உயிர் வளர்க்கும் திருமந்திம் 108: ஆதிபகவதி முதற்றே உலகு

By செய்திப்பிரிவு

கரு.ஆறுமுகத்தமிழன்

கடவுள் மனிதர்களைப் படைக்கத் தொடங்கியபோது முதலில் படைக்கப்பட்டவன் ஆண் என்கிறது திருவிவிலியம். மாறாகப் படைப்பு பெண்ணிடத்திலிருந்தே தொடங்கிற்று என்கின்றன கீழை மரபுகள். கீழ்வரும் திருமந்திரப் பாட்டைக் கருதுக:

பெண்ஒரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதைமை;

பெண்இடை ஆணும் பிறந்து கிடந்தது;

பெண்இடை ஆண்என் பிறப்புஅறிந்து ஈர்க்கின்ற

பெண்உடை ஆண்இடைப் பேச்சுஅற்ற வாறே.

(திருமந்திரம் 1159)

ஆதியிலே பெண் இருந்தாள். அவளுக்குப் பெண்ணே பிறந்தாள். பெண்ணும் பெண்ணுமாகப் புணர்ந்துகொள்ள முடியுமா? பேதைமை இல்லையா? பின்னர்ப் பெண்ணிடத்திலிருந்து ஆண் பிறந்தான். பெண்ணிலே தோன்றி யவன்தான் ஆண் என்ற பிறப்புக் கமுக்கம் அறிந்திருந்தபோதிலும் ஆணைப் பெண் ஈர்த்தாள். ஆண் பெண்ணை அடைந்தான்; பின் பேச்சற்றுப் போனான். ‘பிறந்த இடத்தைத் தேடுதே பேதைமட நெஞ்சம்; கறந்த இடத்தை நாடுதே கண்’ (பட்டினத்தார், பொது, 172).

திருமூலர் கைக்கொண்டது இயல்பான விளக்கல் முறை அன்று; குழூஉக் குறி விளக்கல் முறை. மேற்பொருள் நீக்கி உட்பொருள் கொள்ளவேண்டும். கொள்கிறோம்; உட்பொருள் சொல்க என்பார்க்கு: அது பேச்சு அற்றுப் போன அனுபவ நிலையில்தான் விளங்கும்.

குழூஉக் குறி மொழியைத் தந்திர மரபும் வச்சிரயான பௌத்த மரபும் ‘சாந்தியா பாசை’, ‘சந்தா பாசை’ என்றும் கொண்டாடிப் பயன்படுத்துகின்றன. உயிர் வளர்ப்பில் பெற்ற அனுபவத்தை எளிய மொழி வழக்கில் சொல்ல முடியாதபோது கைக்கொள்ளுகிற குறியீட்டு மொழி அது. அந்த மொழியைத் தந்திர மரபு பெண்ணுக்கு உரியதாக்குகிறது. ஏன்? ஆண்களின் அறிவு எளியது; அளவையியல் அடிப்படையிலானது; புறவயமானது; வெளிப்படையாகப் பொருள் காண விரும்புவது; ஆணின் நீட்சியாகவே அனைத்தையும் முட்ட விரும்புவது. பெண் அறிவோ வலியது; குறியீட்டு அடிப்படையி லானது; அகவயமானது; உட்பொருள் தேடித் திளைப்பது; பெண்ணின் ஆழமாகவே அனைத்தையும் புதைத்து வைத்திருப்பது.

வாலைப் பெண்ணே

குறியீட்டு மொழியால் சொல்லப்பட்ட ஒன்றின் உட்பொருளை விளங்கிக்கொள்ள, ஆண் உள்ளிட்ட அனைத்தையும் தன்னில் புதைத்து வைத்திருக்கும் பெண்ணையே நாட வேண்டும். பெண்ணின் கருவறைச் சூனியம் எல்லாவற்றுக்கும் இடம் கொடுக்கும்.

இடம் கொடுத்து ஆட்கொள்ளும் கருவறையும் கருவறை வாசலும் பகம் எனப்பட்டன. பகத்தை உடையவள் பகவதி. பகவதியை இடம்பெயர்த்த ஆண்பால் பகவன். ‘அகர முதல எழுத்து எல்லாம் ஆதிபகவதி முதற்றே உலகு’ என்று அமைக்கும் தந்திர மரபு.

கையில்லாக் குட்டையன் கட்டிக்கிட்டான்; இரு

காலில்லா நெட்டையன் முட்டிக்கிட்டான்;

ஈயில்லாத் தேன்எடுத்து உண்டுவிட்டான்; அது

இனிக்குது இல்லையே வாலைப் பெண்ணே.

(சித்தர் பாடல்கள், கொங்கண நாயனார் வாலைக் கும்மி, 48)

கொங்கணர் என்ற சித்தரின் மேற்படிப் பாட்டு வெளிப்பொருளில் தெளிவான பாலுறவுப் பாடலாகவே தோற்றம் தருகிறது. ஆனால் அவ்வாறன்று. அவர் சொல்ல வருவது ஓர் அனுபவ நிலையை. கையே இல்லாதவன் கட்டிக்கொள்கிறான்; எவ்வாறு? காலே இல்லாதவன் முட்டிக்கொள்கிறான்; எவ்வாறு? ஈயே இல்லாமல் தேன் எடுக்கப்பட்டது; எவ்வாறு? அந்தத் தேன் இனிப்பே இல்லாமல் இருக்கிறது; எவ்வாறு? கொங்கணரின் முன்னோடி திருமூலர் சொல்கிறார்:

எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளைத்

தெருளாத கன்னி தெளிந்துஇருந்து ஓத

மலராத பூவின் மணத்தின் மதுவைப்

பிறவாத வண்டு மணம்உண்ட வாறே. (திருமந்திரம் 2885)

எழுதப்படாத புத்தக ஏட்டின் பொருளை, அறியாத கன்னி ஒருத்தி தெளிவாக ஓதுகிறாள். மலராத பூவின் மணத்தால் ஈர்க்கப்பட்டுத் தேன் உண்கிறது இன்னும் பிறக்காத வண்டு. இதென்ன கதை? எழுதவே படாத ஏட்டுக்கு என்ன பொருள்? அதை அறிந்தே இராத கன்னி எதை ஓதுவாள்? மலராத பூவுக்கு ஏது மணம்? இன்னும் பிறக்கவே பிறக்காத வண்டு எவ்வாறு ஈர்க்கப்பட்டுத் தேன் உண்ணும்?

உயிர் வளர்க்க விரும்புவார் தேடிக் கண்டுகொள்க.
(தேடுவோம்) கட்டுரையாளர், தொடர்புக்கு : arumugatamilan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

4 hours ago

இந்தியா

42 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்