மக்கள் இணையம்: இணையமற்ற இணையம் சாத்தியம்!

By செய்திப்பிரிவு

எல். ரேணுகா தேவி

இணைய வசதியுடன் கூடிய நவீன கைபேசிகள் இன்றைக்கு மனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றுபோலாகிவிட்டது. உணவில் இருந்து ஊருக்குச் செல்ல பயணச்சீட்டு முன்பதிவுவரை அநேகமாக அனைத்துச் செயல்பாடுகளுக்கும் இணையத்தையே அடிப்படையாகக்கொண்டு வாழத் தொடங்கிவிட்டோம். இந்த நிலையில், இணைய சேவை இயற்கைச் சீற்றத்தால் தடைப்பட்டாலோ, அரசு இணைய சேவையை முடக்கினாலோ தகவல்களைப் பரிமாறிகொள்வது எப்படி என்பதே இன்றைய இளைஞர்களின் கேள்வி.

2015 சென்னைப் பெருவெள்ளமும், காஷ்மீரில் இணைய சேவை முடக்கப்பட்டிருப்பதுமே இந்தக் கேள்வி இப்போது வலுப்பெற்று வருவதற்குக் காரணம். இந்த இரு நிகழ்வுகளின்போதும் இணைய சேவை முற்றிலுமாக முடங்கியது அல்லது முடக்கப்பட்டது. இதனால் அவசர காலத்தில் தகவல்களைப் பரிமாறிகொள்ள மாற்றுவழி உள்ளதா என்ற தேடல் மக்களிடையே உருவாகியுள்ளது.

இணையமும் இணையதளமும்!

மக்களுக்கான இணைய சேவை பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பு இணையத்துக்கும் (Internet) இணையதளத்துக்கும் (Webpage) உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்வது அவசியம்: கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் ஆகியவைதான் இணையம் என்பது பெரும்பாலானோரின் புரிதல். ஆனால், இணையத்தில் உள்ள லட்சக்கணக்கான பக்கங்களில் சிறுபகுதிதான் இந்தத் தளங்கள். அப்படியானால், இணையம் என்பது என்ன? கணினிகளுக்கு இடையேயான தொடர்புதான் இணையம்.

பொதுமக்கள் இணையத்தைப் பயன்படுத்துவதற்கு, பொது-தனியார் நிறுவனங்கள் கட்டண அடிப்படையில் இணைய சேவையை வழங்கிவருகின்றன. இதற்காக கடலுக்கு அடியில் லட்சக்கணக்கான கண்ணாடி இழை வடங்கள் (Optic fibre cable) பொருத்தப்பட்டுள்ளன. இந்த வடங்களின் வழியாகத்தான் தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. பெருநிறுவனங்கள், அரசின் கண்காணிப்பில் இணைய சேவை பெரும்பாலும் உள்ளதால், அவை நினைத்தால் ஒரு நாட்டில், ஒரு மாநிலத்தில் இணைய சேவையை முடக்கிவிட முடியும்; தனிநபர்களின் தகவல்களை மறைமுகமாகச் சேகரிக்கவும் முடியும்.

ஆனால், யாருடைய கண்காணிப்பும் இன்றி, தனிநபர்களால் இணைய சேவையை இலவசமாகப் பெறமுடியும் என்பதுதான் உண்மை. இது எப்படிச் சாத்தியம்?

கட்டற்ற மென்பொருள் இயக்கம்

“இணைய சேவை பெரும்பாலும் தனியார் நிறுவனங்களின் கைகளிலேயே உள்ளது. இதற்கு மாற்றாக, ‘இலவச மென்பொருள் இயக்க’த்தின் மூலம் உலகம் முழுவதும் உள்ள மென்பொருள் வல்லுநர்கள், இணைய சேவையை மக்களிடம் இலவசமாகக் கொண்டுசெல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக இந்தியாவிலும் தமிழகத்திலும் மக்களுக்கான இணைய சேவையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்”, என்கிறார் கட்டற்ற மென்பொருள் அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் பிரசன்னா.

பெருநிறுவனங்களின் இணைய சேவைக்கு மாற்றாக இலவசமான இணைய சேவை, இணையப் பக்கங்கள் ஆகியவற்றை உருவாக்குவது கட்டற்ற மென்பொருள் அமைப்பின் முதன்மைப் பணி.

மக்கள் இணையம்

“இணையப் பக்கங்களை முடங்குவதால் இணைய சேவை பாதிக்கப்படாது. ஆனால், காஷ்மீர்போல் இணைய சேவையே முற்றிலுமாக முடக்கப்பட்டால் ‘வை-ஃபை ரவுட்டர்கள்’ என்ற கருவி மூலம், அவசரகாலத் தகவல்களை ஒருவர் மற்றொருவருக்குப் பகிர்ந்துகொள்ள முடியும். இந்த ரவுட்டர்களில் உள்ள ‘OpenWRT’ எனப்படும் ‘Router OS’-ஐப் பயன்படுத்தி இணைய வசதியை பெறமுடியும்; இதன் மூலம் ‘F-Droid, Briar, Manyverse, Trebleshot’ போன்ற இணையதளங்களைப் பதிவிறக்கி, இணைய வசதியில்லாமல் புளூடுத், ஹாட் ஸ்பாட், வை-ஃபை ஆகியவை மூலம் மற்றவர்களுக்குத் தகவல்களை பகிரலாம்”, என்று கட்டற்ற மென்பொருள் சேவை இயங்கும் முறையை விளக்குகிறார் பொறியாளர் பாலாஜி.

ரவுட்டர்கள் பலவற்றை இணைத்து கிராமம் ஒன்றின் இணையத் தேவையை, தனியார் நிறுவனங்களின் உதவியின்றி நிறைவேற்ற முடியும். இந்த மாற்று இணைய சேவைதான் ‘மக்கள் இணையம்’ என்று அழைக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களின் வசமில்லாமல், ‘மக்களுக்கான இணைய’மாக இணைய சேவை மாறவேண்டும் என்பதுதான் இந்த அமைப்பினரின் வலியுறுத்தல்.

ஒரு முன்மாதிரிப் பள்ளி!

இந்த வகையான மாற்று இணைய முயற்சிகள் கட்டற்ற மென்பொருள் அமைப்பினர் காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் செயல்படுத்தியுள்ளனர். இங்கு ‘Router OS’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ‘LIBRE DIGITAL LIBRARY’ என்ற மின்னணு நூலகம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்த இணைய நூலகத்தில் சமூவுடமை ஆக்கப்பட்ட புத்தகங்கள், வீடியோக்கள் பகிரப்பட்டு மாணவர்கள் பயன்பெற்றுவருகிறார்கள்.

இணையம் இல்லாமல் இணைவது எப்படி?

Router OS-ஐ நிறுவிய பிறகு, செல்பேசியில் உள்ள பிரவுசரில் F-Droid மென்பொருளைப் பதிவிறக்கிக்கொள்ள வேண்டும். கூகுள் பிளேஸ்டோர்-ஐ ஒத்த இந்த F-Droid மூலம், ‘கட்டற்ற மென்பொருள்’ செயலிகளைப் பதிவிறக்கிக் கொள்ளலாம். கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் திடீரென தங்கள் சேவையை நிறுத்துதல், அரசு அவற்றை முடக்குதல், இயற்கைப் பேரிடரால் இணைய சேவை பாதிக்கப்படுதல் ஆகிய நிகழ்வுகளின்போது இந்தச் செயலிகளை இணைய இணைப்பு இல்லாமல் பயன்படுத்த முடியும்.

F-Droid-ல் உள்ள ‘Briar’ என்ற செயலி இதழாளர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோரின் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டது. ‘Off line-Frist’ வழிமுறையில் செயல்படும் இந்தச் செயலி மூலம், இணைய இணைப்பு இருந்தாலும் இல்லையென்றாலும், கருத்துக்களை எழுதமுடியும். செல்பேசியில் உள்ள ‘Briar’ முதலில் பதிவுச் செய்யப்படும்; பின் மற்றவர்களின் செல்பேசியில் உள்ள புளுடூத், வை-ஃபை வசதியைப் பயன்படுத்தி தகவல்களை எளிதாகப் பகிர்ந்துகொள்ளலாம்.

எழுத்தை மட்டுமே பயன்படுத்தக்கூடிய வகையில் தற்போது உள்ள இச்செயலியில் ஒருமுறை பதிவிட்ட கருத்தை அழிக்க முடியாது, எனவே எழுதும்முன் சிந்தித்து நிதானமாக எழுத வேண்டும். இதைக் குறையாகக் கருத வேண்டியதில்லை, தகவல்களைத் திரிக்கும் வழிகளைத் தவிர்க்க இந்த வசதி வழிசெய்கிறது. ஆகவே, நம்பகத்தன்மை வாய்ந்த ஓர் இணைப்பை (Trust network) உருவாக்க இது பயன்படும்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: renugadevi.l@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

உலகம்

12 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

32 mins ago

இந்தியா

36 mins ago

வாழ்வியல்

46 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்