தெய்வத்தின் குரல்: மூளை, இருதயம், ஞானம்

By செய்திப்பிரிவு

மூளைக்குத் தெரிகிறது வேறே; அதற்கும் ஆதாரமான உயிருக்கு தெரிகிறது வேறே. கோட்டான் கண்ணுக்கு வஸ்துக்கள் ராத்திரியில்தான் தெரிகிறது. பகலில் அதற்கு எதுவும் தெரிவதில்லை. மனுஷக் கண்ணுக்குப் பகலில்தான் தெரிகிறது. ராத்திரியில் தெரிவதில்லை. மூளைக்கு அனுபவம் தெரிவதில்லை.

அதற்குத் தர்க்கத்தையொட்டி விசாரிக்கிற அறிவு வாதம்தான் தெரியும். அனுபவம் தெரிகிற இருதயத்துக்கு, அறிவு வாதம் தெரிவதில்லை. ஜீவனின் சார சத்தியமான உயிரைத்தான் இருதயம் என்பது. ஆனாலும் இருதயம் லேசில் திறந்து கொள்வதில்லை. எதனாலோ மனுஷ்யர்களுக்கு மூளைப் பெருமையையே பெரிசாக வைத்திருக்கிறது.

புத்தியினாலே நிரம்ப வாதங்கள் செய்து லோகம் பூராவும் இன்றைக்கும் பிரமிக்கும்படியாக சித்தாந்தம் நிர்மாணம் பண்ணின ஆசார்யாளும், ‘சுருதி (வேதம்) சொல்கிற விஷயங்களை மூளையால் ஆராய்ச்சி பண்ணவே பண்ணாதே. நம் மூளைக்கு அதீதமானதை பரமாத்மாவே ரிஷிகளுக்கு ஸ்புரிக்கப் பண்ணி அவர்கள் லோகோபகாரமாக நமக்கு வேதங்களைக் கொடுத்திருக்கிறார்கள். சுருதி வாக்கியத்தைக் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளு’ என்றுதான் சொல்லியிருக்கிறார்.

ஆனால் அவரே புத்தியினால் எந்த அளவுக்கு சித்தாந்தத்தை நாட்ட முடியுமோ, அந்த அளவுக்கு ஆழமாகப் போய் அலசி அலசிப் பார்த்து, ஆக்ஷேபணை, சமாதானம் எல்லாம் விஸ்தாரமாகச் சொல்லிப் புஸ்தகங்கள் எழுதியிருக்கிறார். வைதிகமான எல்லா சம்பிரதாயங்களைச் சேர்ந்த ஆசார்ய புருஷர்களும், (அதாவது) ராமாநுஜர், மத்வர் முதலிய யாரானாலும் சரி, இப்படி ச்ருதியை ‘சப்த ப்ரமாணம்’ என்பதாக அப்படியே கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டு, ஆனாலும் தங்கள் கொள்கைகளை புத்தி ரீதியிலும்தான் விஸ்தாரமாக எடுத்துச் சொல்லி எழுதியிருக்கிறார்கள்.

உயிருக்குள் ஏற்படுவது

ஒரு சித்தாந்தமென்றால் அது சுருதி, யுக்தி, அனுபவம் என்ற மூன்றுக்கும் பொருந்துவதாக, மூன்றுக்கும் ஏற்புடையதாக இருக்கவேண்டுமென்ற கருத்தையே எல்லா ஆச்சார்யர்களும் பின்பற்றியிருக்கிறார்கள். சுருதி சொல்கிற விஷயங்களை அப்படியே ஏற்கவேண்டும். அதற்கு விரோதமில்லாமலும், அதன் முடிவுகளுக்கே கொண்டு விடுவதாகவும், அல்லது அதில் குறிப்பு மட்டும் காட்டியிருப்பதை நன்றாக விளக்கியும், அதில் சொல்லாமல் விட்ட விஷயங்களை நன்றாக ஆராய்ச்சி பண்ணியும் புத்திவாதம் செய்வதுதான் ‘யுக்தி’. முடிவிலே ச்ருதியும் யுக்தியும் அனுபவத்தில் கொண்டுவிட்டால்தான் பிரயோஜனம். அந்த அனுபவம் இருதயம் என்பதான உயிருக்குள்ளேயே ஏற்படுவது.

சுருதி, யுக்திகளினால் விளக்க முடியாத அனுபவங்கள் சித்தாந்தம் செய்கிற ஆசார்ய புருஷர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். இவற்றைக் காட்டியும் ஒரு ஆச்சார்யர் தாம் முடிவாகச் சொல்லவந்த பேரனுபவத்துக்குப் பக்கபலம் உண்டாக்கலாம். அந்த மகான்களுக்குத்தான் என்றில்லை. நம்மைப் போன்றவர்களுக்குக்கூடச் சில அனுபவங்கள் ஏற்படுகின்றன. அவற்றுக்கு புத்தி, யுக்தியால் காரணம் சொல்லமுடியாது.

ஒரு தாயாரின் நிறைந்த அன்பு, ஒரு ஸுஸ்வரமான வீணாகானத்தைக் கேட்டு அப்படியே சொக்கிப் போவது, நல்லதாக இல்லாததாகவும் இதே மாதிரி பல விஷயங்களை அனுபவத்தில் தெரிந்து கொள்கிறோம். இதற்கெல்லாம் யுக்தி காட்டமுடியுமா? இப்படிப்பட்ட அனுபவங்களை எடுத்துக்காட்டி, “இப்படியிப்படி ப்ரயத்க்ஷ அனுபவம் இருக்கிறதோ, இல்லையோ? நீயே பார்த்திருக்கிறாயோ, இல்லையோ? இதே அடிப்படையில் நாங்கள் சித்தாந்தம் பண்ணுகிற இந்த சமாசாரங்களையும் ஏற்றுக்கொள்” என்று ஒரு ஆச்சார்யர் ஒப்புவமை காட்டி இணைகாட்டி விஷயத்தை ஸ்தாபிப்பது, சுருதி-யுக்தி-அனுபவம் என்ற மூன்றில் கடைசியான அனுபவம் என்பதன் கீழ்வரும். கடைசியில் மகானுபவமாக சிஷ்யனுக்கே கிடைக்கிற சித்திதான் ஸ்வானுபூதி என்றும் அபரோக்ஷாநுபூதி என்றும் சொல்வது.

பிரகாசம் என்னும் ஞானம்

ஈஸ்வர பக்தி இருக்கிறவனுக்கே, அதோடுகூட அந்த ஈஸ்வர பக்திக்கு சமதையான குருபக்தியும் இருக்கிறவனுக்கே தத்துவார்த்தமெல்லாம் பிரகாசிக்கும் என்று சொல்கிறபோது அந்த பிரகாசம் என்பது இந்த அனுபூதி தான். ‘பிரகாசம்’ என்பதை அப்படியே மொழி பெயர்த்த மாதிரிதான் அவர்களும் (மேல்நாட்டினரும்) Enlightenment என்றும் Illumination என்றும் சொல்கிறார்கள்!
ஆக அது அனுபவ பிரகாசம்; வெறும் புத்தி பிரகாசமில்லை.

(புத்தி என்பதை மூளை என்ற அர்த்தத்தில் சொல்கிறேன்.) அனுபவம்தான் முக்கியம். ஆணிவேர். உபதேசம் மூளையோடு நிற்காமல் அனுபவமாகப் பழுக்கவேண்டுமானால் அதற்கு ஈஸ்வர பக்தியும், அதற்குக் கொஞ்சங்கூடக் குறைச்சலில்லாத குரு பக்தியும் இருந்தால்தான் முடியும். அதுதான் இருதயம் என்கிற நிலத்தைக் கிளறிவிட்டு அனுபவம் ஊற்றெடுப்பதற்கு வழி பண்ணும். அல்லது, இன்னொரு விதமாகச் சொன்னால், இருதயம் என்ற கதவைத் திறந்துவிட்டு ஞான ஜ்யோதிஸ் உள்ளுக்குள்ளே அடிப்பதற்கு வழி ஏற்படுத்தும்.

மூளையைச் சாணை தீட்டிக்கொண்டு யுக்தியினால் உள்ளர்த்தங்களை பிரகாசிக்கச் செய்து கொண்டாலும்கூட அந்தப் பிரகாசமும் ஆத்ம ஜோதியின் அனுபவ பிரகாசத்துக்கு வழி திறந்துவிடுவதாகத்தான் இருக்கவேண்டும். மூளை அகம்பாவக் கொழுப்புப் பிடித்துத் தன்னையே நிலை நாட்டிக்கொள்ளாமல், இப்படி வழி விட்டு, விலகிப் போவதற்கு பக்தி வேண்டும். ஈஸ்வர பக்தியும் அதற்குச் சமானமான குருபக்தியும் வேண்டும் என்று அந்த சுலோகம் சொல்கிறது.

(தெய்வத்தின் குரல் ஐந்தாம் பாகம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்