சேதி தெரியுமா? - அப்துல் கலாம் அஞ்சல்தலை வெளியீடு

By பிரம்மி

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவாக, அக்டோபர் 15-ல் அஞ்சல்தலையும் அஞ்சல் உறையும் வெளியிடப்பட்டன.

கலாமின் 84-வது பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அஞ்சல் சேமிப்பு மையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அஞ்சல்தலை மற்றும் உறையை தமிழக அஞ்சல் வட்ட தலைவர் சார்லஸ் லோபோ வெளியிட்டார். சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் பெற்றுக்கொண்டார்.

உலகின் முதல் ஆட்டோமொபைல்

உலகில் முதன் முதலில் குதிரை இல்லாமல் இயங்கக்கூடியதாக, தயாரிக்கப்பட்ட பழம்பெரும் பென்ஸ் ஆட்டோமொபைலின் நகல் வாகனம் சாதனை முயற்சியாக கோவையில் இருந்து சென்னைக்கு அக்டோபர் 14 ல் புறப்பட்டது.

பென்ஸ் மோட்டார் நிறுவனத்திடம் இருந்து வடிவமைப்பு தகவல்களை பெற்று இந்த காரை ஜி.டி. நிறுவனம் 6 மாதங்களுக்கு முன்பு தயாரித்துள்ளது.

கடந்த 1888-ம் ஆண்டில் விஞ்ஞானி கார்ல் பென்ஸின் மனைவியும் சக விஞ்ஞானியுமான பெர்த்தா பென்ஸ் அவரது வீட்டில் இருந்து 194 கிலோ மீட்டர் வரை ஓட்டிச் சென்றார். அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக கோவையிலிருந்து சென்னை வரை 500 கிலோ மீட்டர் தூரம் இடைநில்லாமல் அந்த காரில் பயணம் செய்வதற்கான முயற்சியாக இது தொடங்கப்பட்டது.

மர்லான் ஜேம்ஸுக்கு புக்கர் பரிசு

ஜமைக்கா நாட்டு எழுத்தாளர் மர்லான் ஜேம்ஸ் (44), இந்த ஆண்டுக்கான மேன் புக்கர் பரிசை வென்றுள்ளார். ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர் இந்தப் பரிசை வென்றிருப்பது இதுவே முதன்முறை.

இவர் எழுதிய ‘ஏ பிரீப் ஹிஸ்டரி ஆப் செவன் கில்லிங்ஸ்’ என்ற புதினத்துக்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இந்திய எழுத்தாளர் சஞ்சீவ் சஹோடாவின் ‘தி இயர் ஆப் ரன் அவேஸ்’ மற்றும் 4 வெளிநாட்டு எழுத்தாளர்களை பின்னுக்குத் தள்ளி ஜேம்ஸ் இந்தப் பரிசை வென்றுள்ளார். லண்டனில் அக்டோபர் 13 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு பரிசு வழங்கப்பட்டது.

இதுகுறித்து ஜேம்ஸ் கூறும் போது, “இதை என்னால் நம்பவே முடியவில்லை. நாளை காலையில் தூக்கத்திலிருந்து எழுந்ததும் இவை எல்லாம் வெறும் கனவாக இருக்குமோ என்று உணர்கிறேன்” என்றார்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிறந்த புதினங்களுக்கு கடந்த 1969-ம் ஆண்டு முதல் புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.

கைலாஷ் சத்யார்த்திக்கு ஹார்வர்டு மனித நேயர் விருது

அமைதிக்கான நோபல் பரிசை வென்ற கைலாஷ் சத்யார்த்திக்கு ‘இந்த ஆண்டுக்கான ஹார்வர்டு மனித நேயர் விருது’ வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது.

சமுதாய முன்னேற்றத்துக்காக பாடுபடுபவர்களை கவுரவிக்கும் வகையில், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் ஹார்வர்டு மனித நேயர் விருதை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருது சத்யார்த்திக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு மார்ட்டின் லூதர் கிங், ஐ.நா.சபை செயலாளர்கள் கோபி அன்னான், பூட்ரஸ் புட்ரஸ்-கலி, ஜவீர் பெரஸ் டி க்யூல்லர், பான் கி-மூன், நோபல் பரிசு வென்றவர்களான ஜோஸ் ரமோஸ்-ஹோர்தா, பிஷப் டெஸ்மாண்ட் டுடு, ஜான் ஹியூம், எல்லி வீசல் உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

நீதிபதிகள் நியமனச் சட்டம் செல்லாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மத்திய அரசு கொண்டுவந்த தேசிய நீதிபதிகள் நியமனச் சட்டம் செல்லாது என்று அக்டோபர் 15 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தல், அவர்களுக்கு மாறுதல் உத்தரவுகளை வழங்குதல் ஆகிய பணிகளை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய மூத்த நீதிபதிகள் குழு கவனித்து வந்தது. ‘கொலீஜியம் நடைமுறை’ எனக் கூறப்படும் இந்த வழக்கம் 1993-ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது.

இதை மாற்றும் வகையில், தேசிய நீதிபதிகள் நியமனக் குழு என்ற புதிய நடைமுறையை மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்தது. இந்த சட்டம் நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடும் செயல் என்று உச்ச நீதிமன்ற பதிவு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பிலும் பொதுநல வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து மத்திய அரசின் சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

10 mins ago

கல்வி

24 mins ago

சினிமா

32 mins ago

தமிழகம்

43 mins ago

இந்தியா

36 mins ago

விளையாட்டு

52 mins ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்