அகத்தைத் தேடி 25: வாழ்வின் திகிலூட்டும் முகமூடி!

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்க்கவிராயர்

அண்டஞ் சிதறினால் அஞ்சமாட்டோம்

கடல் பொங்கி எழுந்தால் கலங்கமாட்டோம்

யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்

எங்கும் அஞ்சோம் எப்போதும் அஞ்சோம்!

கதவைத் திறந்தேன். நான் நினைத்தது சரி. வாசலில் வியாழக்கிழமை சன்னியாசி நின்று கொண்டிருந்தார்.

“சாவைக் கண்டு உங்களைப் போன்ற சன்னியாசிகளுக்கு வேண்டுமானால் பயமில்லாமல் இருக்கலாம். எங்களுக்கு அப்படியில்லை” என்றேன்.

பாரதியார் பாடலை வியாழக்கிழமை சன்னியாசி பாடிக் கேட்க வேண்டும். நீண்டகாலம் புதுவையில் வசித்தார் என்று தெரியும். பல வருடங்களுக்கு முன் மணக்குள விநாயகர் கோயிலில் முதலில் அவரைச் சந்தித்தபோது பழக்கமுண்டாயிற்று. வியாழக்கிழமைதோறும் எங்கள் வீட்டுக்கு வருவதுண்டு. “பாரதியார் சிலவேளை எனக்குள் புகுந்துகொண்டு பாடுவார். அரவிந்தர் என் வழியே பேசுவதுண்டு” என்றெல்லாம் சிலவேளை அவர் சொல்லும்போது தூக்கிவாரிப்போடும்.

தேங்காய்க்கீற்றுகளும் வாழைப்பழமும் கேட்டு வாங்கிச் சாப்பிடுவார். குடிப்பதற்கு வெந்நீர் வேண்டும்.

நான் நன்கு கனிந்த ரஸ்தாளிப்பழம், கொஞ்சம் தேங்காய் கீற்றோடு வெந்நீரும் கொண்டு வந்து வைத்தேன்.

அவர் சாப்பிடவில்லை. நேராக சுவர் ஓரமிருந்த குழாயடிக்குப் போய் கை கழுவி விட்டு வந்தார்.

“அச்சமே கீழ்களது ஆசாரம்” என்று திருக்குறள் சொல்லி விபூதி தந்தார்.

“என்ன சொன்னாய்? சாவைக் கண்டு அஞ்சுபவனே கேள். திகிலூட்டும் முகமூடி அணிந்து சாவென்னும் விளையாட்டை ஆட உன்னிடம் வந்துள்ளது வாழ்வேயாகும்!”

“இது அரவிந்தர் வாக்கு அல்லவா?”

“அதுதான் சொன்னேனே. என் வழியே அரவிந்தர் பேசுவதுண்டு…”

“சரி அரவிந்தரே பேசட்டும். என் பாமரக் கேள்விக்கு பதில் சொல்லும். அதிபயங்கர நோய் என்னைத் தாக்கும்போது வேதாந்தம் காப்பாற்றுமா?”

“நோய் என்பது ஒரு புதிய ஆரோக்கியத்தின் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் சாதனமே. சாவு என்பது அமரத்துவத்துக்குரிய திறவுகோலாகும். ஏன் இப்படி என்று கேட்காதே. அது இறைவனின் ரகசியம். உன் மனத்திலிருந்து அகங்காரத்தை நீக்கிவிட்டால் நான் சொல்வது புலனாகும்”.

“நோய் என்றால் மருந்து வேண்டாமா? மருந்து இல்லாமலேயே குணமாகிவிடுமா?”

மனத்தில் தெளிவு

“அச்சத்தின் காரணம் மனஉறுதி உடைந்ததே ஆகும். நீ எதற்காக அஞ்சுகிறாயோ எதை எண்ணிக் கலங்கு கிறாயோ, அதன் அதிர்வை உன் மனத்தில் திரும்பத் திரும்ப எழச் செய்கிறாய்!. அதாவது அது நிகழ்வதற்கு நீயே உதவுகிறாய், புரிகிறதா?”

“புரியும்படி சொல்லுங்கள்.”

“நோயாளிகளின் மனம் தனது உடலைப் பீடித்துள்ள நோயை ஆதரிக்கிறது. அதே நினைவில் ஆழ்ந்திருக்கிறது. இதனால் நோய் அநாவசியமாக நீடிக்கிறது... சாவில் முடிந்திருக்க வேண்டிய தேவையே இல்லாத நோய்கள் இதனால் சாவில் முடிகின்றன”

வியாழக்கிழமை சன்னியாசி இரண்டு தேங்காய்க் கீற்றுகளை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். ஒரு மிடறு தண்ணீர் குடித்தார்.

“சுவாமி எங்கள் மருத்துவ விஞ்ஞானத்தை லேசாக எடைபோட வேண்டாம். எங்கள் மருந்து எப்பேர்ப்பட்ட நோயையும் அழித்துவிடும்”

“உங்கள் மருத்துவ விஞ்ஞானம் வரமல்ல, சாபம்! தொற்றுநோய்களின் ஆற்றலை அது குறைத்துவிடுகிறது. அற்புதமான அறுவை சிகிச்சை முறைகளைக் கண்டுபிடித்திருக்கிறது. உண்மைதான். ஆனால், அது மனிதனின் இயற்கையான ஆரோக்கியத்தை நசிக்கப் பண்ணிவிட்டது! புதிய புதிய நோய்களைப் புகுத்திவிட்டது! மனித மனங்களில் அச்சத்தை விதைத்துவிட்டது!. மருத்துவர், மருந்து இரண்டையும் எப்போதும் சார்ந்து நிற்கிறது மனிதகுலம். நம் ஆரோக்கியம் நமது இயற்கையான நிலையை சார்ந்திருக்க வேண்டும். உங்கள் மருந்துகள்தாம் என்ன? ஆட்டங்கொடுக்கும் ஊன்றுகோல்கள் அல்லவா அவை?”

பேச்சு பிரசங்கமாகிவிட்டது. மனத்தில் தெளிவு கூடிவிட்டது.

“ம்...சொல்லுங்கள்.”

“மருந்துகள் நோயைத் தாக்கும்போது ஆத்மனின் சக்தி அவற்றைப் பின்னிருந்து ஆதரிப்பது தேவையாகும். அப்போதுதான் அவற்றால் உடலைக் குணப்படுத்த முடியும். ஆத்ம சக்தியைதொடர்ந்து இயக்க முடிந்தால் மருந்துகளே தேவையற்றுப் போகும்.”

ஒன்று சொல்கிறேன். “மருத்துவர்களும் மருத்துவமும் மிகக் குறைவாக இருந்த அந்தக் காலத்தில் தான் மனிதகுலம் ஆரோக்கியமாக இருந்தது!”

“அதற்காக மறுபடி அந்தக் கால மனிதனாக ஆகிவிடுவது சரியா?”

“ஒன்று சொல்லட்டுமா? வட இந்தியாவில் சில ஆதிவாசிகள் அவர்களுக்குக் காய்ச்சல் வந்தால் மிகக் குளிர்ந்த ஆற்று நீரில் ஒருமணி நேரம் உட்கார்ந்தால் காய்ச்சல் குணமாகிவிடும். இதை கல்வி கற்ற நாகரிகமனிதன் செய்தால் செத்துப்போவான்! குற்றம் சிகிச்சையில் இல்லை. பொய்மையான பழக்கங்களை நம் உடலுக்கு கற்பித்துவிட்டோம்!”

“கடவுள் ஏன்தான் இப்படி ஒரு வேதனையை மனித குலத்தின்மீது ஏவிவிட்டாரோ தெரியவில்லையே!” என்று புலம்பினேன்

வியாழக்கிழமை சன்னியாசி சிரித்தார்.

தெய்வம் நமக்குத் துணை

“ஆற அமர்ந்து அவ்வேதனையின் இன்பத்தை அத்துயரத்தின் மகிழ்வை, அந்த இன்னலின் நற்பேறு தன்னைத் துய்ப்பாயாக. அப்போது தனது விளையாட்டு வெளியாகிவிட்டது என்பதை இறைவன் கண்டுகொள்வான். தன் பேய்களையும் பூச்சாண்டிகளையும் உன்னிடமிருந்து அகற்றிவிடுவான்!”

வீட்டுக்குள்ளிருந்து பயத்துடன் எட்டிப் பார்த்த குழந்தையை அருகில் அழைத்தார். முதுகில் தட்டிக் கொடுத்து

“தெய்வம் நமக்குத் துணை பாப்பா-ஒரு

தீங்குவர மாட்டாது பாப்பா!” என்று கூறிவிட்டுத் தெருவில் இறங்கி நடந்தார் வியாழக்கிழமை சன்னியாசி.

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர்,

தொடர்புக்கு : thanjavurkavirayar@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

33 mins ago

தமிழகம்

30 mins ago

சினிமா

36 mins ago

இந்தியா

17 mins ago

கருத்துப் பேழை

26 mins ago

தமிழகம்

51 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இலக்கியம்

9 hours ago

மேலும்