உட்பொருள் அறிவோம்: உணர்வுள்ளது பிரபஞ்சம்

By செய்திப்பிரிவு

விவிலியத்தில் ‘கடவுள் மனிதனைத் தன் சாயலில் படைத்தார்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. தனிமனிதனின் உள்ளமைப்பும் பிரபஞ்சத்தின் உள்ளமைப்பும் ஒன்றே. அதனால்தான் ஒருவர் தன்னைப் புரிந்துகொண்டுவிட்டால் எல்லோரையும் எல்லாவற்றையும் புரிந்துகொண்டு விட முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதைத்தான் அண்டமும் பிண்டமும் வெவ்வேறல்ல என்று காட்டியிருக்கிறார்கள்.

இந்தப் பிரபஞ்சம் உணர்வுள்ளது; வெறுமனே கண்ணுக்குத் தெரிவது மட்டுமல்ல. இதன் வெளித்தெரியும் பரிமாணம் ஒரு அம்சம் மட்டுமே. மற்றவர்களின் வெளிப்படையான உருவத்தை மட்டும்தான் நாம் காண்கிறோம். அதனால் அவர்களுக்கு மனம், சிந்தனை, உணர்ச்சிகள், தன்னுணர்வு இவையெல்லாம் இல்லை என்று ஆகிவிடுமா? இதேபோல் புலன்களுக்குத் தெரியும் பிரபஞ்சத்தைப் பார்க்கும்போது, சூரியன், சந்திரன், கிரகங்கள், பிற கோள்கள், நியூட்ரான், புரோட்டான், எலெக்ட்ரான் என்று மட்டுமே பார்க்கிறோம். ஆனால் இந்தப் பிரபஞ்சம் பல்வேறு பரிமாணங்கள் கொண்டது. அதனால் பிரபஞ்சம் உயிருள்ளது; உணர்வுள்ளது.

சாபம், சாப விமோசனத்தின் இலக்கணம்

பிரக்ஞை என்று சொல்லப்படும் உணர்வுநிலை பல தளங்களைக் கொண்டது. ஒவ்வொரு தளமும் தன்னளவில் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. மேலே உயர்தளங்களுக்குச் செல்லச் செல்லக் கட்டுப்பாடுகள் குறைந்துகொண்டே வருகின்றன. சுதந்திரமும் அறிவுணர்வும் அதிகரிக்கிறது. கீழே செல்லச் செல்லக் கட்டுப்பாடுகள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. மேல்நிலையிலிருந்து கீழ்நிலைக்கு இறங்கும்போது அனுபவத்தளம் குறுகிப் போகிறது.

அதனால் சந்தோஷம் குறைந்து வேதனை அதிகமாகிறது. இந்த உண்மையைத்தான் சாபத்தின் விளைவாகத் தேவர்கள் மனிதனாகப் பிறவியெடுக்கிறார்கள் என்றும், மனிதர்கள் விலங்குகளாகப் பிறக்கிறார்கள் என்றும் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதுதான் சாபம், சாபவிமோசனம் இவற்றின் இலக்கணம்.

பல பரிமாணங்களும் பல தளங்களும் கொண்ட இந்தப் பிரபஞ்சத்தின் எல்லாப் பரிமாணங் களிலும் நாம் ஒரே நேரத்தில் இருக்கிறோம். புலன்களுக்குத் தட்டுப்படும் தளத்தை மட்டுமே நாம் கிரகிக்கிறோம். இதற்குப் பின்னால் இன்னும் சூட்சுமமான தளங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆழ்தளமும் மென்மேலும் நுட்பமான இயக்கங்களைக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு தளமும் தனக்கேயான சுய உணர்வும், நம்பிக்கைகளும், அவை சார்ந்த அனுபவச் சட்டகமும் கொண்டு விளங்குகிறது. தனிச்சுய (ego) உணர்வற்றுப் பிரபஞ்சப் பிரக்ஞையாக விரிந்திருக்கும் அறிவுணர்வு, படிப்படியாகத் தன்னைத் தனிமனமாக, தனியொரு ஆளாக, உலகத்தில் உலவும் நபராக விகசிக்கும் ஜாலம் இது.

தூய சக்தியின் விரிவு

மூல உணர்வுநிலையை முதல் தளம் என்று கொள்ளலாம். இது ஆதிநிலை. அதில் பொருள் ஏதும் கிடையாது. தூய சக்தியின் விரிவு அது; பிரபஞ்சம் உருக்கொள்வதற்கு முந்தைய நிலை; பிறப்பு - இறப்புக்கு முன்னால் உள்ள நிலை. இதில் நானும் இல்லை; மற்றவரும் இல்லை. காண்பவனும் இல்லை; காட்சியும் இல்லை.

அடுத்தது சாமானிய அறிவுணர்வு. அகண்டப் பிரக்ஞையில் ‘நான் - நீ’ என்று முதல் கட்டப் பிரிவு உண்டாகிறது. காண்பவனும் காட்சியும் தோன்றுகிறது. ஆனால் இந்த ‘நான்’ தனி ஆள் இல்லை. இது வெறும் பார்வை; மௌன சாட்சி.

மூன்றாவது தனிச்சுய உணர்வு. இதில் ‘நான்’ ஒரு தனி உயிராக உருக்கொண்டிருக்கிறது. ‘நான்’ அனுபவம் கொள்கிறேன் என்று உணர்ந்த நிலை இது. நான் தனியான ஒரு ஜீவன் என்று மற்ற எல்லாவற்றிலிருந்தும் பிரிந்த நிலை. தன்னையும் உலகையும் வெவ்வேறானவையாகக் காணும் நிலை இது.

நான்காவது நிலையில்தான் ‘காலம்’ என்னும் ஓட்டம் உணரப்படுகிறது. கூட்டு நினைவின் திரட்சி சரித்திரம் என்னும் உணர்வை ஏற்படுத்துகிறது. மரபு, தொடர்ச்சி, பரம்பரை, தலைமுறை போன்றவை இங்கேதான் பிரக்ஞையில் வெளிப்படுகின்றன. வாழ்க்கையின் இயக்கம் காலத்தின் ஓட்டமாகக் கிரகிக்கப்படுகிறது. பரிணாம வளர்ச்சி காலத்தின் ஓட்டத்தில் நிகழ்வதான கருத்து இந்தத் தளத்தில்தான் உருவாகிறது.

ஐந்தாவதான இந்த நிலையில்தான் தனிமனம் உருக்கொள்கிறது. தனியொரு மனிதனின் நினைவுப் பதிவுகள், சிந்தனை, எண்ண உருவங்கள், கருத்துக்கள், மன பிம்பங்கள் போன்றவை ஏற்படுகின்றன. இதுதான் நாம் பொதுவாக மனம் என்று சொல்லும் தளம். இதில்தான் தனிமனித ஆளுமை தோற்றம் கொள்கிறது. உலகத்தில் மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும், உறவு கொள்ளும் நபராக இந்த ஆகிருதி இயங்குகிறது.

ஆறாவது உணர்ச்சிகளின் கூத்தாட்டம் நிகழும் தளம். மனம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த விழைகிறது. உணர்ச்சிகள் மனத்தைக் கடந்து சீறிப் பாய்கின்றன. ஆழ்மனச் சக்திகள் கட்டற்று இயங்கும் இருள்வெளி அதுவாகும். வாழ்க்கை, மிகுந்த சிக்கல்கள் நிறைந்ததாக இங்கேதான் உணரப்படுகிறது. தான் வாழ்க்கைச் சுழலில் சிக்குண்டு தவிக்கும் அனுபவம் இங்கு ஏற்படுகிறது.

கடைசியில் ஏழாவதாக இருப்பது நம் பௌதிக உடல் இயங்கி நடமாடும் பௌதிக உலகம். புலன்களால் உணரப்படுவது. இயற்கை என்று நாம் அழைக்கும் பரிமாணம். பருப்பொருளால் ஆனது. அனைவராலும் தெரிந்துகொள்ளக் கூடியது. அனுபவத்தின் அடித்தளம்.

பிரபஞ்ச உணர்வுநிலை நோக்கி

முதல் மூன்று தளங்கள் உலக அமைப்புக்கு அடிப்படையாக அமைகின்றன. கடைசி மூன்று தளங்கள் தனிமனிதனின் இயக்கமாக இருந்து இயங்குகிறது. நடுநாயகமாக, நான்காவதாக இருக்கும் தளம் உலக அனுபவத்தை நிர்ணயிக்கிறது. இங்கேதான் சரித்திரம் நடக்கிறது. இந்தத் தளத்தில்தான் தனிமனிதனின் அறிவுணர்வு சரித்திரத்திலிருந்து விடுபட்டுப் பிரபஞ்ச உணர்வுநிலையாகத் தன்னை உணர முடியும்.

நாம் இந்தத் தளங்கள் எல்லாவற்றிலும் ஒரே நேரத்தில் ஒவ்வொரு கணமும் இயங்கிக்கொண்டு இருக்கிறோம். புராணங்கள் இந்த மாதிரியான ஆழமான உண்மைகளை நமக்குச் சூட்சுமமாக உணர்த்த முற்படுகின்றன. இவையெல்லாம் ஆன்மவளர்ச்சியையே நோக்கமாகக் கொண்டிருப்பவை; படிப்படியாக நம்மை நம் வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிச் செல்ல உந்துபவை.

ஆழ்ந்த கவனத்துடன் நம் பார்வை இயங்கும்போது நம்மால் நம் முழுமையை, அகிலத்தின் முழுமையை, உணரமுடியும். நாமும் அகிலமும் உள்ளமைப்பிலும் அடிப்படைத் தன்மையிலும் ஒன்றுதான் என்னும் பேருண்மையை அறிந்துகொள்ள முடியும்.

இந்தப் பேருண்மையைப் புரிந்துகொள்ளாததினால்தான் வாழ்க்கை துண்டுதுண்டாகப் பிளந்துபோய்த் துன்பமும் முரண்களும் நிரம்பியதாக இருக்கிறது. இதை உணர்ந்த பிறகுதான் உலகத்திலும் மனித இதயத்திலும் அன்பும் மகிழ்ச்சியும் ஒளியும் நிறைய முடியும்.

(ஒளி நிறையும்)
- சிந்துகுமாரன், தொடர்புக்கு: sindhukumaran2019@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

இந்தியா

33 mins ago

உலகம்

47 mins ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்