசிகர்களிடம் கொடுத்திருக்கிறார்கள். எனக்கு ஏற்ற ஒத்த அலைவரிசையை உடையவர் பிஜாய். இத்துறையில் அவரது கற்பனை வளம் பல மிகப்பெரிய சாதனைகளை எதிர்காலத்தில் படைக்கும்.

அவரும் அவரது குழுவினரும் நான் கேட்டதைத் துல்லியமாகக் கொடுத்ததால் இவ்வளவு கிராஃபிக்ஸ் வி.எஃப்.எக்ஸ் தரத்தைக் கொண்டுவர முடிந்தது. அத்துடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் இசையும் ஒளிப்பதிவு யோகி, நீரவ் ஷாவின் கற்பனையும் இணைந்துகொண்டதால் ‘அயலான்’ ரசிகர்களுக்கு முழுமையான குடும்ப பொழுதுபோக்குப் படமாக வந்திருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் கொண்டாடித் தீர்ப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

அடுத்த படமும் அறிவியல் புனைவா? - ஆமாம்! திரைக்கதை தயாராக இருக்கிறது. ‘அயலான்’ ரிலீஸுக்குப் பிறகு பட வேலைகளைத் தொடங்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

இந்தியா

13 mins ago

ஜோதிடம்

7 mins ago

தமிழகம்

36 mins ago

சுற்றுச்சூழல்

53 mins ago

வணிகம்

43 mins ago

இந்தியா

53 mins ago

க்ரைம்

26 mins ago

சுற்றுலா

5 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

1 hour ago

மேலும்