விடைபெறும் 2019 - அறிவியல் பாய்ச்சல்கள்: ஒரு பார்வை

By செய்திப்பிரிவு

சு. அருண் பிரசாத்

அடிப்படை அலகுகளுக்குப் புதிய வரையறை!

கிலோகிராம், நொடி, மீட்டர், ஆம்பியர், கெல்வின், மோல், கேண்டெலா ஆகிய அடிப்படை அலகுகளின் வரையறையை ‘அனைத்துலக அலகுகள் முறை’ (International System of Units) நிர்ணயிக்கிறது. இந்தியா உள்பட 60 நாடுகளை உறுப்பினர்களைக் கொண்ட அனைத்துலக அளவியல் அமைப்பின் மாநாடு 2018-ல் பாரிஸில் நடைபெற்றது.

இதில் கிலோகிராம், கெல்வின், மோல், ஆம்பியர் ஆகிய நான்கு அலகுகளின் வரையறையை மாற்றி அமைப்பதற்கான முன்மொழிவு கொண்டுவரப்பட்டது. 130 ஆண்டுகள் பழமையான கிலோகிராம் அலகுக்கு, பிளாங்க் மாறிலியை அடிப்படையாகக் கொண்டு வரையறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 2019 மே 20 அன்று (உலக அளவீட்டியல் தினம்) நடைமுறைக்கு வந்த இந்தப் புதிய வரையறைகள் பாடப் புத்தகங்களிலும் மாற்றியமைப்படும்.

இந்திய மரபணுத் தரவு

டெல்லியில் உள்ள மரபணுத்தொகையியல் - ஒருங்கிணைந்த உயிரியலுக்கான (IGIB) மையமும் ஹைதராபாத்தில் உள்ள செல்லுலார் - மூலக்கூறு உயிரியல் ஆய்வியலுக்கான மையமும் இணைந்து நாட்டின் பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த 1008 தனி நபர்களின் மரபணு வரிசைமுறையைச் சேகரித்துள்ளனர். முன்கணிப்பு - தடுப்பு மருத்துவத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள இந்தத் தரவு அடிப்படைக் கட்டுமானமாக இருக்கும்.

கிரிஸ்பரில் இந்தியாவின் சாதனை

அறிவியல் உலகில் சமீப காலமாகப் புயலைக் கிளப்பியிருக்கும் கிரிஸ்பர் (CRISPR) மரபணு திருத்தத் தொழில்நுட்பத்துக்குப் புதிய மாற்றாக, டி.என்.ஏ-வில் தேவையற்ற மாற்றங்களை ஏற்படுத்தாமல் உச்சபட்ட துல்லியத்துடன் கூடிய மரபணு திருத்தத்துக்கான மாற்று வழிமுறையை இந்திய விஞ்ஞானிகள் இந்த ஆண்டு கண்டறிந்துள்ளார்கள். மரபணு ரத்தக் கோளாறான அரிவாள் செல்சோகையைத் திருத்துவதற்கான வழிகளை இந்த மாற்று வழிமுறை கொண்டிருப்பதாக புரொசீடிங்க்ஸ் ஆஃப் நேஷனல் அகாடெமி ஆஃப் சயன்ஸஸ் (PNAS) என்ற அமெரிக்க அறிவியல் ஆய்விதழில் வெளியான ஆராய்ச்சிக் கட்டுரை கூறுகிறது.

கருந்துளையின் முதல் படம்!

விண்வெளி ஆய்வில் இந்த ஆண்டு நிகழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு கண்டுபிடிப்புகளுள் முதன்மையானதாகக் கருதப்படுவது கருந்துளை ஒன்று முதன்முறையாக ஒளிப்படம் எடுக்கப்பட்டது. நிகழ்வெல்லை தொலைநோக்கி (Event Horizon Telescope) ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சுமார் 200 அறிவியலாளர்களைக் கொண்ட குழு, மெஸ்ஸியர் 87 (M87) என்ற கருந்துளையின் ஒளிப்படத்தை முதன்முறையாக ஏப்ரல் மாதம் வெளியிட்டது.

உலகம் முழுக்கப் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்ட வானொலி அதிர்வெண் தொலைநோக்கியின் (radio telescopes) வலைப்பின்னல்களில் இருந்து பெறப்பட்ட பல்லாயிரம் ஒளிப்படங்களை இணைத்து கருந்துளையின் ஒட்டுமொத்தப் படத்தை அறிவியலாளர்கள் உருவாக்கினார்கள். ஒளிப்படத்தை உருவாக்குவதற்குக் காரணமான படிமுறைத் தீர்வை (algorithm) உருவாக்கிய 29 வயதான கேட்டி பௌமன் என்ற பெண் அறிவியலாளருக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுகள் குவிந்தன.

நிலவில் நிகழ்ந்தவை

நிலவில் மனிதர்கள் கால்பதித்த ஐம்பதாம் ஆண்டான 2019-ல் சீனா, இஸ்ரேல், இந்தியா ஆகிய நாடுகள் நிலவு ஆராய்ச்சியில் புதிய சாத்தியங்களையும் சறுக்கல்களையும் சந்தித்தன. ஜனவரி மாதம் சீனா ஏவிய சாங்’ஈ-4, நிலவின் மற்றொரு பக்கத்தில் பத்திரமாகத் தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது; ஏப்ரல் மாதம் இஸ்ரேல் தலைமையில் ஏவப்பட்ட முதல் தனியார் விண்கலம் நிலவில் மோதி தரையிறங்கியது; ஜூலை 22 அன்று இந்தியாவின் சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது.

நிலவின் தென்துருவத்தில் செப்டம்பர் 8 அன்று தரையிறங்கும் என்று விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சுற்றுவட்டப் பாதையில் இயங்கிக்கொண்டிருந்த சந்திராயன்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டருடனான தகவல் தொடர்பு, நிலவில் 7-ம் தேதி தரையிறங்குவதற்கு 2 கி.மீ. உயரத்தில் இருந்தபோது துண்டிக்கப்பட்டது. விக்ரம் லேண்டர் எங்கே என்ற தேடுதல் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தமிழகத்தைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் அளித்த தகவலின் அடிப்படையில் விக்ரம் மோதிச் சிதறிய இடத்தை நாசா டிசம்பர் 3 அன்று உறுதிசெய்தது.

150-ம் ஆண்டில் ‘நேச்சர்’!

நவீன அறிவியல் இதழியலில் ஆழமான தாக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்கும் ‘நேச்சர்’ ஆய்விதழ், 2019-ல் 150-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. வில்லியம் வோர்ட்வொர்த்தின் கவிதை வரி ஒன்றிலிருந்த ‘நேச்சர்’ என்ற வார்த்தையைத் தலைப்பாகக் கொண்டு, நேச்சரின் முதல் இதழ் 1869 நவம்பர் 4 அன்று வெளியானது.

ஹீலியம் வாயுவைக் கண்டறிந்தவர்களில் ஒருவரான நார்மன் லாகெய்ரை நிறுவன ஆசிரியாராகக் கொண்டு தொடங்கப்பட்ட நேச்சர், கடந்த ஒன்றரை நூற்றாண்டுகளாக அறிவியலின் பல்வேறு துறைகளில் நிகழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுகளை முதலில் வெளியிட்டிருக்கிறது; அவை அத்துறைகளையே பிற்பாடு புரட்டிப் போட்டன. நவீன அறிவியலை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திய முக்கியமான கண்டுபிடிப்புகளுள் பெரும்பாலானவை நேச்சரில்தான் முதலில் அறிவிக்கப்பட்டன. நேச்சரின் 150-ம் ஆண்டுச் சிறப்பிதழ் போற்றிப் பாதுக்காக்கப்பட வேண்டிய பொக்கிஷமாக வெளியாகி இருந்தது.

அபெல் பரிசு வென்ற முதல் பெண்

கணிதத்தில் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு, துறையில் வலுவான தாக்கத்தைச் செலுத்தும் கணிதவியலாளர்களுக்கு உலக அளவில் வழங்கப்படும் மதிப்புவாய்ந்த பரிசுகளில் முதன்மையானது அபெல் பரிசு (Abel Prize). ‘கணித நோபல்’ என்று அழைக்கப்படும் இந்தப் பரிசு, முதல்முறையாக ஒரு பெண்ணுக்கு இந்த ஆண்டு வழங்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த கேரன் உஹ்லென்பெக் (Karen Uhlenbeck)என்ற பெண் கணிதவியலாளருக்கு, ‘வடிவியல் வகையீட்டுச் சமன்பாடு, புலக்கோட்பாட்டின் ஒரு பிரிவான தரமதிப்புக் கோட்பாடு ஆகியவற்றில் முன்னோடிச் சாதனைகள் மற்றும் கணித இயற்பியல், வடிவியல் ஆகியவற்றில் இவருடையப் பணிகளின் அடிப்படைத் தாக்கம்’ ஆகியவற்றுக்காக அபெல் பரிசு அறிவிக்கப்பட்டது.

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் வருகைதரு மூத்த ஆராய்ச்சியாளராகவும் மேம்பட்ட ஆய்வுக்கான நிறுவனத்தில் (IAS) வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றும் உஹ்லென்பெக், அறிவியல் - கணிதத்தில் பாலின சமத்துவத்துத்தின் தேவையைத் தொடர்ந்து அழுத்தமாக வலியுறுத்தி வருபவர். அவருக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டிருப்பதை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.

விண்வெளியில் பெண்களின் நடை

நாசாவின் விண்வெளி வீராங்கனையான ஜெசிகா மெய்ர்-ஐச் சுமந்துகொண்டு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ISS) வந்துகொண்டிருக்கும் சோயூஸ் விண்கலத்தின் இந்த ஒளிப்படத்தை எடுத்தவர் கிறிஸ்டியானா கோச். அக்டோபர் 18 அன்று ISS-ல் ஏற்பட்ட மின்கலக் கோளாறைச் சரி செய்ததன் மூலம், முழுக்க முழுக்க பெண்களால் மேற்கொள்ளப்பட்ட முதல் விண்வெளி நடை என்ற சாதனையை இவர்கள் புரிந்துள்ளனர்.

தொழில்நுட்பத் தோல்விகள்

அறிவியல்-தொழில்நுட்பத்தில் பல கண்டுபிடிப்புகள், முன்னேற்றங்கள் ஏற்பட்ட ஆண்டாக 2019 அமைந்தாலும் முழுமைபெறாத தானியங்கிக் கார் தொழில்நுட்பம்; அடிப்படையில் இது சாத்தியமா என்ற கேள்வியுடன் உயிரியல்சார் அறவியலாளர்களின் கடுமையான விமர்சனைத்தை ஒருங்கே பெற்ற தலை மாற்று அறுவை சிகிச்சை போன்ற திகைக்கச் செய்யும், இன்னமும் கைகூடாத முன்னெடுப்புகள் அடுத்த ஆண்டுகளுக்குத் தள்ளிப் போடப்பட்டிருக்கின்றன.

விடைபெற்றவர்கள்

விண்வெளியில் நடந்த முதல் மனிதரான சோவியத் விண்வெளி வீரர் அலெக்ஸி லியோனோ; சமூகவியலாளரும் பொருளாதார வரலாற்றாய்வாளருமான அமெரிக்காவைச் சேர்ந்த இமானுவல் வாலர்ஸ்டீன்; கணிதத் துறையின் இரண்டு உயரிய விருதுகளான ஃபீல்ட்ஸ் மெடல், அபெல் பரிசு ஆகியவற்றை வென்ற மைகெல் அத்தியா ஆகியோர் இந்த ஆண்டு காலமான அறிவியலாளர்களுள் சிலர்.

கீழடி எனும் வரலாற்றுத் திருப்பம்!

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது கீழடி. இங்குள்ள தொல்லியல் தளத்தில், 2018 ஜூன் முதல் அக்டோபர்வரை நடந்த ஐந்தாம் கட்ட அகழாய்வின் முடிவுகள் இந்த ஆண்டு வெளியாகி பரவலான விவாதங்களைக் கிளப்பின. இங்கு கிடைத்திருக்கும் தொல்லியல் எச்சங்கள் ஒட்டுமொத்தத் தமிழக, இந்திய வரலாற்றையே மாற்றக்கூடியவையாகக் கருதப்படுகின்றன.

மொத்தம் 110 ஏக்கர் பரப்பளவைக் கொண்டிருக்கும் தற்போதைய கீழடி தொல்லியல் தளத்தில் வெறும் 10 சதவீதப் பகுதியில்தான் இதுவரை அகழாய்வு நடத்தப்பட்டிருக்கிறது. 2020 ஜனவரி முதல் செப்டம்பர்வரை ஆறாம் கட்ட ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. கீழடி முழுமையாக அகழாய்வு செய்யப்பட்டால் தமிழக, இந்திய வரலாற்றையே மாற்றி எழுதக்கூடிய சாத்தியம் மிக அதிகம்; சங்ககாலம் என்பது இன்னும் தொன்மையானது என்பதற்கு திட்டவட்டமான ஆதாரங்கள் நமக்குக் கிடைக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

5 mins ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

கார்ட்டூன்

2 hours ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

உலகம்

9 hours ago

மேலும்