81 ரத்தினங்கள் 73: உயிராயப் பெற்றேனோ ஊமையைப் போலே

By உஷாதேவி

ராமானுஜரின் மடத்தில் வாய் பேச இயலாத ஒருவரும் சேவையாற்றி வந்தார். எந்தெந்தப் பணிகள் தேவைப்படுகின்றனவோ அவற்றை யெல்லாம் செய்தார். பாத்திரங்கள் சுத்தம் செய்வது, இலையெடுப்பது, தரையைச் சுத்தம் செய்வது எல்லாவற்றிலும் முன்நிற்பார். ராமானுஜரின் மீது அளவு கடந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார். இதற்கு நடுவில் உடையவரின் உபன்யாசங்களைக் கண்ணீர் மல்க கேட்டு உருகுவார்.

ஒருநாள் ராமானுஜர், கூரத்தாழ்வார் மற்றும் வாய்பேச இயலாத வைணவர் மூவர் மட்டுமே மடத்தில் இருந்தனர். ராமானுஜர் அவரைப் பார்த்து இங்கே வாரும் என்று அழைத்தார். உடையவர் தன் வாயால், அடியேனை அழைக்கிறாரே என்று மகிழ்ந்து அருகே சென்றார். உடையவர் அவர் கரத்தைப் பிடித்து அழைத்துச் சென்றார். ராமானுஜரின் ஸ்பரிசத்தால் அகமகிழ்ந்து காரேய் கருணை ராமானுஜா என்றெண்ணி அவருடன் சென்றார். ராமானுஜர் தனது அறைக்குள் அவரைக் கூட்டிப்போனார்.

அறையின் உள்ளே ராமானுஜர் அமர்ந்தார். வாய்பேச இயலாத வைணவரை நோக்கி, தனது பாதத்தைச் சேவிக்கச் சொன்னார். சேவித்தவுடன் ராமானுஜர் தனது இரண்டு திருவடிகளையும் தூக்கி ஊமை வைணவரின் தலைமேல் வைத்து திருவடி தீட்சை அளித்தார். கடவுளின் நாமங்களைச் சொல்ல முடியாதென்று இனி வருந்தாதே, என் திருவடியைத் தந்தேன் என்று ஆசிர்வதித்தார்.

‘உய்ய ஒரே வழி உடையவர் திருவடி’ என்று சொல்வதற்கு ஏற்ப, அவரின் திருவடி, தன் மீது பட்டதும் பரவச கதியடைந்தார். அவர் உயிர் சிறப்படைந்தது. ராமானுஜரை அவர் பார்த்துக் கொண்டேயிருக்க ராமானுஜர் திருப்தியா என்று கேட்டு அவரைத் திரும்ப வேலைக்கு அனுப்பிவைத்தார்.

சாஸ்திர, இதிகாசப் புராணங்கள் தெரிந்தும் வீணாய் போனேனே, உடையவர் திருவடி தீட்சை எனக்குக் கிடைக்கவில்லையே என்று வருந்தினார் கூரத்தாழ்வார். வாய் பேச இயலாத வைணவரைத் தழுவி ஆறமாட்டாமல் கதறி நின்றார்.

பெருமாள் கோயில்களில் இன்றும் நம்மாழ்வரின் திருவடியே சடாரியாக சாற்றப்படுகிறது. அதேபோலே நம்மாழ்வாரின் திருச்சன்னிதியில் ராமானுஜரின் திருவடியே சடாரியாகச் சாற்றப்படுகிறது.

அந்த வாய்பேச இயலாதவர் அடைந்த நற்கதியைப் போலே, அடியாளுக்குக் கிடைக்கவில்லையே சுவாமி என்று ராமானுஜரிடமே, தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினாள் நம் திருக்கோளுா் பெண்பிள்ளை.

(ரகசியங்கள் தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

53 mins ago

ஜோதிடம்

57 mins ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்