வேட்டையாடு விளையாடு 10: கறுப்பினப் பெண்களின் கதை

By ஷங்கர்

1. கறுப்பினப் பெண்களின் கதை

லிஸ் வாக்கர் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் 1985-ல் இயக்கிய திரைப்படம் ‘தி கலர் பர்ப்பிள்’. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்கக் கிராமம் ஒன்றில் வாழ்ந்த கறுப்பினப் பெண் செலி ஹாரிஸின் கதை இது. கறுப்பினத்தவர்கள் மீதான கடுமையான ஒடுக்குமுறை நிலவிய சூழலில், பல்வேறு துயரங்களைத் தாண்டி சமத்துவத்துக்காகப் போராடிய கறுப்பினப் பெண்களின் கதை என்றும் இதைச் சொல்லலாம். எந்தச் சூழ்நிலையிலும் பெண்களுக்குப் பெண்கள்தான் ஆதரவாக இருக்க முடியும் என்பதையும் உணர்த்தும் திரைப்படம் இது.

ஹாலிவுட்டில் ‘இண்டியானா ஜோன்ஸ்’, ‘இ.டி’ போன்ற பெரும் பொழுதுபோக்குத் திரைப்படங்களை உருவாக்குபவராகவே அதுவரை அறியப்பட்டிருந்த ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் பாதையை மாற்றிய படம் இது. இந்தப் படத்துக்கான கதையை எழுதிய ஆலிஸ் வாக்கர், முதலில் ஸ்டீபன் ஸ்பீல்பெர்குக்கு அனுமதி தரவில்லை. தன் மகளுடன் அவர் இயக்கிய ‘இ.டி’ படத்தைப் பார்த்த பிறகே அனுமதி தந்தார். 11 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்தப் படத்துக்கு ஒரு விருதுகூடக் கிடைக்கவில்லை. இப்படத்தில் நடித்த பிரபல டாக் ஷோ நட்சத்திரம் யார்?

2. திருந்த ஒரு வாய்ப்பு

எவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்தவனுக்கும் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு தரப்பட வேண்டும். இதுதான் 1957-ல் இந்தியில் வெளியாகிய ‘தோ ஆங்கேன் பாரஹ் ஹாத்’ திரைப்படத்தின் கரு. சினிமாவைச் சமூக மாற்றத்துக்குப் பயன்படுத்த முடியும் என்பதை உணர்த்திய தொடக்க காலப் படைப்பாளிகளில் ஒருவர் இயக்குநர் சாந்தா ராம். லட்சியவாதியான ஜெயிலர் ஆதிநாத், கொடூரமான குற்றங்களைப் புரிந்த ஆறு குற்றவாளிகளைத் தேர்ந்தெடுத்து ஒரு வறண்ட பகுதிக்கு அழைத்துச் சென்று அவர்களையும் நல்வழிப்படுத்தி அந்த வறண்ட நிலத்தையும் விளைநிலமாக மாற்றுகிறார்.

கனமான செய்தியை உள்ளடக்கமாகக் கொண்டிருந்தாலும் சினிமா ஊடகத்தின் சுவாரசியமான அம்சங்களோடு கதை சொல்லியிருப்பார் சாந்தாராம். இசையமைப்பாளர் வசந்த் தேசாயும் பாடலாசிரியர் பரத் வியாசும் சேர்ந்து உருவாக்கிய ‘ஐ மாலிக் தேரே பந்தே ஹம்’ பாடல் இந்தியா முழுவதும் புகழ்பெற்றது. பெர்லின் திரைப்பட விழாவில் வெள்ளிக்கரடி வென்றது. இந்திய ஜனாதிபதியின் தங்கப்பதக்கத்தை வென்ற இத்திரைப்படத்தின் தமிழ் வடிவத்துக்குப் பெயர் என்ன?

3. வங்கப் பிரிவினை ஆவணம்

இந்தியாவின் முதல் கதைப் படத்தை எடுத்துப் புகழ்பெற்றவர் தாதாசாஹேப் பால்கே. ஆனால், இந்திய சினிமா சரித்திரத்தில் அவருக்கு முன்பே திரைப்படங்களை எடுத்தவர்களில் முதன்மையானவர் வங்கத்தைச் சேர்ந்த ஹிராலால் சென். 1866-ல் பிறந்து தனது 51 வயதில் காலமான ஹிராலால் சென், காலத்தால் மறக்கடிக்கப்பட்ட ஆளுமைகளில் ஒருவர். புதிய ஊடகத்தின் சாத்தியங்களைப் பரிசோதித்தவர் மட்டுமல்ல. சில பங்களிப்புகளையும் வழங்கியவர் என்று கருதப்படுகிறார். தற்போது வங்க தேசத்திலிருக்கும் போக்ஜுரியில் பிறந்த ஹிராலால், கர்சன் பிரபுவின் வங்கப்பிரிவினை அறிவிப்பை எதிர்த்து நடத்தப்பட்ட மக்கள் பேரணியைப் படமெடுத்தார். இரண்டு மைல்களுக்கும் மேல் நீண்டிருந்த மக்கள் திரளின் அடர்த்தியைக் காண்பிப்பதற்காக ஒளிப்பதிவுக் கருவியைக் கருவூலக் கட்டிடத்தின் மேல் வைத்துப் படமாக்கினார்.

வங்கப் பிரிவினை தொடர்பான முதல் அரசியல் ஆவணப்படமாக அது கருதப்படுகிறது. ஜபகுசும் கூந்தல் தைலம், எட்வர்ட்ஸ் மலேரியா மருந்து விளம்பரப் படங்களையும் எடுத்திருக்கிறார். சினிமா ஊடகம் பிறந்து தவழத் தொடங்கிய காலகட்டத்தில், கல்கத்தாவில் இரண்டு இடங்களில் மட்டுமே மின்சார வசதி இருந்த சூழ்நிலையில் படங்களை எடுக்கவும் திரையிடவும் செய்தவர் ஹிராலால். 1917-ல் ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில் தனது படங்களைப் பறிகொடுத்த அவர், சினிமாட்டோகிராப் மெஷினை வாங்குவதற்காகத் தந்தையிடமிருந்து பெற்ற பணம் எவ்வளவு?

4. நவயுக ஈரானிய சினிமா முன்னோடி

நவயுக ஈரானிய சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான அப்பாஸ் கியரோஸ்தமி இயக்கி, 1987-ல் வெளியான திரைப்படம் ‘வேர் இஸ் தி ஃபிரெண்ட்ஸ் ஹோம்?’. 1970-களின் தொடக்கத்திலேயே திரைவாழ்க்கையைத் தொடங்கிய கியரோஸ்தமிக்கு சர்வதேச கவனத்தை அளித்த திரைப்படம் இது. ஈரானிய சமூக, பொருளாதாரக் கலாசாரப் பின்னணியிலும் சினிமா தணிக்கை சார்ந்தும் குழந்தைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களை மட்டும்தான் எடுக்க முடியும் என்கிற சூழலில் வெளியான திரைப்படம் இது.

ஈரானில் கோகர் நகரத்தில் நடக்கும் மூன்று திரைப்பட வரிசையில் முதல் படம் இது. இதையடுத்து ‘லைஃப் அண்ட் நத்திங் மோர்’, ‘த்ரூ தி ஆலிவ் ட்ரீஸ்’ படங்களை எடுத்தார். சிறுவன் அகமது பள்ளியிலிருந்து திரும்பி வீட்டுப்பாடம் செய்யும்போது தனது நண்பனின் நோட்டுப் புத்தகத்தைத் தெரியாமல் எடுத்து வந்துவிட்டதை உணர்கிறான். நண்பனின் நோட்டுப்புத்தகத்தை ஒப்படைக்காவிட்டால் அடுத்த நாள் அவன் தண்டிக்கப்படலாம் என்கிற சூழ்நிலையில் அவனைத் தேடி பக்கத்துக் கிராமத்துக்குப் பயணிக்கிறான் அகமது.

ஈரானிய கிராமிய வாழ்க்கை, நிலப்பரப்பு, மக்களது நம்பிக்கைகள் அழகிய முறையில் பதிவான திரைப்படம் இது. 14 வயதுக்குள் சிறுவர்கள் பார்க்க வேண்டிய பத்து சிறந்த திரைப்படங்களில் ஒன்று என்கிறது இத்திரைப்படத்தை தேர்ந்தெடுத்த அமைப்பு எது?

5. மனோன்மணியான கனவுக்கன்னி

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தால் அக்காலத்தில் பிரம்மாண்டமாக இரண்டு லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு, 1942-ல் வெளியான திரைப்படம் ‘மனோன்மணி’. யாரை நாயகன், நாயகியாக நடிக்க வைக்கலாம் என பொதுமக்களின் அபிப்ராயத்தைக் கேட்கும் புதுமையான யோசனை இப்படத்துக்காகப் பின்பற்றப்பட்டது. அக்காலத்தின் கனவுக்கன்னியான டி. ஆர். ராஜகுமாரியை மனோன்மணியாக மக்கள் தேர்ந்தெடுத்தனர்.

நாயகனாக பி. யு. சின்னப்பா தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழறிஞர் பி. சுந்தரம் பிள்ளை 1892-ல் எழுதிய காவிய நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட படைப்பு இது. ராஜா, இளவரசி, ராஜகுரு, சதிகார மந்திரிகள் என சுவாரசியத்துக்குக் குறைவற்ற இந்தப் படம் பெரும் வெற்றிபெற்றது. இப்படத்தின் நகைச்சுவை டிராக்கில் நடித்த என்.எஸ். கிருஷ்ணன்- மதுரம் ஜோடியின் எந்தப் பாடல் பிரபலமானது?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

கல்வி

13 mins ago

விளையாட்டு

18 mins ago

தமிழகம்

26 mins ago

விளையாட்டு

39 mins ago

தமிழகம்

49 mins ago

சினிமா

53 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வெற்றிக் கொடி

1 hour ago

இந்தியா

1 hour ago

வேலை வாய்ப்பு

2 hours ago

மேலும்