ஆங்கிலம் அறிவோமே - 135: சரியான சாப்பாட்டு ராமன்!

By ஜி.எஸ்.எஸ்

கேட்டாரே ஒரு கேள்வி

பெற்றெடுத்த அம்மாவையும் மம்மி என்கிறோம், எகிப்தில் ‘பாடம் செய்த’ உடலையும் மம்மி என்கிறோம். இரண்டு மம்மிகளுக்கும் ஆங்கிலத்தில் ஒரே எழுத்துகள்தானா? ஒருவேளை அக்காலத்தில் அன்னையின் உடலை மட்டும்தான் ‘பாடம்’ செய்தார்களா?

Metonymy என்றால் என்ன தெரியுமா? ஒரு வார்த்தைக்கு பதிலாக அது தொடர்பான மற்றொரு வார்த்தையைப் பயன்படுத்துவது.

Pen is mightier than sword என்றால் உண்மையிலேயே வாளைவிட பேனா பலம் வாய்ந்தது என்றா அர்த்தம்? இங்கே pen என்பது எழுத்தாளரையும், sword என்பது சிப்பாய்களையும் குறிக்கிறது. எழுத்தாளர்களால் மக்களை மேலும் உத்வேகத்தோடு செயல்பட வைக்க முடியும் என அர்த்தம்.

I have read Jeyakanthan என்றால் நீங்கள் ஜெயகாந்தனுக்கு நெருக்கமாகி அவரது எண்ணங்களை அறிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதில்லை. நீங்கள் அவரைப் பார்க்காமலேயேகூட இருக்கலாம். அவர் புத்தகங்களைப் படித்திருக்கிறீர்கள் என்பதுதான் பொருள்.

ஒரு நாட்டின் அரசைக் குறிக்க அந்த நாட்டின் தலைநகரைக் குறிப்பிடுவதும் இப்படித்தான் - இந்தக் கருத்தை வாஷிங்டன் ஏற்கவில்லை. பாகிஸ்தானின் குற்றச் சாட்டைப் புதுடெல்லி வன்மையாக மறுத்தது.

கேட்டாரே ஒரு கேள்விக்கான விளக்கம்: Mother என்பதைப் பேச்சு வழக்கில் mummy என்கிறோம். இதைப் பிரிட்டிஷார் mum என்றும் அமெரிக்கர்கள் mom என்றும் சுருக்கிக் குறிப்பிடுகிறர்கள்.

எகிப்தில் இறந்தவர்களின் உடலைப் பாதுகாத்தனர். நீர் புகாமல் இருப்பதற்காக அந்த உடலின்மீது கட்டுப்போட்டனர். அந்தக் கட்டு அவிழாமல் இருக்க அதன் மேல் மெழுகைத் தடவினர். பாரசீக மொழியில் மெழுகை ‘மம்’ என்பார்கள். இதிலிருந்து mummy வந்தது. மற்றபடி இதில் அம்மா சென்டிமென்ட் இல்லை.

“ஒரு பெரிய கிளப்புக்குப் போயிருந்தேன். அங்கே ‘Like natures form friendships’ என்று எழுதி வைத்திருந்தார்கள். இயற்கைப் பொருட்கள்கூட நட்பாக இருக்கும் என்று இதற்கு அர்த்தமா? புரியவில்லையே.”

அப்படியல்ல. Like என்பது இங்கே adjective ஆகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது விரும்புதல் என்ற அர்த்தத்தில் இல்லாமல் ஒரே மாதிரி என்ற அர்த்தத்தில் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். ‘ஒரே மாதிரி இயல்பு (இயற்கைக் குணம்) கொண்டவர்கள் நண்பர்கள் ஆகிறார்கள்’ என்று இதற்கு அர்த்தம்.

Like என்பது பல விதங்களில் பயன்படுத்தப்படுகிறது.

I have my likes and dislikes என்பதில் like ஒரு noun ஆகக் காட்சியளிக்கிறது. Children like sweets என்பதில் like ஒரு verb. She is just like her mother என்பதில் like ஒரு preposition ஆகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. They look like they have been having fun என்பதில் like ஒரு conjunction.

“இணையத்தில் ஒரு தகவலில் ‘I am’ என்பதுதான் ஆங்கிலத்தின் மிகச் சிறிய முழுமையான வாக்கியம் என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஒற்றைச் சொல்லில் சொல்லப்படும் go, come, eat போன்ற வார்த்தைகளும் முழுமையாகத்தான் இருக்கின்றன. அப்படியானால் இணையத் தகவல் சரியா?” என்று கேட்கிறார் ஒரு வாசகர்.

காரணம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் நண்பரே. Sentence என்பதற்கான விளக்கத்தை அளிக்கும் முக்கிய அகராதிகள் எல்லாமே ‘ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தையைக் கொண்ட’என்பது போலதான் குறிப்பிடுகின்றன. (ஆக்ஸ்ஃபோர்டு அகராதி ‘A set of words that is complete in itself’ என்று தொடங்கி sentence-ஐ வரையறுக்கிறது. மெரியம் வெப்ஸ்டர் அகராதி ‘A group of words that expresses a statement, question command or wise’ என்று கூறுகிறது. இந்த விதத்தில் அணுகும்போது உங்கள் கேள்விக்கான விடை கிடைத்துவிடுகிறது இல்லையா?

Kinking என்று ஒரு வார்த்தை உண்டா?

Kin என்றால் உறவினர். Kith and Kin என்று கூறுவதைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். Kith and Kin என்றால் நெருங்கியவர்கள் என்று பொருள்.

King என்றால் மன்னன். ஆனால் Kink என்றால் முறுக்குவது என்று கொள்ளலாம். அதாவது ஒரு கயிற்றையோ கம்பியையோ முறுக்குவது என்பதுபோல. திட்டத்தில் ஏதோ தடையோ குறையோ இருப்பது தெரியவந்தாலும் அதை kink என்பார்கள். ஒருவரது நடத்தையில் உண்டாகும் மாறுதலையும் இப்படிக் குறிப்பிடுவதுண்டு. கழுத்திலோ முதுகிலோ ஏற்படும் திடீர் பிடிப்பையும் kink என்பதுண்டு. மொத்தத்தில் நேராக இருக்கும் ஒன்றில் உண்டாகும் மாற்றம் என்பது இவற்றுக்குப் பொதுவான அர்த்தம். டச்சு மொழியில் உள்ள kinken என்பதிலிருந்து உருவானதுதான் kink. Kink என்பதன் present participleதான் kinking.

போட்டியில் கேட்டுவிட்டால்

A person in charge of museum is called

a) Actuary (ஆச்சுவரி)

b) Gourmet (கோர்மெய்)

c) Curator (கியூரேட்டர்)

d) Chaperon (ஷப்பரோன்)

அதாவது அருங்காட்சியகத்துக்குப் பொறுப்பானவரை எப்படிக் குறிப்பிட வேண்டும் என்பதைத்தான் கேட்கிறார்கள். Curator என்பதே சரியான விடை.

பிற வார்த்தைகளுக்கான அர்த்தங்களையும் தெரிந்துகொள்வோமே.

Insurance தொடர்பான கணக்கீடுகளைச் செய்பவர் Actuary.

‘சரியான சாப்பாட்டு ராமன்’ என்போமே, அதுபோல நல்ல உணவைத் தேடி ரசித்துச் சாப்பிடுபவர் Gourmet.

ஒரு பெண்மணியுடன் அவரது பாதுகாப்புக்காக உடன் செல்பவர் Chaperon என அழைக்கப்படுகிறார்.



சிப்ஸ்

# Phantom என்றால் முகமூடியா?

பேய் அல்லது பூதம். கற்பனை என்ற அர்த்தத்திலும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அதாவது reality என்பதற்கு எதிர்ச்சொல் போல. Clear the phantom from your head and grasp reality.

# Lion’s share என்றால்?

பெரும்பங்கு என்று அர்த்தம். The British who had a lion’s share in opium trade waged a war.

# Crib என்றால் என்ன அர்த்தம்?

தொட்டில்

# Scent என்பதில் எது silent letter s-ஆ? c-ஆ? ஆ என்ற கேள்விக்குச் சில வாசகர்கள் அனுப்பியுள்ள சுவாரசியமான ஆலோசனைகள்.

திருநெல்வேலி தியாகராஜ நகரைச் சேர்ந்த பி. ஜெகன்னாதன் ‘s, c’ இரண்டையுமே பாதிப் பாதி உச்சரிப்பு கொண்டதாக வைத்துக்கொள்ளலாமே என்கிறார்.

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த S.சுப்பிரமணியன் என்ற வாசகர் தன் நண்பரின் ஆலோசனையை இப்படிக் குறிப்பிடுகிறார்: “Scan என்பதைப் படிக்கும்போது skan என்பதுபோல் உச்சரிக்கிறோம். அதுபோல scent என்பதை இனி நாம் skent என்பதுபோல உச்சரிக்கலாமே?” அது சரி!

கோயம்புத்தூரைச் சேர்ந்த சுவாமிநாதன் புதிய கோணத்தில் இதை அணுகியிருக்கிறார். Scent என்பதன் லத்தீன் மூல வார்த்தை ‘sentire’. எனவே scent என்பதில் ‘c’ silent letter.

(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்