அகத்தைத் தேடி 28: மாம்பழ ஞானம்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்க் கவிராயர்

இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி

இறைவனே ஈண்டிறக்கஞ் செய்வான் - இறைவனே

எந்தாய் என இரங்கும் எங்கள்மேல் வெந்துயரம்

வந்தால் அதுமாற்று வான்

- காரைக்காலம்மையார்

அகத்திலேயே வாழுமாறு விதிக்கப்பட்ட பெண்டிருக்கு மெய்ஞ் ஞானத்தேடலுக்கு உரிமை இல்லை. அதையும் மீறி ஞானத்தேடலில் ஈடுபட்ட பெண்மக்கள் வரலாறுகள், இந்திய தத்துவ ஞானம் என்கிற வானத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பிரகாசிக்கவே செய்கின்றன.

காரைக்கால் அம்மையாரின் பூர்வாசிரமப் பெயர் புனிதவதி. பேரழகும் அறிவும் மிகுந்த புனிதவதி, பரமதத்தன் என்ற வணிக இளைஞருக்கு வாழ்க்கைப்பட்டார்.

ஒருநாள் கடையில் உட்கார்ந்து வியாபாரம் செய்துகொண்டிருந்த பரமதத்தனுக்கு அவனுடைய நண்பர் இரண்டு மாம்பழங்களைக் கொடுத்தார். மதிய உணவோடு சாப்பிடலாம் என்று அதை வீட்டுக்கு அனுப்பிவைத்தார் பரமதத்தர். அச்சமயத்தில் புனிதவதி வீட்டுக்கு வந்த சிவனடியாருக்கு அளிக்க உணவேதுமில்லை.

தயிர்ச் சோற்றைப் பிசைந்துவைத்து மாம்பழங்களில் ஒன்றை அரிந்து வைத்தார். சிவனடியார் சாப்பிட்டு வாழ்த்திச் சென்றார். மதிய உணவுக்கு வீட்டுக்குவந்த பரமதத்தனுக்கு அறுசுவை உணவுடன் மாம்பழத் துண்டுகளும் பரிமாறினார் புனிதவதி. மாம்பழத்தின் ருசி அபாரமாக இருந்தது.

“இன்னொரு மாம்பழம் இருக்குமே! அதையும் கொண்டுவா! ஆகா! என்ன ருசி!” என்றான் பரமதத்தன்.

அடுக்களைக்குள் புகுந்த புனிதவதி ‘இறைவா இது என்ன சோதனை’ என்று கைகளைப் பிசைய பிசைந்த கரங்களில் தோன்றியது ஒரு மாங்கனி.

ஓடோடி வந்து அதைக் கணவனுக்குப் பரிமாறினாள். பரமதத்தன் திகைத்துப் போனான். இப்படி ஒரு மாம்பழ ருசியை அவன் அனுபவித்ததேயில்லை. மனைவியைச் சந்தேகத்துடன் ஏறிட்டு “இது நான் அனுப்பிய மாம்பழமில்லையே! ருசியும் வெகு உன்னதமாக உள்ளதே உள்ளதைச் சொல் என்ன நடந்தது?” என்று வினவினான்.

புனிதவதி தயங்கித் தயங்கி நடந்தவற்றைச் சொல்ல பரமதத்தன் நம்பத் தயாராய் இல்லை.

“அப்படியானால் அந்தச் சிவபெருமான் மீண்டும் ஒரு மாங்கனி தருவாரோ?” என்று வினவ புனிதவதி நெஞ்சுருகி வேண்டி நின்றாள்.

அவள் கையில் மற்றொரு மாம்பழம் வந்து விழுந்தது.

பரமதத்தன் வியந்தான். பயந்தான். தெய்வசக்தி உடையவளாகத் தோன்றும் இவளோடு உடன் உறைவது தகுமோ? என்று மனம் மருண்டான். கணவனின் மனம் கோணாது இறைவனை வேண்டிப் பெற்ற கனியே அவனை விலக வைத்ததை எண்ணிக் கலங்கினாள் புனிதவதி.

பரமதத்தன் மனக்குமைச்சலுக்கு மருந்தாக கடல் வணிகம் மேற்கொண் டான். புனிதவதியோ தன்னை சிவ வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொண்டாள். இசைத்தமிழில் பாடல்கள் புனைந்து இறைவனை வழிபடலானாள். இவ்வகை வழிபாட்டுக்கு முதல்வியும் இவளே என்று பின்னாளில் பேர்பெற்றாள்.

பரமதத்தன் கடல் வணிகத்தை முடித்துக்கொண்டு நேரே மதுரை சென்று அங்கொரு பெண்ணை மணம் முடித்து ஒரு பெண் மகவும் பிறந்தது. அதற்குப் புனிதவதி என்றே பெயரிட்டான்.

காரைக்காலில் உற்றார் உறவினர் தனித்து வாழும் புனிதவதியைக்கண்டு மனம் வெதும்பி அவளை மதுரையில் வாழ்ந்த பரமதத்தனிடம் ஒப்படைக்க அழைத்துச் சென்றனர். அவனோ குடும்பத்தோடு அவள் காலிலே விழுந்து வணங்கி, இவள் தெய்வப் பெண் என்று உருகி நிற்க ஊராரும் அவளை வணங்கினர்.

பேய்வடிவம் எடுத்தார் அம்மையார்

புனிதவதியோ, கணவருக்காகத் தாங்கிய உடல் நீங்கி, இறைவரைப் போற்றுகின்ற பேய்வடிவத்தை அடியேனுக்கு நற்பாங்கு பொருந்த அருள வேண்டும் என்று சிவபெருமானை வேண்ட அவள் பேயுருவம் பெற்றாள். அன்று முதல் காரைக்கால் அம்மையார் என்றே அழைக்கப்படலானாள். அவள் வாயிலிருந்து இச்சமயத்தில்தான் அற்புதத் திருவந்தாதி பிறந்தது. திரு இரட்டை மணிமாலை தோன்றியது. திருவாலங்காடு மூத்ததிருப்பதிகம் மலர்ந்தது. சைவத்தமிழுக்கு அணிகலனாக ஆயின அவை.

கயிலாய மலைமீது தான் வணங்கும் சிவபெருமான் குடிகொண்டிருப்பதால் காலால் நடக்காமல் தலைகீழாகக் கைகளை ஊன்றி மலைமீது நகர்ந்து சென்றதாகக் காரைக்கால் அம்மையாரின் சிவபக்தி பற்றிச் சொல்லப்படுவதுண்டு.

பக்தியில் பழுத்த காரைக்கால் அம்மையாருக்கு, காரைக்காலில் சுந்தரம்பாள் உடனாய சோமநாதர் கோயில் சார்பில் ஆனி மாதத்தில் இன்றளவும் மாங்கனித் திருவிழா நடைபெறுகிறது. பெளர்ணமி அன்று இரவு சுவாமி வீதி உலா வருகையில் அவர்மீது பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து மகிழ்கின்றனர்.

அன்று காரைக்கால் அம்மையாரின் கரங்களில் இரு மாங்கனிகளை விழவைத்த இறைவனின் செயலுக்குப் பகரமாக ஏராளமான மாங்கனிகளை மேலிருந்து பொழிவது பொருத்தம்தானே?

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : thanjavurkavirayar@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்