இயேசுவின் உருவகக் கதைகள் 51: கனவு மெய்ப்படும் தருணம்

By எம்.ஏ. ஜோ

சில நிமிடங்களே நீடித்த ஒரு அரிய நிகழ்வுக்காக பல்லாண்டுகள் ஆவலோடு காத்திருந்த இரண்டு நல்லவர்களைப் பற்றி பைபிள் பேசுகிறது. இந்த இருவரில் ஒருவர் ஆண்; மற்றவர் பெண்.

இயேசு பிறந்து நாற்பது நாள்கள் கடந்தபோது, அவரை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் சடங்கினைச் செய்ய அவர் தாய் மரியாவும் யோசேப்பும் குழந்தை இயேசுவை தூக்கிக் கொண்டு நாசரேத்து ஊரிலிருந்து எருசலேம் நகரில் இருந்த ஆலயத்துக்கு வந்தனர். அந்த வேளையில்தான் இந்த இருவரும் ஆலயத்திற்கு வந்தனர்.

ஆலயத்துக்கு வந்த இந்த இருவருக்கும் அந்தக் குழந்தை யார் என்பது தெரிந்திருந்தது. மீட்பர் ஒருவர் பிறந்து, அந்நிய ஆட்சியாளரிடம் இருந்து அவர்களை மீட்டு, அவர்களுக்கு உரிமையும் வளமையும் தருவார் என்று யூத மக்கள் பல்லாண்டுகளாக மன்றாடி, ஏங்கி, எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், இத்தனை ஆண்டு கால மன்றாட்டுகள் கேட்கப்பட்டுவிட்டன. பல நூற்றாண்டு காலக் காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது என்ற பேருண்மை மற்ற யாருக்கும் தெரியவில்லை. இந்த இருவருக்கும் அது தெரிந்திருந்தது. மீட்ப ராகப் பிறந்திருக்கும் குழந்தை இப்போது அவரது தாயோடும் வளர்ப்புத் தந்தையோடும் ஆலயத்தில் இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்து இருவரும் ஆலயத்துக்கு விரைந்தனர்.

இருவரில் ஒருவர் சிமியோன். அவரைப் பற்றிய குறிப்புகள் சிலவே பைபிளில் உள்ளன. அவர் எருசலேம் நகரில் வாழ்ந்தவர். அறநெறி பிறழாத நேர்மையாளர். இறைப்பற்று மிக்கவர். தனது மக்களைப் போலவே வாக்களிக்கப்பட்ட மீட்பர் நிச்சயம் வருவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தவர் என்ற விவரங்கள் உள்ளன. அவரது வயது என்னவென்று குறிப்பிடப்படவில்லை. ஆனால், அவர் முதியவராகவே இருந்திருக்க வேண்டும் என்பது அறிஞர்கள், கலைஞர்கள் அனை வரின் கணிப்பு.

கடவுளின் வாக்குறுதி

அவருக்கு கடவுள் ஒன்றை வாக்களித்தி ருந்தார். வரவிருக்கும் மீட்பரைக் காணும் வரை அவர் சாகப் போவதில்லை என்ற உறுதி அவருக்கு அளிக்கப்பட்டிருந்தது. ‘தனக்கு தரப்பட்ட வாக்குறுதி நிறைவேறும் தருணம் இதுதான். இத்தனை ஆண்டுகளாகத் தான் ஏங்கி எதிர்பார்த்திருந்த தருணம் இதுதான் என்று உணர்ந்ததால் ஏற்பட்ட பேருவகையோடு, சிமியோன் மரியாவிடம் இருந்து குழந்தை இயேசுவை வாங்கித் தன் கரங்களில் ஏந்தி, வான்நோக்கி கண்களை உயர்த்தி வேண்டினார். “இறைவா, மக்கள் அனைவரும் காணும் விதத்தில் நீர் அனுப்பியுள்ள மீட்பரை என் கண்கள் கண்டுகொண்டன. எனவே உமது சொற்படி உம் அடியான் என்னை அமைதியில் நிம்மதியாகப் போகவிடும்” என்று வேண்டினார்.

'இந்தத் தருணத்துக்காகத் தானே இத்தனை ஆண்டுகளாக நான் காத்தி ருந்தேன்! மீட்பரை என் கண்களால் கண்டு, எனது கரங்களில் ஏந்திய பிறகு, இனி என் வாழ்வில் நிகழ்வதற்கு வேறு என்னவிருக்கிறது? ஏதும் இல்லை. எனவே நான் இனி நிம்மதியாக இவ்வுலகை விட்டுப் போகலாம்' என்ற அவரது நிம்மதிப் பெருமூச்சின் வெளிப்பாடுதான் இந்த மன்றாட்டு.

இயேசுவின் வருகையை அறிவித்தவள்

இந்தப் பேற்றைப் பெற்ற பெண் அன்னா எனும் வயது முதிர்ந்த விதவை. மணமாகி ஏழு ஆண்டுகள் மட்டுமே கணவரோடு வாழ்ந்து, அவரைச் சாவுக்குப் பறிகொடுத்த பின் ‘இனி திருப்பணியே என் வாழ்வு. ஆலயமே என் இல்லம்' என்று வாழ்ந்த அவருக்கு வயது எண்பத்தி நான்கு. வெறுமையும் விரக்தியும் சூழ்ந்திருக்க வேண்டிய விதவையின் வாழ்வை ஆலயப் பணிகள், பிரார்த்தனை, நோன்பு என்று நிரப்பிக்கொண்ட அவரும் அந்த வேளையில் ஆலயத்துக்கு வந்து, மனித உருவில் வந்திருக்கும் இறைமகனைக் கண்ணாரக் கண்டு கடவுளைப் புகழ்ந்தார். மற்ற குழந்தைகளைப் போன்றே தோன்றும் அந்த மழலையின் மகத்துவத்தை எல்லோரிடமும் எடுத்துச் சொன்னார்.

‘நீண்ட நாள் கனவு நிறைவேற வேண்டும். இந்த மகிழ்ச்சியான நிகழ்வு என் வாழ்விலும் நிகழ வேண்டும். இதனைச் சாதித்தே ஆக வேண்டும்' என்று நம்மில் பலர் ஒரு தருணத்துக்காகக் காத்திருக்கிறோம்.

சிலரது வாழ்வில் இந்தத் தருணங் கள் வருவதே இல்லை. இலவு காத்த கிளிபோல இவர்கள் காத்திருந்து, காத்திருந்து காலம் போனாலும் ஏக்கங்கள் நிறைவேறுவதில்லை.

சிலர் செய்யும் தவறுகளால் இத்தகைய தருணங்கள் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. காத்திருந்தது கிடைக்காமலேயே இவர்களின் காலம் முடிகிறது. எகிப்து நாட்டில் அடிமைகளாக அல்லலுற்ற யூத மக்களை மீட்டு, வழிநடத்தி, அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இஸ்ரேல் நாட்டுக்குக் கூட்டி வரும் பொறுப்பு மோசேக்கு அளிக்கப்பட்டது. அதற்காக எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டு, பல சிரமங்களை அவர் ஏற்றாலும், ஒரு கணத்தில் அவர்களை மீட்டுக்கொண்டு வந்த இறைவனை அவர் முழுதும் நம்பாத காரணத்தால் வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் தன் மக்களோடு நுழையும் உன்னதமான தருணம் அவருக்கு மறுக்கப்பட்டது. தொலைவிலிருந்து அந்நாடு அவருக்குக் காட்டப்படுகிறதே தவிர, நாட்டுக்குள் காலடி எடுத்துவைக்கும் பேறு தரப்படவில்லை.

நின்று காத்திருப்பவர்கள்

சிலர் சிமியோனைப் போல, அன்னாளைப் போல நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். ஆங்கிலப் பெரும் கவிஞர் ஜான் மில்டன் எழுதிய ‘ஆன் ஹிஸ் பிளைன்ட்நெஸ்' எனும் கவிதையின் கடைசி வரி பிரபலமானது. “வெறுமனே நின்று கொண்டு காத்திருப்போர்கூட பணியாற்றுபவர்களே.” (“They also serve who only stand and wait.”) காத்திருக்கும் காலத்தில் இவர்கள் இடைவிடாமல் மன்றாடுகிறார்கள். தொடர்ந்து முயலுகிறார்கள். அவர்களின் வேண்டுதல் கேட்கப்படும் வரை பொறுமையோடு காத்திருக்கிறார்கள்.

அடிமை முறை ஒழிப்பு, அரசியல் விடுதலை, தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சட்டப் பாதுகாப்பு, கறுப்பர் இன மக்களுக்குச் சம உரிமைகள், இரண்டு ஜெர்மனிகளின் இணைப்பு என மாற்றங்கள் நடக்க உலகம் எவ்வளவு காலம் காத்திருக்கவேண்டியிருந்தது!

காத்திருக்க இயலாதோர் பலவற்றை விரயமாக்கி விடுகின்றனர். இவர்களுக்குப் புரியாத ஒரு உண் மையை இறை நம்பிக்கை உள்ளோர் எளிதில் புரிந்துகொள்கின்றனர். அது என்ன? ‘வாக்களிக்கப்பட்டது வழங்கப்படும். கனவு மெய்ப்படும். ஆனால் நாம் குறிக்கும் நமது நேரத்தில் அல்ல. இறைவன் தீர்மானிக்கும் அவரது தருணத்தில்’ என்பதை புரிந்துகொள்வதால்தான் சிறிதும் தளராமல் அவர்கள் கண்கள் ஒளிரக் காத்திருக்கிறார்கள்.

சிமியோனுக்கும் அன்னாவுக்கும் தரப்பட்ட பேறு - வாக்குறுதி நிறைவேற்றப்படும் அழகிய, அற்புதத் தருணம் - நமக்கும் கிடைக்குமா?

(தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

சுற்றுச்சூழல்

3 mins ago

இந்தியா

2 mins ago

இந்தியா

16 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

25 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

36 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

43 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

மேலும்