அகத்தைத் தேடி 31: புதுப்பானை ஈ போலே...

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்க் கவிராயர்

தனிவாழ்க்கையில் ஏற்பட்டு விடுகிற துயரம் சிலருக்கு வைராக்கியத்தையும் ஞானத்தையும் தந்துவிடுகிறது. சமூகம் தனக்கு இழைத்த அநீதியால் புழுங்கி மறையாமல், மெய்ஞ்ஞானத்தின் ரசவாதத்துக்கு ஆளாகி, வேதாந்தப் படைப்புகளைக் கொடையாக அளித்தவர் செங்கோட்டை  ஆவுடை அக்காள்.

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் ஒரு அந்தணக் குடும்பத்தில் பிறந்தவர் ஆவுடை அக்காள். பால்ய விவாகம் செய்விக்கப்பட்டார். இவருடைய கணவர் திருமணமாகி சில வருடங்களிலேயே, சிறுவப் பருவத்திலேயே மாண்டு போனார். சிறுமி ஆவுடை அக்காளுக்குத் தனக்கு நடந்த துயரத்தை உணரும் வயதாகவில்லை. அவள் தொடர்ந்து பாலகியாகவே விளையாடித் திரிந்து கொண்டிருந்தாள்.

செங்கோட்டை ஆவுடை அக்காள் பருவமடைந்தபோது, அக்கால பிராமண சமூகத்தினரின் வழக்கப்படி மகள் தலையை மொட்டையடித்தனர். வெள்ளைப் புடவை உடுத்தி வீட்டின் இருள்மூலையில் வாழ வைத்தனர்.

அன்னை கொடுத்த கல்வி

ஆவுடை அக்காளின் ஈடுபாட்டைப் பார்த்த அவருடைய அன்னை, ஊராரின் எதிர்ப்பை மீறி, தனது மகளுக்கு தக்க ஆசிரியர்களைக் கொண்டு கல்வி கற்பித்தார்.

இக்காலகட்டத்தில்தான் செங்கோட்டை தெருக்களில் ராமநாமம் பாடியபடியே வந்த திருவிசை நல்லூர் தர வெங்கடேச அய்யாவாளின் போதனைகளால் ஈர்க்கப்பட்டார். தன்னைப் போன்ற ஆதரவற்ற பெண்டிருக்காகவும் படிப்பறிவற்ற ஏனைய பெண்கள் ஆன்மிக ஞானம் பெறுவதற்காகவும் பாடல்கள் புனைந்தார்.

அநுபவ ரத்னமாலை, ஞானவாசிட்டம் என்ற நூலில் இருந்த கருத்துகளைப் பெண்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் பாடிய ‘சூடாலைக் கும்மி’, எளிய தமிழில் இயற்றப்பட்ட பகவத் கீதைப் பாடல்கள் ஆகியவற்றை இயற்றியுள்ளார். வேதாந்த சூட்சுமங்களை வெகு எளிய பதங்களுடன் பாடல்களைப் பலரும் பாடும்படி ஆவுடையக்காள் புனைந்திருக்கிறார்.

பெண்கள் பருவம் அடையும்போது நடத்தப்படும் சடங்கில் வழக்கமாகப் பாடப்படும் சம்பிரதாயப் பாடல்களோடு ஆவுடையக்காளின் ‘வித்தை சோபனம்’ என்ற பாடல்களையும் பாடுவது உண்டாம். உபநிடதக் கருத்துகளை உள்ளடக்கியும் தோழிப்பெண்கள் கேலிப் பேச்சாக மதங்களை நிந்திப்பதுமான இப்பாடல்களில் வரும் வரிகளின் மூலம் பருவம் அடைந்த பெண்ணுக்கு அவள் யாரென்று உணர்த்தி அறிவைப் புகட்டும்.

‘வேதாந்த ஆச்சே போச்சே’, ‘வேதாந்த அன்னே பின்னே’ போன்ற பதினான்குக்கு மேற்பட்ட பாடல் திரட்டுகள் இவரது ஆன்மிகக் கொடைகள்.

‘ஆவுடையம்மாள் சரித்திரம் பிரம்ம மேகம் எனும் சிறுபாட்டு பிரசுரத்திலிருந்து 1910-ம் வருடப் பதிப்பு’ என்ற சிறு நூலில் ஆய்க்குடி வெங்கடேச சாஸ்திரியால் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆவுடை அக்காளின் பாடல்களை  திருக்கோவிலூர் ஞானானந்த தபோவனம் வெளியிட்டிருக்கிறது.

அக்காலத்து இளம் கைம்பெண்களுக்கு அக்காளின் பாடல்கள் ஆனந்தமும் ஆறுதலும் தந்தன. நாகர்கோவில், ஆழ்வார்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி, சுந்தரபாண்டியபுரம் போன்ற பகுதிகளில் வாழ்ந்த பெண்கள் பத்து, பதினைந்து பேராகக் கூடிக்கொண்டு மதிய உணவுக்குப் பின் அக்காளின் பாடல்களைப் பாடுவது வழக்கமாக இருந்தது.

சுப்ரமணிய பாரதியை ஈர்த்தவர்

ஸ்ரீமதி கோமதி ராஜாங்கம் என்ற அம்மையார் எழுதியுள்ள ஆவுடை அக்காளின் வரலாற்றில் ஒரு அரிய செய்தி காணக்கிடைக்கிறது. அவரது சிறு நூலில் “ஸ்ரீ சுப்ரமணிய பாரதியார் அவர்களுக்கு ஸ்ரீஅக்காள் அவர்களின் பாடல்கள் என்றால் உயிர். அவரும் ஸ்ரீ அக்காள் வரலாற்றை அறிய முயற்சி செய்ததாகத் தெரிகிறது. அவருடைய அநேகப் பாடல்களின் கருத்துகளை ஒட்டியே அவரும் அநேக வேதாந்தப் பாடல்களைப் புனைந்திருக்கிறார். ” என்று குறிப்பிடுகிறார்.

பாரதியாரின் சில பாடல்களைப் பாரக்கும்போது அவர் ஆவுடை அக்காளின் மேல் கொண்ட ஈர்ப்பு புலனாகிறது. ‘வேதாந்தக் கும்மி’ ஆவுடையக்காள் பாடியது. பாரதி பாடிய ‘பெண்கள் விடுதலைக் கும்மி’ இதை ஒத்திருக்கிறது.

‘வேதாந்த ஆச்சே போச்சே’ என்ற அக்காளின் பாடலின் வரிகளை அடியொற்றியே பாரதி மறவன் பாட்டில் வரும் ‘சாதிச் சண்டை போச்சோ? உங்கள் சமயச் சண்டை போச்சோ?’ என்ற வரிகளை எழுதியிருக்க வேண்டும்.

ஆவுடை அக்காளின் பாடல்கள் நெல்லையின் பேச்சு வழக்கை ஒட்டிய எளிமையான தமிழ் நடையில் இருப்பதே தனிச்சிறப்பு. கிராமத்தில் அவர்கண்ட சாதாரணக் காட்சிகளும், வீட்டு விசேஷங்கள் ஆகியவற்றையும் வேதாந்தமாக விரித்துப் பொருள் உரைக்கும் வகையில் பாடல்களை இயற்றியிருக்கிறார்.

அவர் பாடலில் வரும் ‘புதுப்பானை ஈப்போலே போகமெனக்கில்லாமல்’ என்ற வரி அவர் நெஞ்சின் குமுறலை வெளிப்படுத்துகிறது.

ஆன்மானுபூதியில் திளைத்து லயித்து உன்மத்தையாக இருந்த ஆவுடை அக்காளைச் சாதிவிலக்கம் செய்யவும் முயற்சி நடைபெற்றது. ஆவுடை அக்காள் ஊரில் இருக்கப் பிடிக்காமல் தீர்த்த யாத்திரை சென்று மீண்டும் சொந்த ஊர் திரும்பினார். அவரது மகிமையை மக்கள் உணர்ந்து செங்கோட்டையில் மிகுந்த மரியாதையுடன் வரவேற்று சிறப்புச் செய்ததாகவும் அவருக்கு மிகப் பெரும் சீடர்குழாம் ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

ஒரு ஆடிமாத அமாவாசை அன்று குற்றாலம் சென்று அருவியில் நீராடி மலைமீது ஏறிச் சென்றவர் திரும்பவே இல்லை. எவ்வளவு தேடியும் அவர் உடல் கிடைக்கவில்லை.

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்