அகத்தைத் தேடி: மணல் மூடிய மகான்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்க்கவிராயர்

கோவிந்தபுரம், கும்பகோணம் திருவிடைமருதூரை அடுத்த குடமுருட்டி ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கிறது. இங்கே அமைந்திருக்கும் ஸ்ரீபோதேந்திரர் அதிஷ்டானத்தை தேடிச்சென்றபோது வானம் கரும்கும்மென்று இருட்டியிருந்தது. அதிஷ்டானம் செல்லும் வழியோ, காவிக் களிமண் சேறாக நீண்டு கிடந்தது.

ஸ்ரீபோதேந்திரர் சுவாமிகள் உள்ளத்தில் குடிகொண்ட கருணை மேகங்கள் ராமநாமம் என்னும் பெருமழை பொழிந்த திருத்தலம் கோவிந்தபுரம். வாழ்வெனும் சேற்றுப் பாதையில் வழுக்கிவிடாமல் காப்பாற்றிய ராமநாமத்தை அளித்த அந்த மகானை எண்ணியபடி மழையில் நனைந்தபடி நடந்தேன். இறைவழிபாட்டில் உச்சரிக்கப்படும் ராமநாமத்தையே எல்லோருக்குமான எளிய ஆனால் ஈடு இணையற்ற வழிபாடாக எடுத்துரைத்தவர் போதேந்திராள் சுவாமிகள்.

மடத்துக்குச் சொந்தமான குழந்தை

காஞ்சிபுரத்தில் கேசவ பாண்டுரங்கயோகி என்பவர் ஸ்ரீமடத்தில் கைங்கரியம் செய்து வந்தார். நீண்டநாள் புத்திரபாக்கியம் இல்லாது வாடிய தம்பதியர், ஸ்ரீமடத்தின் சுவாமிகளின் அருள்வேண்டி நின்றனர். விரைவிலேயே அத்தம்பதியினருக்கு அழகிய ஆண்குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு புருஷோத்தமன் என்ற பெயரிட்டு வளர்த்து வந்தனர். குழந்தைக்கு ஐந்து வயதாயிற்று.

ஒருநாள் பாண்டுரங்கயோகி மடத்துக்கு கிளம்பும்போது குழந்தை தானும் வருவதாக அடம்பிடித்தான். சிறுவனை அழைத்துக்கொண்டு ஸ்ரீமடம் சென்று சுவாமிகள் முன்பு பக்தர்களோடு கைகட்டி வாய்பொத்தி நின்றார். குழந்தையும் அதேபோல் நின்றது.

இதைக் கண்டு வியந்த சுவாமிகள் “குழந்தை யாருடையது?” என்று கேட்டார். பாண்டுரங்கர் பக்தி மேலீட்டால் தங்கள் அருளால் தோன்றிய குழந்தை தங்களுடையதே ஆகும் என்றார்.

“அப்படியானால் குழந்தையை நமக்கே தந்து விடுவீரோ?” என்று கேட்டார் சுவாமிகள்.

“ஆம் தங்கள் விருப்பப்படியே ஆகட்டும்” என்று கூறிவிட்டார் பாண்டுரங்கர்.

குழந்தை அன்று முதல் மடத்துக்குச் சொந்தமாகிவிட்டான்.அவனுக்கு ஞானஸாகரன் என்ற நண்பன் கிடைத்தான். இருவரும் வேத சாத்திரங்களைக் கற்று குருபக்தியிலும் சிறந்து விளங்கினர்.

நண்பனுக்காக உயிர்த்தியாகம்

ஒரு முறை காஞ்சிமடத் தலைவர் காசியாத்திரை சென்றார். சீடர்கள் இருவராலும் அவர் பிரிவைத் தாங்க முடியவில்லை. சில மாதங்கள் கழித்து அவரைக்காண காசிக்குப் புறப்பட்டனர்.

கால்நடையாகவே யாத்திரை சென்ற இருவரும் வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாது பக்தர்கள் தரும் உணவை உண்டு பயணத்தைத் தொடர்ந்தனர். வழிப்பயணமோ இடர்கள் மிகுந்தது. இந்நிலையில் இருவரும் ஒரு உறுதி பூண்டனர். போகும் வழியில் இருவரில் ஒருவர் இறக்க நேரிட்டால் மற்றவர் காசி சென்று குருவை தரிசித்தபின்னர் கங்கையில் விழுந்து உயிரைவிட வேண்டும் என்பதே அந்த உறுதி.

அவ்வாறே செல்லும் வழியில் ஞானசாகரன் இறந்து விடுகிறார். புருஷோத்தமன் மட்டும் காசி சென்று குருவைத் தரிசித்தார். பின்னர் கங்கையில் மூழ்கி இறப்பது என்ற தன் முடிவை அறிவித்தார். குருவின் புருவங்கள் நெறிபட்டன .இதற்கான தீர்வு அவர் மனதில் பளிச்சிட்டது. சீடனுக்கு சன்னியாசம் அளித்துவிட்டால் அது மறுபிறவிக்கு ஒப்பாகும். ஆகவே அவர் கங்கையில் மூழ்கி உயிர்விடத் தேவையில்லை என்கிறார்.

புருஷோத்தமன் சன்னியாசம் பெற்று “பகவன்நாம போதேந்திர சுவாமிகள்” என்று அழைக்கப்படலானார். குருவின் கட்டளைப்படி காஞ்சிபுரம் திரும்ப ஆயத்தமானார். அப்போது குருசெல்லும் வழியில் பூரி ஜெகன்னாதம் சென்று அங்கு வசிக்கும் ஜெகன்னாத கவியிடம் நாம கெளமுதி என்ற அரியநூல் இருப்பதாகவும் அதனைப் பெற்றுக்கொண்டு காஞ்சி செல்லுமாறும் அறிவுறுத்தினார். இந்நூல் ராநாமத்தை சாத்திர பூர்வமானது என்று நிறுவுகிறது.

இதன் ஒரே ஒரு படிதான் ஓலைச் சுவடியாக இருந்தது. இதனை ஜெகன்னாத கவியின் வீட்டில் தீப வெளிச்சத்தில் ஒரே இரவில் படித்து மனதில் உருவேற்றிக்கொண்டு மறுநாள் காலை அந்நூலினை திருப்பிக் கொடுத்துவிட்டார்.

ராமநாமம் அருமருந்து

போதேந்திராள் காஞ்சி ஸ்ரீமடத்தின் 59-வது பீடாதிபதியாக நியமனம் பெற்றார். பிற மதங்களைச் சேர்ந்தவர்களும் ஜாதிமத பேதமின்றி இவரை அணுகி உபதேசம்பெற்றனர். ராமநாமத்தைப் பாடிமகிழ்ந்தனர். ராமநாமம் என்னும் அருமருந்தினைப் பெற்று அனைத்து மக்களும் உடற்பிணியும், மனப்பிணியும் நீங்கப்பெற்றனர். ஸ்ரீமடத்தில் மட்டுமின்றி கிராமங்களிலும் ராமநாம கோஷம் விண்ணைப்பிளந்தது. தாம்பீடாதிபதிஎன்ற பெருமை அவரிடமில்லை. ஏழைகளையும், நோயாளிகளையும்,மூடர்களையும், அநாதைகளையும் கண்டு உருகிப்போவார்.

காவிரிக்கரையில் சிறுவர்களுடன் விளையாடுவதே அவருக்குப் பிடித்தது. கோடைக்காலத்தில் ஒருநாள் மாலை மணல் அள்ளப்பட்ட குழியில் குதித்து தன் மீது மணல்போட்டு குழியை மூடுமாறு சிறுவவர்களிடம் தெரிவித்தார். இதுவும் விளையாட்டு என்று எண்ணி குழிக்குள் அமர்ந்த அவர்மீது மணலைப்போட்டு மூடிவிட்டனர். பொழுது விடிந்தது. ஊர்மக்கள் சிறுவர்கள் மணல்போட்டு மூடிய மகானை வெளியே எடுத்தனர். அவர் ஜீவ சமாதியில் ஆழ்ந்து விட்டார்.

மக்கள் எழுப்பிய ராமநாம கோஷம் வானமெங்கும் எதிரொலித்தது. இன்னும் எண்ணுவோர் மனங்களில் எல்லாம் ரீங்கரிக்கிறது.

(தேடல் தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : thanjavurkavirayar@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

27 mins ago

உலகம்

48 mins ago

வாழ்வியல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

மேலும்