என்னைச் செதுக்கிய மாணவர்கள்: கமர்கட்டு கணக்கு வாத்தியார்- காந்திமதி

By ஆயிஷா இரா.நடராசன்

குழந்தைகளுக்கு உகந்ததாக நல்ல கல்வி இருக்க வேண்டும். வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது கல்விக்கே உண்மையானதாக, உகந்ததாக இருக்கும்.

- புதிய கல்விமுறையை உருவாக்கிய கல்வியாளரும் மருத்துவருமான இத்தாலி நாட்டைச் சேர்ந்த மரியா மாண்டிசோரி.

நமது கல்வியை இன்றும் ‘ஏட்டுச் சுரைக்காய்’ என்று கேலி செய்கிறோம். அது குழந்தைகளின் அன்றாட வாழ்வுக்கும் எதிர்கால வாழ்வுக்கும் நெருக்கமாக இல்லாமல் விலகி இருக்கிறது. பள்ளிப் பாடத்திட்டத்தின் உள்ளடக்கமும் வழிமுறையும் மொழியமைப்பும் போதனாமுறையும் குழந்தைகளின் நிகழ்காலத்தைப் புறக்கணித்து, எதிர்காலத்தை மையப்படுத்தி (அல்லது அப்படிக் கருதிக்கொண்டு) முரட்டுத்தனமாக இயங்குகின்றன.

இந்த மனப்பாடக் கல்வி தேச நலனுக்கும் சமுதாய நலனுக்கும் ஏன் குழந்தைகளின் நலனுக்குமே தீமையை ஏற்படுத்துகிறது என்கின்றனர் கல்வியாளர்கள். வெற்றியாளர்களாகக் குழந்தைகளைக் கொண்டாட வேண்டும் கல்வி. ஆனால், எப்போதும் அவர்களது சின்னச் சின்னத் திணறல்களைக் கண்காணித்துப் பதிவுசெய்து வெறுப்புக்கு ஆளாக்குகிறது.

ஒரு அறிவியல் விதியோ, கணிதச் சமன்பாடோ வாழ்வில் எங்கே பயன்படும் என்ற தெளிவில்லாமலும் புரிதல் இல்லாமலும் ‘‘தேர்வுக்காகப் படி’’ என்று குழந்தைகளைக் கட்டாயப்படுத்தும்போது அது எப்படி கல்வியாக இருக்க முடியும்? ‘‘எதையும் உன்னிப்பாகக் கவனித்துக் கற்றுக்கொள்ளும் திறனை குழந்தைகள் பிறவியிலேயே பெற்றுள்ளனர்” என்கிறார் மரியா மாண்டிசோரி. “குழந்தை வளரிளம் பருவத்தை அடையும்வரை மூளை வளர்ச்சி படிப்படியாகத் தொடர்ந்து நடக்கிறது.

தான் பள்ளியில் படித்ததை தனது அன்றாட விளையாட்டின் ஒரு அங்கமாக மாற்ற குழந்தை துடிக்கிறது’’என்பார் அவர். அவரது இந்தக் கருத்தை நேரில் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அத்தகைய ஒரு மாணவர் என்னை விடச் சிறப்பாக, எளிய உதாரணங்களோடு கற்றுத்தர முடியும் என்ற உண்மையை எனக்குப் புரியவைத்தவர்தான் காந்திமதி.

பெருக்கலும் வகுத்தலும்

ஒரு தனியார் தொடக்கப் பள்ளியில் நான் மூன்றாம் வகுப்பில் எல்லாப் பாடங்களுக்குமான ஒரே ‘ஓர்’ ஆசிரியராக அப்போது பணியாற்றிவந்தேன். கூட்டல் கணக்கையும் கழித்தல் கணக்கையும் தாண்டி, பெருக்கலும் வகுத்தலும் அறிமுகமாகும் வகுப்பு அது. கூட்டலும் கழித்தலும் பாடமாக நடத்துவது எளிது. குழந்தைகளின் பத்து விரல்களுக்குள் ஏறத்தாழ எல்லாவற்றையுமே அடக்கிவிடலாம்.

ஆனால், 4x10=40 என்பதை நாலு பெருக்கல் பத்து என்றால் நாற்பது வரும் என்பதைப் புரியவைக்க எப்படி முயன்றாலும் குழந்தைகள் அதைத் தெளிந்து தேர்வது அவர்களது வாழ்வின் சிக்கலான தருணம். அதைப் போலத்தான் வகுத்தலும். பெருக்கல் வாய்ப்பாடு அட்டவணையை மனப்பாடம் செய்ய வைத்து காகிதம் மற்றும் எழுதுகோல் எல்லையை நமது கணக்கு தாண்டுவதே கிடையாது.

மாண்டிசோரி கல்விமுறையில் காகிதத்துக்கே வேலை கிடையாது. அது குழந்தைகளின் இயல்பான ஆர்வத்தால் அவசரமில்லாமல் இயற்கையான விளையாட்டு உபகரணங்களால் கட்டமைக்கப்படுகிறது. செயல்முறை கற்றலில் நாம் அதை இன்று பலவகைக் கோட்பாடு, போதனாமுறை நெறிகளாக்கி வகுப்பறை களுக்குள் எப்படியாவது கொண்டுவர முயன்றாலும் ஆசிரியர்களிடம் அதற்குப் பெரிய வரவேற்பு இல்லாதது வேதனையானது. அவர்கள் இன்னும் பாடநூல் சிலபஸ்- கரும்பலகை வகுப்புப்பாட நோட்டு, வீட்டுப்பாட நோட்டு எனும் வட்டத்திலிருந்து விடுபடவில்லை. என்னை இந்த வட்டத்திலிருந்து விடுபட வைத்தவர்தான் காந்திமதி.

கமர்கட்டுகளில் கணக்கு

கமர்கட், கொடுக்காப்புளி, எள் அடை, கடலை மிட்டாய், தேன் மிட்டாய், மாங்காய்க் கீற்று என விற்கும் குட்டிக்கடை இல்லாத பள்ளிக்கூட வாசல்களா? எங்கள் பள்ளிக்கூடம் அருகில் கடை விரிக்கும் அம்மையாரின் மகள்தான் காந்திமதி. அவர் என் வகுப்பில் படிக்கிறார் என்றுகூட நான் கவனிக்கவில்லை. காலைநேர இடைவேளை, மதிய உணவு இடைவேளைகளில் அந்தக் கடையில் குழந்தைகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

ஒரு நாள் மாலையில் கிளம்பும்போது கவனித்தேன். அந்தக் கடையில் அந்த அம்மையாருக்குப் பதிலாக ஒரு சிறுமி உட்கார்ந்திருந்தார். அவரைச் சுற்றி மாணவிகள் கூட்டமாக ஏதோ கூவி விவாதித்தனர். “பெருக்கல் ரொம்ப ஈஸி. பத்தை நாலால பெருக்கினா… இதோ பாரு” என்று குரல் வந்தது. பகலில் வகுப்பில் நான் நடத்திய அதே கணக்கு. நான் சற்று தள்ளி நின்றுகொண்டு ஓசையில்லாமல் அங்கு நடந்ததைக் கவனித்தேன்.

கண்ணாடி ஜார் கமர்கட் மிட்டாய்கள் அனைத்தையும் காந்திமதி அட்டையில் கொட்டினார். “இதோ பத்து” என்று எண்ணி ஒரு கூறு கட்டினார். பிறகு “இதோ பாரு நாலு பத்து” என்று பத்து பத்தாய் நான்கு கூறுகள் கட்டினார். “இப்போ எண்ணிப் பாரு” என்றார். அவர்கள் கூட்டமாக எண்ணினார்கள். நாற்பது வந்தது. “பத்தை நாலா பெருக்கினா நாற்பது. இதே மாதிரிதான் …. பெருக்கல் ரொம்ப ஈஸி புள்ள” என்று அவர் பாடம் நடத்தினார். “அப்போ வகுத்தலு?” என்றார் ஒரு மாணவி. “31-ஐ 3-ஆல வகு பார்ப்போம்” என்று சவால் விட்டார் அவர்.

தனது கமர்கட்டுகளை ஒன்றாய் குவித்தார் காந்திமதி. மொத்தம் 31 கமர்கட்டுகளை எண்ணிவைத்தார். “எத்தனையால வகுக்கிறோம் …மூணு… அதனால நாம் ஒரே மாதிரி, இதை மூணா கூறு போடணும்’’ என மூன்று மூன்றாய்ப் பிரித்துக்கொண்டே வந்தார். ‘‘கடைசியா … கையில ஒண்ணுதான் இருக்கு. இந்த ஒண்ணு மீதி… அங்கே எவ்வளவு இருக்கு?’’ மற்றவர்கள் எண்ணிப்பார்த்து “பத்து” என்று கத்தினார்கள் “அதுதான் விடை. ஒன்று மீதி. இதைத்தான் நாம் வாத்தியாரு போர்டுல நம்பரா போடுறாரு புரியுதா” என்று தனது பாடத்தை முடித்தார்.

இன்றைய வகுப்பில் நாம் கூட இந்த மாதிரி ஒரு விளையாட்டை வைத்து வகுத்தல் கணக்கைச் சொல்லிக்கொடுத்திருக்கலாமே? என்று எனக்கு ரொம்பவும் தாமதமாகத் தோன்றியது. கமர்கட்டைக் கூறு போட்டு கணக்கை மிக எளிதாக எனக்குப் பதிய வைத்தவர் காந்திமதி.

விளையாட்டுக் கல்வி

‘‘கற்றல் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கையாக இருப்பதால் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையை, பெற்ற அறிவோடு தொடர்புப்படுத்திப் பார்க்க ஊக்கப்படுத்தப்படுவதில்லை’’ என்கிறார் மரியா மாண்டிசோரி. குழந்தைகள் விளையாடும் அன்றாட விளையாட்டோடு கணிதம் கலந்தால் அது கமர்கட்டைவிட இனிக்கும் என எனக்குப் புரியவைத்த காந்திமதி, தனது வறுமையை வென்று பட்டதாரியானார். ‘மதி இட்லிமாவு பாக்கெட்’ எனும் சுயதொழிலில் தற்போது கணக்குப் போட்டு வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டிருக்கிறார்.

தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்