கேன உபநிடதம்: ஆன்ம தியானம்

By செய்திப்பிரிவு

ரஞ்சனி பாசு

உடல் இயங்குகிறது, மனம் இயங்குகிறது – இதை ஓரளவு புரிந்து கொள்கிறோம். ஆனால், இவை யாரால் இயங்குகின்றன? இந்த உடல்-மனச் சேர்க்கை தான் எல்லாமுமா?. அல்லது அதற்குப் பின்னால் யாராவது உள்ளார்களா என்ற கேள்விக்கு விடைகாண முயல்கிறது கேன உபநிடதம். எது வாக்கினால் விளக்கப்பட முடியாதோ, எதனால் வாக்கு விளக்கம் பெறுகிறதோ, எது மனத்தால் அறியப்பட முடியாதோ, எதனால் மனம் அறியப்படுகிறதோ, எது கண்களால் பார்க்கப்படுவதில்லையோ, எதனால் கண்கள் பார்க்கின்றனவோ, எது காதுகளால் கேட்கப்படுவதில்லையோ, எதனால் காதுகள் கேட்கின்றனவோ, எது நாசியால் முகரப்படுவதில்லையோ, எதனால் நாசிமுகர்கின்றதோ அதுவே ஆன்மா.

இங்கே வழிபடப்படுகிற பொருள் ஆன்மா அல்ல என்பதை அறிந்து கொள்.‘கேன’ என்பதற்கு சம்ஸ்கிருதத்தில் ‘கேள்வி’ என்பது பொருள். சாம வேதத்தில் அமைந்துள்ள இந்த உபநிடதம் ‘கேன’ என்று துவங்குவதால் கேன உபநிடதம் என்றழைக்கப்படுகிறது. 35 மந்திரங்களுடன், நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது. இந்த உபநிடதத்துக்கு ஆதிசங்கரர், மத்வர் ஆகியோர் உரை எழுதியுள்ளனர்.

தேடலின் துவக்கம்

எதனால் விருப்பப்பட்டு, ஏவப்பட்டு மனம் செல்கிறது. எங்கும் நிறைந்து உலகை இயக்குகிற ஆற்றலான பிராணனை இயக்குவது யார்? வாக்கு எதனால் ஏவப்பட்டு இயங்குகிறது? கண், காது என்ற இரண்டு பெயர்களின் மூலம் அனைத்துப் புலன்களும் சுட்டிக் காட்டப்படுகின்றன, புலன்கள் யாரால் செயல்படுகின்றன? இந்தக் கேள்வியின் வழியாக தேடல் தொடங்குகிறது.

மனம் சுதந்திரமானதா அல்லது மனத்துக்குப் பின்னால் அதனை இயக்கியபடி வேறு ஏதாவது உள்ளதா என்பதை முதல் மந்திரத்தில் கேள்வியாக்குகிறது. காதின் காதாக,மனத்தின் மனமாக, வாக்கின் வாக்காக, பிராணனின் பிராணனாக, கண்ணின் கண்ணாக இருப்பது ஆன்மா.

உணர்வு விழிக்கப் பெற்றவன் இந்த உண்மையை உணர்ந்து, புலன் உலகில் இருந்து விலகி மரணமற்ற நிலையை அடைகிறான் என்ற பதிலை அடுத்த மந்திரம் கூறுகிறது. ஆன்மா எத்தகையது என்று எப்படி பிறருக்கு புரிய வைப்பது? உலகமும் உயிர்களும் நாம் அறிந்தவை. ஆனால், அவை ஆன்மா அல்ல. நாம் அறியாத உலகங்கள் எவ்வளவோ உள்ளன.

அவற்றை நாம் அதற்காக ஆன்மா என்று கூறிவிட முடியுமா? உலகப் பொருட்களைப் போல நாம் ஆன்மாவை அறிந்துகொள்ள முடியாதென்றும் சொல்கிறது. ஆன்மாவாக நம்மில் நிலவுகின்ற இறைவனை அறிவதற்கான ஒரு படியே நாம் புறத்தில் செய்கிற வழிபாடு என்பதை மனத்தில் இருத்தி, அவை அறுதிநிலை அல்ல என்பதை மனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இக்கருத்து அழுத்தமாக சொல்லப்படுகிறது.

அறிதலின் எல்லைகள்

‘என்னை எனக்குத் தெரியும். ஆன்மாவைத் தெரியாது, அதே வேளையில், தெரியாது என்று சொல்லவும் முடியாது’ என்று நம்மில் யார் நினைக்கிறானோ அவனே ஆன்மாவை அறிகிறான். நான் (அறிபவன்)-அறிவு-அறியப்படும் பொருள் இந்த மூன்றும் சேரும் பொழுதுதான் நாம் எதையும் அறிய முடியும். இந்த மூன்றும் மறைகிற இடத்தில் தோன்றுவதே ஆன்ம அறிவு.

உணர்வின் ஒவ்வொரு நிலையிலும் ஆன்மாவை அறிபவனே உண்மையில் அறிகிறான் என்பது கருத்து. ஆன்மா என்ற உணர்வுப் பொருளின் தொடர்பால் உடம்பு, மனம் போன்றவை உணர்வுப்பொருள் போல் தோன்றுகின்றன. வாழ்க்கையின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஆன்ம உணர்வு வெளிப்படுவதை உணர்பவனே உண்மையில்
ஆன்மாவை அறிகிறான். விழிப்புணர்வு பெற்றவர்கள் எல்லா உயிர்களிலும் ஆன்மாவை உணர்கிறார்கள். எங்கும் ஆன்மாவை உணர்ந்தவர்கள் மரணத்தை வெல்கிறார்கள்.

உதாரணத்தின் வழி

கடவுளின் வெற்றியை தங்களுடையதாக எண்ணிப் பெருமை கொண்டனர் தேவர்கள். அவர்களின் அகந்தையை அகற்ற கடவுள் ஒரு யட்சனின் வடிவில் தோன்றினார். அக்கினியை அழைத்து அந்த யட்சன் யார் எனக் கேட்டனர் தேவர்கள்.

யட்சனிடன் சென்ற அக்கினியை, நீ யார் என்றார் கடவுள். நான் அக்கினி அல்லது ஜாதவேதன் (அனைத்தையும் அறிபவன்) என்றான். உன்னிடம் என்ன சக்தி உள்ளது என்ற கேள்விக்கு, இந்தப் பூமியில் உள்ள அனைத்தையும் என்னால் எரிக்க முடியும் என்று பதிலளித்தான்.
யட்சன் ஒரு புல்லை வைத்து இதனை எரி என்றான். அக்கினி தேவனும் மிக விரைந்து அப்புல்லை அணுகினான்.

ஆனால் எரிக்க முடியவில்லை. தோல்வியுற்று திரும்பி தேவர்களிடம், அந்த யட்சனை எனக்குத் தெரியவில்லை என்றான். பிறகு தேவர்கள் வாயுதேவனை அனுப்பினர். யட்சன், வாயுதேவனிடமும் நீ யார் எனக் கேட்டர். நான் வாயு அல்லது மாதரிச்வன் (வானவெளியில் சஞ்சரிப்பவன்) என்றார். உன்னிடம் என்ன சக்தி உள்ளது என்பதற்கு இந்தப் பூமியில் உள்ள அனைத்தையும் என்னால் தூக்க முடியும் என்று பதிலளித்தான். யட்சன் ஒரு புல்லை வைத்தான். வாயுதேவனின் விரைவு அப்புல்லை ஒன்றும் செய்யவில்லை. தோற்றுத் திரும்பினான்.

பின்னர் இந்திரனை தேவர்கள் அனுப்பினர். அதற்குள் யட்சன் மறைந்தார். பொன் ஆபரணங்கள் அணிந்து மிகுந்த அழகுடன் தோன்றிய உமாதேவியை வானில் கண்ட இந்திரன், இந்த யட்சன் யார் என்று கேட்டான். “அது கடவுள். நிச்சயமாக அவரது வெற்றியையே நீங்கள் உங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்ந்தீர்கள்” என்று தேவி கூறினாள்.

அறிதலின் மேன்மை

ஆன்மாவை நமது உடல்-மனச் சேர்க்கைக்குப் பின்னால் உள்ள ஆன்ம உணர்வாக, உலகையே இயக்குகிற இறையுணர்வாக தியானிப்பதே உண்மையான ஆன்ம தியானம்.கேன உபநிடதம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

51 secs ago

சினிமா

48 mins ago

சினிமா

56 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்