தடம் பதித்த நூல்கள்: வாழ்வின் மீது காந்திஜி செய்த சோதனைகள்

By செய்திப்பிரிவு

காந்தியடிகள் எழுதிய சுயசரிதை ‘சத்திய சோதனை' என்ற பெயரில் இமயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. காந்தியின் வாழ்வைப் போலவே இந்த நூலும் எளிய பதிப்பாக வெளிவந்துள்ளது. காந்திஜியின் இந்த சுயசரிதை ‘My Experiments with Truth’ என்ற பெயரில் ஆங்கிலமாக்கப்பட்டது. அன்றைய முன்னணி நாவலாசிரியர் கல்கி இதனை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

இந்த நூலில், தனது அனுபவங்களையும் தன் வாழ்நாள் நிகழ்வுகளையும் பட்டவர்த்தனமாக, எவ்வித ஒளிவும் மறைவும் இல்லாது காந்திஜி உரைத்துள்ளார். பிற்காலத்தில் மகத்தான மனிதராக உருவாவதற்கு முன்பு காந்திஜி எல்லோரையும் போல் தவறுகளைச் செய்துள்ளார். கூச்ச சுபாவமுள்ள, மற்றவர்களுடன் பேசவும் பழகவும் அஞ்சக்கூடியவராக இளமைக் காலத்தில் இருந்த காந்திஜி பல தவறுகளைத் துணிந்து செய்துள்ளார்.

ஆங்கிலேயர்களைப்போல் பலம் பெற வீட்டாருக்குத் தெரியாமல் புலால் உணவைத் தொடர்ந்து உண்டுவந்தது, அதனை மறைப்பதற்காகப் பொய்களை அள்ளித் தெளித்தது, விபச்சார விடுதிக்குச் சென்றது, சுருட்டு குடிப்பதற்காக திருடியது, தன் சகோதரனின் தங்க நகையின் ஒரு பகுதியை வெட்டி எடுத்துத் தீய வழிகளில் செலவழித்தது, இந்தத் தவறுகளையெல்லாம் செய்ய உரிமையில்லையே என்ற ஆதங்கத்தில் தற்கொலைக்கு முயன்றது, தந்தையார் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நள்ளிரவில், மனைவியுடன் சல்லாபத்தில் ஈடுபட்டது என்று தான் செய்த தவறுகளையெல்லாம் ஒப்புக்கொள்ளும் துணிச்சல் காந்திஜியிடம் இருந்தது.

13 வயதில் திருமணமானவர் காந்திஜி. 40 வயது (1906) முதல் பிரம்மச்சாரியத்தைக் கடைபிடிக்கக் கடும் தவத்தில் ஈடுபடுகிறார். புலனடக்கத்தின் மூலம் தனது புத்தியையும் செயல்பாட்டையும் எப்படி மேம்படுத்த முடிந்தது என்று கூறுகிறார்.

பாரிஸ்டர் படிப்புக்காக இங்கிலாந்துக்குப் பயணமானபோது, தாய்க்குக் கொடுத்த மூன்று வாக்குறுதிகளைக் காப்பாற்ற அவர் எவ்வளவு சிரமப்படுகிறார் என்பது இந்த நூலின் மிகவும் சுவையான அத்தியாயம்.

சிறு வயதில் பார்த்த அரிச்சந்திரன் நாடகம் தன்னில் ஏற்படுத்திய தாக்கத்தால், தான் எவ்வாறு சத்தியத்தை உறுதியாகப் பற்றிக்கொள்ள முடிந்தது என்பதையும் ருஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாயின் இரு புத்தகங்கள் அகிம்சையின் மீது தனக்கு ஏற்படுத்திய தணியாத தாகத்தையும் காந்திஜியின் வார்த்தைகளில் அறியும் வாய்ப்பு இந்த நூலில் கிடைக்கிறது.

ஒரு வழக்கில் வாதாட தென்னாப்பிரிக்கா சென்ற காந்திஜி அங்கு நிலவிய கொடூர நிறவெறிக்கு எதிராக அங்கிருந்த இந்தியர்களைத் திரட்டிப் போராட வேண்டியிருந்தது. அதனால், வழக்கு முடிந்த பிறகும் அந்த நாட்டில் மேலும் 3 ஆண்டுகள் இருந்து போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். 1896-ல் முதல் முறையாக இந்தியா திரும்பியபோது, தாய் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைகிறார்.

தென்னாப்பிரிக்காவின் நேட்டால் மாகாணத்தில் நிறவெறி மிகக் கொடுமையாகக் கோலோச்சியது. அங்கு அதிகமாய் வசித்த இந்தியர்களின் உரிமைக்காகப் போராடுவதற்கு நேட்டால் இந்திய காங்கிரஸ் என்ற அமைப்பை உருவாக்குகிறார்.

அங்கு சமஸ்கிருதத்துடன் தமிழையும் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறார். அதனைத் தொடர முடியாமல் போனதற்கு வருந்துகிறார். தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் மட்டும் கற்கும் பள்ளிகளில் தனது குழந்தைகள் படிக்க வாய்ப்பு கிடைத்தபோதும் அதனை மறுத்துவிடுகிறார். அங்கிருந்த இந்தியர்களுக்கு கிடைக்காத கல்வியை தன் குழந்தைகளுக்குத் தர மறுக்கிறார். இதனால் அவரது மூத்த மகன் அவரோடு முரண்பட்டு அவரை விட்டுப் பிரிந்து இந்தியாவுக்குச் சென்றபோதும் தான் செய்தது சரியே என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்காக அவர் ஒருபோதும் வருந்தவில்லை. அதுதான் காந்தி.

தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியபோது, தனக்கு அளிக்கப்பட்ட ஏராளமான பரிசுப் பொருட்களை அவர் திருப்பித் தந்தது குறித்து கஸ்தூரிபாயுடன் நடத்திய வாக்குவாதம் சுவாரசியமானது.

தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்திய போராட்டங்களோடு இந்த சுயசரிதை முடிந்துவிடுகிறது. இடையில் ஓரிரு முறை இந்தியாவுக்கு வந்தபோது கோகலேவுடன் தொடர்புகொண்டுள்ளார். ஒருமுறை இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் தென்னாப்பிரிக்கா குறித்த தீர்மானத்தை காந்திஜி முன்மொழிந்தபோது அந்த மாநாடு அது குறித்து அக்கறையில்லாமல் இருந்தது இந்த நூலில் பதிவாகி உள்ளது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்த தென்னாப்பிரிக்கா ஒரு பயிற்சிக் களமாக காந்திஜிக்கு உதவியுள்ளது என்பதை இந்த நூல் நமக்குக் காட்டும். ஒரு மாமனிதனுக்குப் பின்னிருந்த எளிமையான வாழ்க்கையும் நம்மை வியப்படையச் செய்யும்.

சத்திய சோதனை
மகாத்மா காந்தியின் சுயசரிதம்
இமயம் பதிப்பகம்,
5, சட்டையப்பர் தெற்கு வீதி,
நாகப்பட்டினம்-611 001.
மொழி பெயர்ப்பு: ரா. கிருஷ்ணமூர்த்தி (கல்கி)
விலை ரூ.125/- பக்கம் 276.



தொடர்புக்கு: veeveekalai@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஓடிடி களம்

11 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்