இயேசுவின் உருவகக் கதைகள் 10: கோயிலுக்கும் கூட வரும் ஆணவம்

By செய்திப்பிரிவு

எம்.ஏ.ஜோ

ஆலயம் செல்வோர் எல்லாரும் இறைவனின் அருள் பெற்றுத் திரும்புவதில்லை என்ற உண்மையை ‘பரிசேயரும் வரி தண்டுபவரும்’ என்ற கதை உரக்கச் சொல்கிறது.

“இருவர் இறைவனிடம் வேண்டுவதற்காகக் கோயிலுக்குச் சென்றனர்” என்று இயேசு கதையைத் தொடங்குகிறார்.

ஒருவர் பரிசேயர். மற்றவர் வரி தண்டுபவர். பரிசேயர் நின்றுகொண்டு, “கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபச்சாரர் போலவோ, இந்த வரி தண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன். வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன். என் வருவாயில் பத்தில் ஒரு பங்கைக் கொடுக்கிறேன்” என்றார்.

ஆனால், வரி தண்டுபவர் தொலைவில் நின்றுகொண்டு, வானத்தை நிமிர்ந்து பார்க்கக் கூடத் துணியாமல் தன் மார்பில் அடித்துக்கொண்டு, “கடவுளே, பாவியாகிய என் மீது இரங்கியருளும்” என்கிறார்.

இவர்கள் இருவரில் யார் கடவுளுக்கு ஏற்புடையவராகியிருப்பார்? யார் இறையருளைப் பெற்றிருப்பார்? வரி தண்டுபவரே என்று தெளிவாய், திருத்தமாகச் சொன்னார் இயேசு.

யூதர்களின் சட்டங்களை நுணுக்கமாகக் கடைப்பிடித்தவர்கள் பரிசேயர்கள். இது பாராட்டுக்குரியதுதான். ஆனால், இதனால் மட்டுமே தாங்கள் கடவுளுக்கு உகந்தவர்கள், கடவுளுக்கு நெருங்கியவர்கள் என நினைத்துக்கொண்டு, மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கினர். இது பெருந்தவறு என்ற உண்மையை விளக்குவதற்காக பரிசேயர்களுக்கு இந்தக் கதையை இயேசு சொன்னார்.

ஆலயத்துக்கு வந்த பரிசேயர் என்ன சொல்லி வேண்டுகிறார்? பாவ வாழ்வு வாழும் தீயவர்கள் என்று அவர் நினைக்கும் நபர்களைப் பட்டியல் போட்டு, “நான் அப்படி இல்லை” என்கிறார். அவரது அடுத்த பட்டியல் தனது நற்செயல்களைப் பற்றியது. அவ்வளவுதான்.

இவர் இறைவனை நினைக்கிறாரா? இறைவனின் இரக்கத்தை எண்ணி அவரைப் புகழ்கிறாரா? இல்லை. தன்னைப் பற்றித் தம்பட்டம் அடிப்பதிலேயே அவரின் பிரார்த்தனை கரைந்துவிடுகிறது. நான், நான் என்று தன்னைப் பற்றிப் பேசுவதை இறைவேண்டுதல் என்று எப்படிக் கருதமுடியும்?

இத்தகையோரை நார்சிஸ மனப்பான்மை கொண்டோர் என்கின்றனர். இந்தச் சொல் ஒரு கிரேக்கப் புராணக் கதையில் வரும் ஒரு இளைஞனின் பெயரிலிருந்து வருகிறது. தன்மீதே கொள்ளும் ஈர்ப்பு என்பது அழிவுக்கான பாதை என்பதே இக்கதை கற்பிக்கும் பாடம்.

இந்த மனநிலை கொண்டோர் சக மனிதருக்கு என்னவெல்லாம் செய்யக் கூடும் என்பதற்கும் இவர்களின் வாழ்வு எப்படி முடியும் என்பதற்கும் இலக்கியத்திலும் மனித வரலாற்றிலும் உதாரணங்கள் பல உள்ளன. பைபிளில் அரசர்கள் நூலில் வரும் அரசி ஈசபேல் (ஜெசபல்), வரலாற்றில் ஜெர்மனியின் ஹிட்லர், இத்தாலியின் முசோலினி, உகாண்டாவின் இடி அமீன் என்று பலர்.

எனவே ஆலயத்தில்கூட இறைவனை மறந்துவிட்டுத் தன்னையே முன்னிருத்தும் பரிசேயர் ஆலயம் போய் வேண்டினாலும் இறையருள் பெறாமலேயே திரும்பியதில் வியப்பில்லை.

ஆலயத்துக்கு வந்த இரண்டாமவர் வரி தண்டுபவர்.வரி தண்டுவோர் நாட்டை ஆண்ட உரோமையருக்காக சக யூதரை வற்புறுத்தி, துன்புறுத்தி வரி வசூலித்து, உரோமையரிடம் தந்தவர்கள். வரித் தொகையைவிட அதிகம் வசூலித்து, பெரும்பகுதியை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, ஒரு பகுதியைத் தங்களுக்கென்று வைத்துக்கொண்டவர்கள். எனவே, இவர்கள் பழி பாவத்துக்கு அஞ்சாத இனத் துரோகிகள் என்று மற்ற யூதர்கள் இவர்களை வெறுத்து ஒதுக்கினர்.

ஆலயத்துக்குள் வந்த இந்த வரி தண்டுபவர் தன் நிலையை முற்றிலும் உணர்ந்து, தான் ஒரு பாவி என்பதை ஏற்றுக்கொண்டு “கடவுளே, பாவி என் மீது இரங்கியருளும்” என்று வேண்டுகிறார். தன் நேர்மையாலும் பணிவாலும் இறை இரக்கத்தைப் பெறுகிறார்.

எனவே, நம் வேண்டுதல் கேட்கப்பட வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்? ஆலயத்துக்குள் நுழையும் முன் நம் காலணிகளைக் கழற்றி விடுவதுபோல, ‘நானே சிறந்தவன், நானே உயர்ந்தவன்’ என்ற ஆணவத்தையும், பிற மனிதரை இகழ்கின்ற இறுமாப்பையும் விட்டுவிட்டே நுழைய வேண்டும். நம்மிடம் உள்ள நல்லவற்றை மட்டுமல்ல, நம்மில் இன்னும் தங்கியிருக்கும் குறைகளையும் நாம் செய்கின்ற குற்றங்களையும் தயங்காமல் ஏற்றுக்கொண்டு, “இறைவா, அகந்தையினின்றும் ஆணவத்தினின்றும் என்னைக் காத்தருளும். உன் அருள் இல்லாவிட்டால் தீமையும் பாவமும் என்னை வென்றுவிடும். எனவே, எனக்கு இரக்கம் காட்டி, என்னை வழிநடத்தும்” என்று வேண்டினால் இறைவன் நம்மை ஏற்பார். நம் வேண்டுதலைக் கேட்பார்.

(தொடரும்)

கட்டுரையாளர்,

தொடர்புக்கு : majoe2703@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்