வானகமே இளவெயிலே மரச்செறிவே 35: குருடிமலையும் எவரெஸ்ட்டும்

By செய்திப்பிரிவு

- சு. தியடோர் பாஸ்கரன்

ஈரோட்டிலிருந்து கோவைக்கு சாலை வழியாக வந்தால், அடிவானில் ஒரு மலைத்தொடரும் அதன் வலது கோடியில் கோபுரம்போல் ஒர் உச்சியும் தெரியும். பிரிட்டிஷ் கால ஆவணங்களிலும் வரைபடங்களிலும் ‘லாம்ப்டன் சிகரம்' என்று இது குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எண்பதுகளில் நாங்கள் கோவையில் வசித்தபோது, பள்ளியில் படித்துக்கொண்டிருந்த எனது இரண்டு குழந்தைகளும் அவர்களுடைய நண்பர்களும் சேர்ந்து ‘Walden Nature Club' என்ற பெயரில் ஒரு இயற்கைக் குழுவை அமைத்திருந்தார்கள். அவர்களை அவ்வப்போது காட்டுக்குள் நடைப்பயணம் அழைத்துச் செல்வது என் வேலை.

குருடிமலை

காட்டுயிர், காட்டுநடை ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கு கோவை ஒரு சிறந்த இடம். பல சரணாலயங்களும் பாதுகாக்கப்பட்ட காடுகளும் மிக அருகிலேயே உள்ளன. தடாகம் கிராமத்துக்கு அருகே மாங்கரை எனும் காடு, சிறுவாணி அருவி, மருதமலை எனப் பல இடங்கள் உள்ளன. மருதமலையில் ஏறி, அடுத்த பக்கம் உள்ள அனுபாவி கோயில்வரை நடப்பது அருமையான அனுபவம். அந்தக் காலத்தில் இந்த இடங்களில் யாருமே இருக்க மாட்டார்கள்.
இவற்றில் எங்களுக்கு மிகவும் பிடித்தது குருடிமலை.

கோவையிலிருந்து மேற்கே பார்த்தால் தெரியும் மலைத்தொடர் இது. இது ஒருநாளில் முடிக்கக்கூடிய மலைநடைக்கு ஏற்றது. காலையில் ஏறி இருட்டுவதற்குள் இறங்கிவிடலாம் என்று இதைப் பற்றி எங்களுக்குச் சுட்டிக்காட்டியவர், அப்போது கோவையில் தங்கியிருந்த ஜான் ஹாரிஸ் என்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர். வேளாண்மை பற்றி ஆய்வுசெய்ய அவர் வந்திருந்தார். ‘இந்திய விவசாயிகள் ஏன் ஏழைகளாக இருக்கின்றனர்?' என்ற நூலை எழுதியவர் இவர்.

லாம்ப்டன் சிகரம்

காலை ஏழு மணிக்கு தடாகம் கிராமத்திலிருந்து செல்லும் ஒற்றையடிப்பாதையில் ஏறத் தொடங்கினோம். கிராம அஞ்சலகத்தில் வேலை செய்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர் எங்களுக்கு வழிகாட்டியாக வந்தார். வழியில் ஒரு சிறு ஓடை. மஞ்சள் தொண்டை சின்னானைப் பார்க்க முடிந்தது. மூன்று மணி நேரத்தில் உச்சியை அடைந்துவிட்டோம். அங்கிருந்து கோவை நகர் அழகாகத் தெரிந்தது. மலை மீது ஒரு சிறிய பெருமாள் கோயில். பூசாரியும் அங்கேயிருந்தார்.

அங்கிருந்து வடக்கு நோக்கி நடக்கத் தொடங்கினோம். ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வெள்ளைப்பூக்கள் கொண்ட மரங்களால் ஆன ஒரு காடு. எல்லா மரங்களும் ஒரே மாதிரி இருந்தன. இது ஒரு கைவிடப்பட்ட காபித் தோட்டம் என்று எங்களுள் ஒருவர் இனம் கண்டுகொண்டார். தோட்டத்தின் மறுபுறத்தில் கேளையாடு ஒன்று எட்டிப் பார்த்தது. இங்கு பங்களாவின் சிதிலங்களைப் பார்க்க முடிந்தது. இந்த காபிக் காட்டுக்குப் பின்புறம் ஒரு செங்குத்தான, சிகரம் போன்ற மலை. அதுதான் ‘லாம்ப்டன் சிகரம்'. யார் இந்த லாம்ப்டன்?

இரண்டு ஆளுமைகள்

இந்தியாவின் நீள அகலங்களை அளந்து வரைபடம் தயாரிக்க உதவிய சர்வேயர் அவர். அமெரிக்காவில் பதினைந்து ஆண்டுகள் சர்வேயராகப் பணிபுரிந்தபின், கிழக்கிந்திய கம்பெனியில் ராணுவ அதிகாரியாகச் சேர்ந்திருந்தார் வில்லியம் லாம்ப்டன். திப்புசுல்தானுக்கு எதிராக மைசூர் போர் நடந்துகொண்டிருந்த காலகட்டம். ஒரு நாள் இரவில் லாம்ப்டன் சார்ந்திருந்த ஆங்கிலேயப் படை ஸ்ரீரங்கபட்டினத்தைத் தாக்க நகர்ந்துகொண்டிருந்தது.

வானில் விண்மீன்களின் நிலையைப் பார்த்து படை எதிர்த்திசையில் நகர்ந்துகொண்டிருக்கிறது என்பதை அறிந்து படைத் தளபதியிடம் சொன்னார் லாம்ப்டன். போரின் திசையும் மாறியது. படை முதல்வர் வெல்லெஸ்லியின் அபிமானத்துக்குப் பாத்திரமானார்.

திப்புசுல்தானை வென்ற பிறகு, இந்தியாவின் மேல் தன் பிடியை இறுக்கத் திட்டமிட்ட பிரித்தானியர்கள் நாட்டின் வரைபடத்தை துல்லியமாக வரைய முற்பட்டனர். இந்த அணிக்கு லாம்ப்டன் தலைவரானார். அவருக்கு உதவியாளராக ஜார்ஜ் எவரெஸ்ட் பணிக்குச் சேர்ந்தார் (பின்னால் உலகிலேயே உயரமான சிகரத்துக்கு இவருடைய பெயரிடப்பட்டது வரலாறு).

ஆண்டாண்டுப் பயணம்

இவர்கள் வரைபடம் தயாரித்த முறைக்கு ‘Trignometrical Survery' என்று பெயர். முக்கோணத்தை அடிப்படையாககக் கொண்டு இரு புள்ளிகளுக்கு இடைய உள்ள தொலைவைக் கண்டறியும் முறை. ஒரு உயரமான இடத்தில் ‘Theodolite' எனும் தொலைநோக்கி அளவைக் கருவியை வைத்து, அங்கிருந்து இரு புள்ளிகளை குறிப்பார்கள். இந்தப் புள்ளிகளிடையே உள்ள தொலைவு கணிக்கப்படும். இப்படியே முன்னேறுவார்கள்.

இவர்களுடைய அணி சில ஆண்டுகளில் இமய மலையை எட்டியது. வழியில் நாக்பூரில் லாம்ப்டன் இறந்துவிட்டார். அவருடைய கல்லறை அண்மையில்தான் கண்டறியப்பட்டது. இந்த அளவையிடும் முயற்சியைப் பற்றி ‘The Great Arc' என்ற நூலை எழுதிய ஜான் கே என்ற வரலாற்றாசிரியர், இவரது கல்லறையைத் தேடி கண்டுபிடித்தார். லாம்ப்டனின் வேலையைத் தொடர்ந்து எவரெஸ்ட் இந்திய எல்லைவரை போய், உலகில் உயரமான சிகரத்தை அவர் கண்டறிந்தார்.

பெரிய கோயில் உச்சி

லாம்ப்டன் பயன்படுத்திய தியோடலைட் கருவியின் எடை அரை டன் (500 கிலோ). இன்று இக்கருவிகளை சிறிய உருவில் சாலை அளவெடுப்போர் கையில் எடுத்துக்கொண்டு நடப்பதைப் பார்த்திருக்கலாம். இதன் அந்நாளைய உருவம் ஒரு ஆளைவிட உயரமாக, எஃகால் செய்யப்பட்டிருந்தது. லாம்ப்டன் தஞ்சாவூரில் அளவெடுப்பைத் தொடங்கியபோது, பெரியகோவில் உச்சிக்கு இந்த அரை டன் கருவியை 12 ஆட்கள் உதவியுடன் இழுத்துச் சென்றார். பாதியில் இக்கருவி கீழே விழுந்து நொறுங்கியது. மனம் தளராமல் உடைந்த கருவியை திருச்சிக்குக் கொண்டுபோய், ஒரு கூடாரம் இட்டு ஆறு மாதம் அதைப் பழுதுபார்த்து மறுபடியும் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து வரைபடப் பணியைத் தொடர்ந்தார்.

தமிழகமும் லாம்ப்டனும்

லாம்ப்டன் தன் வரைபடப் பணியை ஆரம்பித்து 200 ஆண்டுகளை நினைவுகூர சென்னை தாமஸ் மலையில் அவரது சிலையொன்று நிறுவப்பட்டு, அவர் செய்த வேலையைப் போற்றி ஒரு அஞ்சல்தலையும் வெளியிடப்பட்டது.
நான் ஏற்காடு செல்லும் போதெல்லாம் அங்குள்ள ‘ரிட்ரீட்' எனும் கத்தோலிக்க மடத்துக்குச் செல்வதுண்டு. அங்கிருந்து பார்த்தால், மேகமற்ற நாளில், லாம்ப்டன் சிகரத்தைப் பார்க்கலாம். இன்னும் சிறிது வலது புறம் நகர்ந்து பார்த்தால், மேட்டூர் அணையில் பரந்த நீர்ப்பரப்பும் தெரியும்.

(நிறைந்தது)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்