என்னைச் செதுக்கிய மாணவர்கள்: கலாமை ஆயுதமாக்கிய ரஞ்சிதா

By ஆயிஷா இரா.நடராசன்

கற்பவரால் தனது கல்வியை இக்கட்டான நேரத்தில் சரியாகப் பயன்படுத்தப்படாதவரை கல்வியில் எதுவுமே நடக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

- டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இறந்துவிட்டார் என்றதும் நான் ரஞ்சிதாவை நினைத்தேன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) . வீராங்கனை என்றால் நமக்கு ஜான்சிராணியும் கல்பனா சாவ்லாவும் நினைவுக்கு வரலாம். ஆனால், ரஞ்சிதா மாதிரி பெண் குழந்தைகளுக்கு ‘உயிரோடும் உயிர்ப்போடும்’ இருப்பதே வீராங்கனைகளின் வீரத்துக்கு இணையானதாக இருக்கிறது என்பதை எனக்கு உணர்த்தியவர் ரஞ்சிதா.

பெண் குழந்தைகள் வயசுக்கு வந்த நாளோடு அவர்களின் பள்ளிக் கனவுகளுக்கு மூடுவிழா நடத்தப்படும். இந்த 21-ம் நூற்றாண்டிலும் கிராமங்களில் இதை பார்க்கலாம். ரஞ்சிதா அதை எதிர்த்துப் போராடி தனது போராட்டத்தின் மூலம் கல்வி கற்கும் உரிமையைத் தக்கவைத்துக் கொண்டது எனக்கு ஒரு பாடமாக இருந்தது.

ரஞ்சிதாவும் இந்தியக் கல்வியும்

கல்வி கற்பதற்கான ஆரம்ப வயது மூன்று என மத்திய அரசு 1986-ல் அறிவித்தது. பால்வாடியும், எல்.கே.ஜியும் அறிமுகமானபோது எதிர்ப்பும் வந்தது.

அரசால் போடப்பட்ட ஜனார்த்தன ரெட்டி கல்விக் குழு ஒரு வித்தியாசமான காரணம் சொன்னது. பெண் குழந்தை சிறுவயதிலேயே வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறது. பள்ளியில் சேர்க்க ஆறு வயது வரை காத்திருந்தால் பள்ளிக்கு அனுப்பாமல் வேலைகளில் நிரந்தரமாக ஈடுபடுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம் என்றது.

ரஞ்சிதா ஆறாம் வகுப்புக்கு நான் பணிபுரிந்த பள்ளிக்கு வந்தார். அந்த வருடம்தான் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இந்திய ஜனாதிபதியானார். கல்விக்காகத் தனியான செயற்கைகோள் 2002-ல் தொடங்கப்பட்டது. சர்வ சிக்ஷ அபியான் (அனைவருக்கும் கல்வி) மூலம் நாடெங்கும் எல்லா குழந்தைகளும் பள்ளிக்குப் போகிறார்களா என கணக்கிடப்பட்டது.

ரஞ்சிதா எட்டாம் வகுப்புக்கு வந்தபோது அப்துல்கலாம் பல ஊர்களில் குழந்தைகளை நேரடியாக சந்தித்து அவர்களது கேள்விகளுக்கு பதில் அளித்து பெரிய எழுச்சியை ஏற்படுத்தினார்.

பெண் கல்வி பற்றி கலாம்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த அகில இந்திய அறிவியல் மாநாட்டுக்கு கலாம் வந்தார். அவரைச் சந்திக்க எங்கள் பள்ளியிலிருந்து தேர்வான மூவரில் ஒருவர் ரஞ்சிதா. ஜனாதிபதியிடம் குழந்தைகள் ஏடாகூடமாகப் பேசிவிடக்கூடாதென்று கேள்விகள் முன்னமே பெறப்பட்டன. அவற்றைப் பல்கலைக்கழகமும், அதிகாரிகள் குழுவும் பரிசீலித்தன. அவர்களை ஏமாற்றிவிட்டு ரஞ்சிதா கேள்வியை மாற்றிக் கேட்டார்.

‘‘பெண்கள் முன்னேற என்ன வழி?’’ என்றார் அவர். மற்ற குழந்தைகளின் கேள்விகள் அறிவியல், ராக்கெட் என்று இருந்தன. ஆனால், ரஞ்சிதாவின் கேள்வியில் சமூக அக்கறை வெளிப்பட்டது. புன்னகையுடன் அப்துல்கலாம் “பெண்கள் முன்னேற கல்வி (Education), பங்கேற்றல் (Participation), அங்கீகாரம் (Recognition) தேவை” என ரத்தினச் சுருக்கமாக பதிலளித்தார். கேட்பது ஒரு எட்டாவது படிக்கும் குழந்தைதானே என அவர் அசட்டையாக பதில் தரவில்லை.

சாவித்திரி பூலே அம்மையார்தான் இந்தியாவின் முதல் ஆசிரியை. பண்டித ரமாபாய்தான் முதல் பெண்கள் பள்ளிக்கூடத்தை நிறுவியவர். அரசு 1952-ல் அமைத்த லட்சுமணசாமி முதலியார் கமிஷன் முன்பாக, பெரியார், ஜி.டி.நாயுடு போன்றவர்கள் வாதாடிப் பெற்றதுதான் பெண்களுக்கான தனியான கல்விக்கூடங்கள். பெண் குழந்தைகளுக்கு கல்வி முழுமை அடைந்தால் அல்லவா வளர்ச்சியில் பங்கு பெறவும் அங்கீகரிக்கப்படவுமான அடுத்த படிநிலைகளை அடைய முடியும்?

ரஞ்சிதா திடீரென்று ஒரு வாரமாக பள்ளிக்கு வரவில்லை. சில ஆசிரியர்கள் கவலைப்பட்டோம். பின் தங்கிய மாவட்டமான எங்கள் ஊரில் இது அடிக்கடி நடப்பதுதான். அவருக்கு திருமணம் நிச்சயமாயிருக்கலாம் என அரசல்புரசலாக சில மாணவிகள் கூறி அதிர்ச்சி அடையவைத்தார்கள்.

ரஞ்சிதாவுக்கு திருமணம்

அவரது முறைமாமனின் முதல் திருமணம் தோல்வியாம். அதனால் அங்கே ரஞ்சிதா பலிகடா ஆக்கப்பட்டார். என்ன செய்யலாம் என நாங்கள் கையைப் பிசைந்தோம். முறைமாமன் காவல்துறையில் செல்வாக்கு பெற்றவர். ரஞ்சிதா போன்ற அறிவுச் சுடர் வீசும் மேதமைக் குழந்தைகள் நம் கையை விட்டுச் செல்வதை இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் அனுமதிக்கப்போகிறோம் என நாங்கள் பரிதவித்தோம். அப்போது சற்றும் எதிர்பாராத அந்த சம்பவம் நடந்தது.

கலாமுக்குக் கடிதம்

பலவிதமாகப் போராடிப் பார்த்த அந்த எட்டாம் வகுப்பு புயல், இறுதியாக பிரம்மாஸ்திரத்தை ஏவிவிட்டது. ரஞ்சிதா ஒரு தபால் கார்டில் அப்துல் கலாமுக்கு தன் நிலையை விளக்கித் தன்னை காப்பாற்றுமாறு கடிதம் எழுதி அனுப்பிவிட்டார். அந்தக் கடிதம் புதுடெல்லி போனதா, கலாம் வாசித்தாரா என்பதெல்லாம் தெரியாது. ஆனால், திருமணத்துக்கு முந்தைய நாள் இரவில் காவல்துறையும் அரசு அதிகாரிகளும் வந்துவிட்டனர். ரஞ்சிதாவை மீட்டுவிட்டனர்.

இன்றும் பெண் குழந்தைகளுக்கு முழுமையான பள்ளிக்கல்வியே ஒரு போராட்டம், உயர்கல்வி பெறும் உயரத்துக்கு மீண்டு எழுதல் ஒரு கடுந்தவம் என்பதுதான் சூழல். இன்று ரஞ்சிதா பி.காம் பட்டதாரி ஆகிவிட்டார். விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவுக்கு நடந்த அக்னிப்பிரவேசத்தில் அவர் தப்பியிருந்தால் எப்படியிருந்திருக்குமோ அதற்கு இணையான வீரம்தான் இது என்பது என் கருத்து.

அப்துல் கலாமை ஆபத்தில் உதவும் சக்தியாக எப்படி குழந்தைகள் நம்பினார்கள் என்பதையும் இந்த சம்பவம் காட்டுகிறது. ரஞ்சிதா இப்போது விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு நடத்துகிறார். அவரது வாழ்க்கையின் வெற்றியில் “எல்லாப் புகழும் கலாமுக்கே” என்கிறார் அவர்.

தொடர்புக்கு:eranatarasan@yahoo.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்