என்னைச் செதுக்கிய மாணவர்கள்: மாணவ விவசாயி இளஞ்செழியன்

By ஆயிஷா இரா.நடராசன்

ஆசிரியர் தட்டி உருட்டிக் காயப் போட்ட முகம்… மத்தியவர்க்க ஆணாதிக்கப் பாடத்திட்டம் வழங்கிய முகம்… வேலைவாய்ப்பு எனும் பெயரில் கார்ப்பரேட்டுகள் விரும்பிய முகம்… என எல்லா முகங்களும் எனக்கு இருக்கின்றன. சொந்த முகம் எங்கே? - பேரா ச. மாடசாமி (‘என் சிவப்பு பால்பாயிண்ட் பேனா’).

விவசாயமும் கல்வியும்

‘உங்கள் அப்பா என்ன வேலை பார்க்கிறார்?’ என்ற கேள்விக்கு வகுப்பறைகளில் குழந்தைகள் வாய்விட்டுச் சொல்லக் கூசும் வேலை: விவசாயம்! ‘நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்?’ எனக் கேட்டு வேலைவாய்ப்பு விருப்ப அட்டவணை ஐந்தாண்டுகளுக்கு முன்னால் தயாரிக்கப்பட்டது. இதில் பதிலளித்த குழந்தைகள் தங்கள் விருப்ப வேலைகளில் பிட்டர், டிங்கர் போன்ற வெல்டிங் வேலைகளைக்கூடத் தெரிவித்தனர். ஆனால், இந்தப் பட்டியலில் விவசாயம் பிடித்திருந்த இடம் என்ன தெரியுமா? 117.

இது எதைக் காட்டுகிறது? இந்தியர்களின் அடிப்படைத் தொழிலான விவசாயத்துக்கு எதிராக நமது கல்வி அந்த அளவுக்கு நுணுக்கமாக வேலை பார்த்துவருகிறது. ‘நீயெல்லாம் உருப்பட மாட்டே, மாடு மேய்க்கத்தான் லாயக்கு’, ‘நாளையிலிருந்து பள்ளிக்கு வராதே! வயல் வரப்பு வேலைக்குப் போ!’இப்படியான வசவுகளே தேசிய ஆன்மாவை உருக்குலைத்தன. இந்திய விவசாயிகள் தவறியும் தங்களது அடுத்த சந்ததி விவசாயத்துக்குள் நுழையக் கூடாது என்று தங்கள் விளைநிலத்தைக்கூட வந்த விலைக்கு விற்றுப் பணத்தைக் கட்டிப் பிள்ளைகளைப் படிக்கவைக்கிறார்கள் என்பதுதானே நிதர்சனம்!

ஒரு விவசாய நாட்டின் கல்வி எப்படி இருக்க வேண்டும்? விதைப்புக்கு ஒரு விடுமுறையும் அறுப்புக்கு ஒரு விடுமுறையும் அல்லவா விட வேண்டும். அதை விடுத்துக் காலாண்டு விடுமுறை, அரையாண்டு விடுமுறை, தேர்வு, முப்பருவப் புத்தகம் என விவசாயத்தை விட்டே சந்ததிகளைத் தூரத்தில் துரத்தி, ஏட்டுசுரைக்காயாகிவிட்டது கல்வி. விவசாயக் கல்வியை ஒரு பள்ளிப் பாடமாகக்கூட வைக்க இன்றுவரை நம் நாட்டுக் கல்வி அதிகார அமைப்பு பரிசீலிக்கவில்லை. இப்படியான சூழலில் விவசாயத்தை நோக்கிக் கல்வியை எப்படி எடுத்துச்செல்லலாம் என உணர்த்தியவர்தான் மாணவர் இளஞ்செழியன்.

சீனத்தில் அறிமுகமான கலாச்சாரக் கல்வி

கலாச்சாரக் கல்வி (Cultural Education) எனும் பெயரில் விவசாயத்தைக் கல்வியின் அங்கம் ஆக்கியவர் சீனப் பெண் கல்வியாளர் யாங் காய்ஹுயி (Yang Kaihui). இவர் செஞ்சீனத்தின் தலைவர் மா .சே.துங்கின் துணைவியார். 1920-களில் சீனப் புரட்சிக்கு முன்பே கலாச்சாரக் கல்வியை ஷாங்கி பிராந்தியத்தில் யாங் அறிமுகப்படுத்தினார். அப்போது மா.சே.துங் ஆரம்பப் பள்ளி அமைப்பின் இயக்குநராக இருந்தார். யாங் காய்ஹுயின் கல்வியில் மூன்று அடிப்படை அம்சங்கள் இருந்தன.

முதலாவதாக, உள்ளூர் மக்களின் அனுபவங்களையே பாடமாக மாற்றுதல். குறிப்பாக முதியோர், சாமானிய மக்கள் உழைத்ததுபோக மீதிப் பொழுதில் பள்ளிக்கு வந்து ஊர் சார்ந்த, தங்கள் உழைப்பு சார்ந்த விஷயங்களைக் குழந்தைகளிடம் பகிர்ந்துகொள்ளுதல். இதன் மூலம் முதன்முறையாகப் பள்ளிகள் கலாச்சாரப் பகிர்வு மையங்களாகின. இரண்டாவது, வயதுக்குத் தக்கவாறு சீன (பிராந்திய) மொழியில் வாசித்தல் எழுதுதல் தவிர உள்ளூர் விவசாய உற்பத்தியோடு இணைந்த பணிகளைக் கற்றல் எனும் புதிய மண் சார்ந்த கல்வி. மூன்றாவது, மிகவும் சுவாரஸ்யமானது.

மாலை நேரத்தில் குழந்தைகள் ஆசிரியர்களாக மாறுவார்கள். உள்ளூர் உழைக்கும் வர்க்க மக்களுக்கு அடிப்படைக் கல்வியைக் குழந்தைகள் கற்றுத்தருவார்கள். ஆக, ஒருவருக்கு ஒருவர் கற்க உதவுதல் (Educate Each Other) என்பதுதான் யாங் குவாய் ஹுயி அம்மையாரின் கலாச்சாரக் கற்றலின் அடிப்படை.

தேசப் பொருளாதாரத்தின் முதல் தளம் (Primary sector) உணவு உற்பத்திதான். ஆகையால்தான் விவசாயம் நாட்டின் முதுகெலும்பு எனச் சொல்லப்படுகிறது. இரண்டாம் தளமாக (Secondary Sector) விளங்குவது விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் தேவையான கருவிகளை, பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள். இவர்களுக்குச் சேவைபுரியும் தகவல் தொடர்பு, மருத்துவம், கல்வி, போக்குவரத்துத் துறை, சினிமா, இவையாவுமே மூன்றாவது தளமான சேவைத் துறை என்றார் காரல் மார்க்ஸ்.

இதன்படி கலாச்சாரக் கல்வி என்பது விவசாய அடிப்படைக் கல்வி என்று அறிவித்தார் யாங். தனது பள்ளிக்கு இயல்பான பள்ளி (Normal School) எனப் பெயரிட்டார். 1930-ல் யாங் அம்மையார் இறந்தார். அதன் பின்னர் 1966-ல் கலாச்சாரப் புரட்சியின்போது மா.சே.துங் மறக்காமல் தனது தலைமையில் சீனக் கல்வியை விவசாய ஆதரவுக் கல்வியாக்கிட யாங்கின் கலாச்சாரக் கல்வியைக் கட்டாயமாக்கினார்.

கற்றலைக் கலாச்சாரமாய்ப் பகிர்ந்துகொள்ளும் சிந்தனைதான் சீனப் பொருளாதாரம் இன்றுவரை தலைநிமிர்ந்து நிற்க முக்கியக் காரணமாகும். அதாவது, மக்களிடம் கற்று மக்களுக்கே அளித்தல் என்னும் கொள்கை.

ஆனால், இந்தியாவிலோ உணவு உற்பத்தித் துறைக்கு மதிப்பில்லை. மூன்றாவது அடுக்கான சேவைத் துறை நோக்கியே நம் கல்வி நகர்கிறது. இங்கு நடத்தப்படுபவை பெரும்பாலும் இயல்பு மாறிய பள்ளிகள் (abnormal schools). இந்த நிலையை மீறி விவசாயம் சார்ந்த கலாச்சாரக் கல்வி சாத்தியமே என எனக்குக் காட்டியவர்தான் இளஞ்செழியன்.

விவசாயப் பண்ணை முகாம்

எங்கள் பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவர்கள் நாட்டு நலப்பணித் திட்ட முகாமுக்காகத் தங்கியிருந்த கிராமத்தில்தான் இளஞ்செழியனைச் சந்தித்தேன். அவரும் எங்கள் பள்ளி மாணவர். அப்பா கிடையாது. அம்மா தனது சகோதரர்களுடன் இணைந்து அந்த ஊரிலேயே விவசாயம் செய்துகொண்டிருந்தார். நகர்ப்புறத்திலிருந்து வந்திருந்த மற்ற மாணவர்களுக்குக் கிணற்றில் குதித்து நீச்சல் அடிக்க, ஏற்றம் இறைக்க, பாத்திகளை நீர்வரத்துக்காகத் திருப்பிவிட, கால்நடைகளை ஒருங்கிணைக்க, தீவனம் வைக்கோல் போன்றவற்றைக் கையாள, தென்னை, பனை ஏற இப்படிப் பல்வேறு விஷயங்களை அந்தப் பத்து நாள் முகாமில் இளஞ்செழியன்தான் கற்றுத்தந்தார். அவர்களும் விருப்பத்துடன் கற்றார்கள். நம்ப முடியாமல் நான் பார்த்தேன்.

பத்து நாட்களும் அவர்களுக்கு உணவும் உறைவிடமும் அளித்துத் தற்காலிக விவசாயிகளாகப் பயிற்சியளித்தார் இளஞ்செழியன். எங்கள் பள்ளி மட்டுமல்ல தனது ஊரில் உறைவிட முகாம் இடுவதற்கு அடுத்தடுத்து மற்ற பள்ளி மாணவர்களுக்கும் அவர் வாய்ப்பளித்ததை அறிந்து நெகிழ்ந்தேன். ஒவ்வோர் ஆண்டும் இதுபோல பத்து நாட்கள் தேசத்தின் உயிர் மூச்சான விவசாயத்தில் பள்ளி மாணவர்கள் பங்குபெறுவதைக் கட்டாயமாக்கினால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என என்னை யோசிக்கவைத்த இளஞ்செழியன் உயிரித் தொழில்நுட்பம் படித்துவிட்டு இன்று தமிழக அரசின் கரும்பு ஆராய்ச்சித் துறையில் பணிபுரிகிறார்.

- தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

23 mins ago

இந்தியா

13 mins ago

விளையாட்டு

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்