அகத்தைத் தேடி 58: முட்டைக்குள் மேவும் சிறுபட்சி

By தஞ்சாவூர்க் கவிராயர்

மகான் மஹானந்தபாபா முஹம்மது அப்துல் காதிர் ஒலியுல்லாஹ் நாயகம் அவர்கள் (1891 – 1959) இஸ்லாமிய சாரத்திலிருந்து மாறாமல், ஒருமையின் அனுபவத்தை, மிக அழகான சந்தத்துடன் மிக எளிமையான பாடல்களாக உருவாக்கி அளித்தவர்.

கீழக்கரையில் பெரும்புகழ் பெற்ற குடும்பத்தில் அபூபக்கர் சித்திக் (ரலி) வம்சாவளி முகம்மது இப்ராஹீம்-ஷெய்கு நாச்சியார் தம்பதியருக்கு நான்காவது மகவாகப் பிறந்தார். அவர் வயிற்றிலிருந்தபோது ஷெய்கு நாச்சியார் ஆகாயத்தில் இருந்து ஒரு ஒளிப்பிழம்பு தன்னை நோக்கி வரக்கண்டார். ஆகவே அப்துல் காதிர் என்றே பொருத்தமான பெயரை குழந்தைக்குச் சூட்டினர். அப்துல் காதிர் என்றால் “எல்லாம் வல்ல ஆற்றலுடையோனின் தொண்டன்” என்று பொருள். “நான் பகிரங்கத்தில் அட்சர சொரூபம், அந்தரங்கத்தில் அதன் அர்த்தம்” என்பது போன்ற வாக்கியங்களும் அசரீரியாக ஷெய்கு நாச்சியாருக்குக் கேட்பதுண்டு.

நானே நீ, நீயே நான்

அப்துல் காதிர் சிறு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது நானே நீ, நீயே நான் என்று அடிக்கடி கூறுவார். குழந்தைகள் சிரிப்பார்கள். அந்த வழியே சென்ற மகான், “இக்குழந்தையும் நானும் ஒருவரே; உலகிற்கு நன்மை புரியப் பிறந்துள்ள அவதாரமே இவன்” என்றார். அம்மகானின் பெயர் முஹயத்தீன் அப்துல் காதிர் ஜெய்லானி என்பதாகும். மஹானந்த பாபா, பின்னாளில் தமது எல்லா பாடல்களின் ஈற்றடியிலும், ஜெய்லானியின் பெயரையும் சேர்த்துக்கொண்டார்.

முதுகுளத்தூரில் கல்வத்து நாயகம் என்ற ஞானியார் முப்பது ஆண்டுக்காலம் தனியறையில் நிர்விகல்ப சமாதியில் ஆழ்ந்திருந்தார். ஒருநாள், சமாதி நிலையிலி ருந்து விழித்த கல்வத்து நாயகம், முதுகுளத்தூர் பள்ளிவாசல் படிக்கட்டில் வீற்றிருந்தார். அவரைக் காண அலைகடல் எனக் கூட்டம் திரண்டது. அக்கூட்டத்தில் மகானந்த பாபாவும் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு வயது 19 தான்.

கல்வத்து நாயகம், மகானந்த பாபாவை நோக்கி கைகாட்டி அழைத்து தொழுகை நடத்துமாறு பணித்ததைப் பார்த்து ஊரே அதிசயித்தது. தொழுகை முடிந்ததும் கல்வத்து நாயகம், மகானந்த பாபாவை கட்டித் தழுவி முத்தமிட்டார். இதன் மூலம் மஹானந்த பாபா ஒரு ஆத்ம சொரூபி என ஊர்மக்கள் உணர்ந்துகொண்டனர்.

கீழக்கரையிலுள்ள மகானந்த பாபாவின் தர்ஹா

பாடல்களாகப் பொங்கிய பக்தி

மகானந்த பாபாவின் உள்ளத்தினின்றும் வெள்ளம்போல் ஞான உபதேசங்கள் இசை நயத்துடன் பொங்கி எழலாயின. ஒலியுல்லா அவர்களின் உள் ஒலியே அவரது அருட்பாடல்கள்.

“வித்துக்குள் மரம் கொப்பு வேருமானேன்-அந்த

வித்தைக் கொடுக்கும் மரம் போலுமானேன்”.

வித்து மரமாவது போல ஆத்மாவிலிருந்து கிளைக்கிறது உலகம் என்பதை புரியவைக்கும் உவமை.

கூட்டிலிருந்து கிளி கோபுரத்தின் மேல் உலவி

நாட்டில் பறப்பது போல் நானே நிரந்தரனே-

ஆத்ம சக்தி சைதன்ய வேகம் எடுத்து உலகெல்லாம் பரவி எல்லாம் தானே என்று உணர்வதை இவ்வரிகள் சுட்டுகின்றன. ஜகத்து மகத்து வினா விடைப் பாடலின் வரியில் ஒரு வெளிச்சத் துகள் இது.

ஆன உடலுயுர் ஆங்கொன்றி நிற்பது

ஏனிது விந்தையன்றோ - மகத்தாய்

ஏனிது விந்தையன்றோ-

விந்தையோர் முட்டைக்குள் மேவும் சிறுபட்சி

வந்ததைப் போன்றிடுமே.

திருவள்ளுவரின் குறள் ஒன்றோடு ஒத்திருப்பது இது.

குடம்பை தனித்து ஒழியப் புள்பறந்தற்றே

உடம்பொடு உயிராடு நட்பு.

உடலுக்கும் உயிருக்குமான நட்பு முட்டைக்குள் தனித்திருக்கும் பறவை போன் றது. பருவம் வந்ததும் பறவை பறந்துவிடும்.

மகானந்த பாபாவின் சமாதி

கொட்டாமல் குளவி ஆக்கும்

‘குளவியோர் புழுவினைக் கூட்டினிற் கொடு வந்து கொட்டாமற் குளவியாக்கும் கொள்கையது போலிந்தக் குவலயம் அனைத்துமே கூடியே என்னுள் நோக்கும்’ குளவியின் ரீங்காரம் ஒலியுல்லா நாயகத்தின் உள்ளத்தில் ஆன்மிக ரீங்காரத்தை எழுப்புகிறது. மற்றொரு பாட்டில்

பணியாரம் தித்திக்கும் பாங்கினிய வெல்லமாம்

பாகிலது சேர்ந்ததாலே - பாராதியண்டமும்.

பார்க்கில் சுவை மதுரமாம் பரனோடு சேர்ந்ததாலே

எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பாரதி பாடவில்லையா? பராசக்தி பாரதியின் உள்ளத்தில் குடிகொண்டாள். இந்த உலகம் கோடி கோடி இன்பங்கள் கொட்டிக் கிடக்கும் இடமாகிவிட்டது. மகானந்த கீதம் பாடல்கள் எல்லாமே இனிய, எளிய உபதேசக் களஞ்சியமாக இருக்கின்றன.

ஆன்மிகப் பயணங்கள்

தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று மக்களோடு கலந்துறவாடி தனது பாடல்களை இசையோடு பாடுவது நாயகம் அவர்களின் வழக்கம். இலங்கை, மலேயா போன்ற தேசங்களிலும் இவருக்கு அன்பர் கூட்டம் பெருகியதால் அங்கும் சென்றார்.

“ஞானம் என்பது வெறும் வார்த்தை. அநுபவமே அதன் அர்த்தம்.”

“சாந்தம் என்பது கண்மூடி இருத்தல் அதாவது ஒன்றுமில்லாதிருத்தல். சாதனம் என்பது பலவற்றையும் ஒன்றாய்க் காணுதல். அதாவது கண் விழித்திருத்தல்”.

“சத்தியம் என்பது கண்மூடல், கண் விழித்தல் இவை இரண்டுமே மறைந்து தோன்றுதல். அதாவது தன்னில் எல்லாப் பொருள்களையும் தன்னை எல்லாப் பொருள்களிலும் காணுதல்”

இவை அவரது அருள் மொழிகளில் ஒரு சில.

அவரது வாழ்வின் நிறைவுப் பகுதி மதுரையில் கழிந்தது. 18 ஆண்டுக் காலம் மதுரையில் தவ நிலையில் இருந்து 1959-ல் இறைவனோடு ஐக்கியமானார். அவரது திருமேனி, கீழக்கரைக்கு கொண்டு வரப்பட்டு அங்கே அடக்கம் செய்யப்பட்டது.

‘மஹானந்த கீதம்’ என்ற பெயரில் பாபாவின் பாடல்கள் பல்வேறு இடங்களில் பாடப்பட்டு வந்தன. அப்பாடல்களைத் திரட்டி முழு நூலாக்கி முதற்பதிப்பு 1958-ல் வந்திருக்கிறது. அதற்கு முன்னுரை வழங்கியவர் கவியோகி சுத்தானந்த பாரதியார். “மஹானந்த பாபாவின் மஹானந்த கீதம் வேதாந்த வீணையின் அறிவு முழக்கம்! ஆனந்தக் கூத்து!” என்று அவரது முன்னுரையில் புகழ்ந்திருக்கிறார்.

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : thanjavurkavirayar@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்