அஞ்சலி: சித்திக் | சிரிப்பும் சங்கடமும்

By ஆர்.ஜெயக்குமார்

பலகுரல் நிகழ்ச்சி மேடைகளில் சித்திக் - லால் இணையைக் கண்டாலேயே மக்கள் உடல் குலுங்க சிரித்து மகிழ்வார்கள். ’ராம்ஜிராவ் ஸ்பீக்கிங்’ வழி வெள்ளித் திரை கண்டபோதும் இந்த இணை சிரிக்காதவர்களைகூடச் சிரிக்கவைத்தது. இரு நாள்களுக்கு முன்பு இதே நண்பர்கள் இணைந்திருந்த கொச்சி கடவந்தரை உள் விளையாட்டு அரங்கக் காட்சிதான், முதன் முறையாக மக்களைக் கண் கலங்கவைத்தது. உயிரற்ற சடலமாக சித்திக் படுத்திருக்க, லால் அவரது தலைமாட்டில் அதிர்ச்சியில் அமர்ந்திருந்த காட்சி, மலையாள சினிமாவின் திரும்ப முடியாத ஒரு வசந்த காலத்தை மக்களுக்கு நினைவுபடுத்தியது.

கொச்சி பின்னணியில் வளர்ந்து, கலாபவன் நாடகக் குழுவின் வழி நாடகத் துறைக்கு வந்தவர் சித்திக். கலாபவன் காலத்திலேயே சித்திக் - லால் இணை உருவாகிவிட்டது. அதுவரை மலையாள சினிமா கண்டிராத வகையில் இந்தக் கதையாசிரியர் இணை, வலுவான வாழ்க்கைப் பின்னணியில் உருவானது.

கலை, யதார்த்த வகை சினிமாக்கள் உருவாகிவந்த கேரளத்தில், ஜனங்களைப் புதிய ரசனையின் பக்கம் திருப்பியவர்களில் இந்த இணைக்குத் தனித்துவம் உண்டு. ப்ரியதர்ஷன், ஸ்ரீனிவாசன் ஆகியோரும் தங்களது நகைச்சுவை பாணியில் மக்களை முழ்கடித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. சாதாரண மக்களின் வாழ்க்கையிலிருந்த நகைச்சுவைகளைத் தாங்கள் எழுதிவைத்த கதாபாத்திரங்களுக்கு அளித்துப் புதிய பாணி நகைச்சுவையை, சித்திக்கும் லாலும் உருவாக்கினார்கள்.

எதிர் நகைச்சுவைக்கு வரவேற்பு: சித்திக் - லால் இணையின் கதையில் வெளிவந்த ’நாடோக்காற்று’ மலையாள சினிமாவில் என்றும் நினைவில் உள்ள படம். இந்தப் படத்தின் திரைக்கதை ஸ்ரீனிவாசன் பெயரில் வெளிவந்தாலும் அதையும் எழுதியது இந்த இணைதான் என்பது பின்னால் நிரூபணமானது.

இந்தப் படம், தமிழில் ‘கதாநாயகன்’ என்கிற பெயரில் பாண்டியராஜன் நடிப்பில் வெளியாகி வெற்றியைப் பெற்றது. மோகன்லாலும் ஸ்ரீனிவாசனும் துபாய் என்று நினைத்துக் கள்ளத் தோணியில் சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் இறங்கிக் கோடம்பாக்கத்தில் கஷ்டப்பட்ட ஜீவிதத்தில் கலப்பார்கள்.

வேலை போய்விடும். தாளாத பட்டினியில் தன்மானம் பறக்க, மண்ணெண்ணெய்க் குடுவையை எடுத்துக்கொண்டு ஷோபனா வீட்டுக்கு வரும் மோகன்லால், கடை பூட்டிவிட்டதாகவும் மண்ணெண்ணெய் கடன் வாங்க வந்ததாகவும் அசடு வழியச் சொல்வார். மண்ணெண்ணெய் கொடுத்து அனுப்பிவிட்டு வீட்டைப் பூட்டிய பிறகு, கதவைத் தட்டி ‘உண்மையில் மண்ணெண்ணெய் அல்ல, நான் வாங்க வந்தது... பூட்டியது பலசரக்குக் கடை’ என அரிசியைக் கடன் வாங்கிச் செல்வார். இதன் அவல நகைச்சுவை ஒரே நேரத்தில் சிரிக்கவும் சோகப்படவும் வைக்கும்.

காவலன்

கொச்சிப் பகுதியின் வழக்குமொழியில் உள்ள எதிர் நகைச்சுவை அம்சத்தை அதேபடி திரைக்கதையில் கொண்டு வந்ததில் சித்திக்கும் லாலும் விசேஷமானவர்கள். ‘ராம்ஜிராவ் ஸ்பீக்கிங்’கில் (தமிழில் ’அரங்கேற்ற வேளை’யாக வெளிவந்தது) இன்னசெண்ட்டை சாய்குமார் சந்திக்கும் காட்சியில் ‘மத்தாய் சேட்டன் உண்டோ?’ எனச் சாய்குமார் கேட்பார். அதற்கு இன்னசெண்ட், ‘இல்ல, உண்டில்ல. உண்ணான் போனேயுள்ளு உண்ணுனா?’ என எதிர் நகைச்சுவை செய்வார்.

மலையாளத்தில் உண்டா என்றால் ‘சாப்பிட்டுவிட்டீர்களா?’, ‘(இன்னவர்) இருக்கிறார்களா?’ ஆகிய இரு பொருள்கள் இருக்கின்றன. இன்றைய தேதிக்கு இதெல்லாம் பெரிய நகைச்சுவையாகத் தோன்றாது. ஆனால், வேலைவாய்ப்பின்மையால் அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருந்த இளம் தலைமுறைக்கு அன்று அது மிகப் பெரிய ஆசுவாசமாக இருந்திருக்கும். இந்த வேலைவாய்ப்பின்மையின் துயரம்தான் ‘நாடோடிக்காற்’றிலும் வெளிப்பட்டிருக்கும்.

திரைக்கதையில் நேர்த்தி: சித்திக் - லால் இணையின் மிகப் பெரிய வெற்றிப் படம், ‘காட்ஃபாதர்’. இந்தப் படத்துக்காகக் கதாநாயகர்கள் பலரையும் கண்டு கதை சொல்லியிருந்தாலும் யாரும் சம்மதிக்கவில்லை. அவர்களது கலாபவன் காலத்து நண்பனும் அன்றைக்கு மூன்றாம் சூப்பர் ஸ்டாராகவும் இருந்த ஜெயராம், உங்களை நம்பி நாள்களைத் தர முடியாது என மறுத்துவிட்டாராம். மேகன்லால், மம்மூட்டி சினிமாக்கள் மலையாளத்தை ஆண்ட அக்காலத்தில் முகேஷ் என்கிற ஒரு இரண்டாம் நிலை, வர்த்தக முகமில்லா நாயகனைக் கொண்டு அந்தப் படத்தைத் தொடங்கினர்.

மலையாளத்தின் நாடக ஆளுமையான என்.என். பிள்ளையை அதற்குள் கொண்டுவந்தனர். அவருக்காக மலையாள சினிமாவில் ஐஞ்ஞூரான் என்னும் ஒரு தனித்துவம் மிக்கக் கதாபாத்திரத்தை ஸ்தாபித்தனர். தன் மகன்களை பிரம்மச்சாரியாக வளர்க்கும் ஒரு நிலக்கிழார். திமிரும் தான்தோன்றித்தனமும் உள்ள கதாபாத்திரம். படத்தின் முதல் காட்சியிலேயே இதைப் படம் சித்தரிக்கும்.

இந்தப் படத்தின் முதல் காட்சியில் மக்கள் சிலர் ஐஞ்ஞூரான் முதலாளியைத் தேடி வருகிறார்கள். வெளிக் கதவின் கம்பிக்குப் பின்னால் நின்றபடி தங்களைக் காப்பாற்றும்படிக் கதறுகிறார்கள். அதற்கு ஐஞ்ஞூரான், “உங்களக் காப்பாத்த நான் அங்க வரணுமா? உள்ள வாங்கடா?” என அதட்டுவார். மக்கள் வெளிக் கதவைத் திறந்து உள்ளே வரும்போது அவர்களைப் பார்த்து, “இங்க பாரு.. கதவ திறந்துபோட்டு வர்றதப் பாரு..” என்பார்.

உள்ளே வந்தவர்களில் ஒருவர் கதவைப் பூட்டிவிட்டுத் திரும்புவார். அப்போது “அப்படினா கதவை அடச்சுட்டயா? திரும்பிப் போக உத்தேசம் இல்லையா? திறந்துபோடுடா கழுதை!” என்பார். அவன் திறந்த மாதிரியும் இல்லாமல், அடைத்த மாதிரியும் இல்லாமல் மத்தியில் வைத்துவிட்டுத் திரும்புவான். இந்த முதல் காட்சியிலேயே, இந்தச் சுபாவம் உள்ளவரிடம் அவரது மகன்கள் படப்போகும் பாட்டை சித்திக் - லாலின் கதாபாத்திர வார்ப்பு முன்பே சொல்லிவிடும்.

இதே படத்தில் ஒரு பெண், ஐஞ்ஞூரானையும் அவரது மகன்களையும் பார்த்து “பெண்ணின் ஸ்பரிசம் அறியாத நீங்கள் எல்லாம் என்ன ஆண்கள், அப்படி எவனாவது இருந்தால் என்னை அடித்துப் பாருங்கள்” என்கிற பொருளில் சவால் விடுவாள். பெண்ணின் ஸ்பரிசம் படாத மகன்கள் இதை எதிர்கொள்ளாமல் வாயடைத்துப் போவார்கள்.

ஆனால், சாமிநாதன் என்கிற மகன் மட்டும் அந்தப் பெண்ணின் கன்னத்தில் அறைவார். அவர் பெண்ணின் ஸ்பரிசம் அறிந்தவர் என்கிற பின்பகுதியின் ‘ட்விஸ்’ட்டை முன்பே பார்வையாளர்களுக்குக் கடத்தும் திரைக்கதை எழுத்தின் நேர்த்தியான உத்தி இது. இதைத் திறம்பட இந்தத் திரைக்கதை கையாண்டிருக்கும்.

ப்ரண்ட்ஸ்

சங்கடத்துக்கு நடுவே.. தமிழில் இயக்கியவற்றில் ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில், “நீ பறிக்கன்னதொக்க (ஆணி) ஆவஸ்யம் இல்லாததாரிக்கும்’, ‘ஆணி பறிக்கண்டா’ என்பது போன்ற சித்திக்கின் வசனங்கள் கேரளத்தைவிட தமிழ்நாட்டின் வழக்குச் சொற்களாகவே நிலைபெற்றுவிட்டன. சித்தில் - லால் கூட்டணி பிரிந்து சித்திக் தனியாக இயங்கியபோதுதான் அதற்கு முந்தைய இணைப் படங்களில் சித்திக் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள முடிந்தது. லாலால் இயக்குநராகவோ கதையாசிரியராகவோ நிலைபெற முடியாமல் போனது.

சித்திக் தனது ராஜபாட்டையைத் தொடர்ந்தார். கால மாற்றத்தில் இளம் தலைமுறைகளின் நம்பிக்கையும் நகைச்சுவையும் நிறம் மாறியபோது, சித்திக்கால் அதில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சமீபத்திய அவரது தோல்விகள் அதை உணர்த்தின. ஆனால், புகழின் கொடுமுடியில் இருந்தபோது எப்படியிருந்தாரோ அதே கனிவான தன்மையில் தோல்வி வந்த காலகட்டத்திலும் இருந்தார் சித்திக்.

நடுத்தர மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளின் துக்கத்திலிருந்தே சித்திக்கின் படங்கள் துளிர்விட்டன. அதை அங்கதச் சுவையில் சொல்வதை ஒரு பாணியாகக் கொண்டிருந்தார். நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் மாறிய நிலையில், அந்த நகைச்சுவைக்கு இப்போது முகாந்திரம் இல்லாமல் போய்விட்டது. ஆனால்,மலையாளிகள் சங்கடத்திலும் சிரிப்பதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கித் தந்தவர் சித்திக்.அதற்காக அவர் என்றென்றும் நினைக்கப்படுவார்.

- தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

மேலும்