மனசு போல வாழ்க்கை 15: மாற்றுக் கையால் எழுதுங்கள்!

By செய்திப்பிரிவு

டாக்டர் ஆர் கார்த்திகேயன்

நம் வாழ்க்கையை மாற்ற நம் எண்ணங்களை மாற்ற வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் நேர்பட வேண்டும். அதற்குத்தான் இந்த நேர்மறை சுய வாக்கியங்கள் தேவைப்படுகின்றன. உங்களுக்கே தெரியாமல் உங்கள் பழுதுபட்ட எண்ணங்களைச் சீர்படுத்த இவை உதவும். அஃபர்மேஷன் மந்திர வாக்கியம்போல் உங்கள் ஆழ்மனத்தில் செயல்படுபவை. முறையாகப் பயன்படுத்தும்போது இவை நம்ப முடியாத பலன்களைத் தரும்.

மூன்று முக்கிய அம்சங்கள் இந்தக் கட்டமைப்புக்குத் தேவை. ‘நான்’ என்ற தன்னிலையுடன் தொடங்குதல் அவசியம். நிகழ்காலத்தில் வாக்கியம் அமைய வேண்டும். நேர்மறைச் சொல் அல்லது செயல்தான் தெளிவாக இடம்பெற வேண்டும். இவைதான் அஃபர்மேஷன் விதிகள். “நான் நினைச்சது எதுவும் நடப்பதில்லை” என்று சலிப்பவர்கள் இந்தத் தங்க விதிகளை மனத்தில் நிலைநிறுத்திக்கொண்டு தங்கள் சிந்தனையை மாற்றி அமைக்கலாம்.

குழந்தைபோல் குதூகலம் வேண்டுமா?

இதை இடக்கையால் எழுதுவது மிகுந்த பலன் தரும் என்று எழுதி இருந்தேன். அஃபர்மேஷனுக்கு, ஏன் இந்த மாற்றுக் கைப் பழக்கம் தேவைப்படுகிறது? மாற்றுக் கையால் எழுதுதல் உங்களை ஆழ்மனத்துக்கு இட்டுச்செல்லும். அது நம்பிக்கை சார்ந்த விஷயத்தை முழுதாக உள்வாங்கிப் படமாக எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளும். மனத்தின் மேற்பரப்பு தர்க்க அறிவு சார்ந்தது. தவிர அதிகமாகக் கவனம் சிதறக்கூடியது. இரைச்சல்கள் நிரம்பியது. எழுதிப் பழக்கப்பட்ட கையால் அஃபர்மேஷன் எழுதினால் மனம் ஆயிரம் திசைகளில் பாயும். கேள்வி கேட்கும். எழுதும் சுகமோ நிறைவோ தெரியாது.

ஆனால், மாற்றுக் கையால் எழுதுவது கடினமாக இருந்தாலும் குழந்தைக்கு ஏற்படும் குதூகலம் உண்டாகும். எழுத்துகளுக்கு வடிவம் கொடுக்கவே நிறையக் கவனமும் உழைப்பும் தேவைப்படும். கோண லாகப் போகையில்கூட உதடு புன்முறுவல் பூக்கும். எழுதி முடித்த பின் ஒரு சாதனை படைத்த உணர்வு வரும். நான் சொல்வதைப் பரிசோதிக்க ஒரு சின்ன வேலை செய்யுங்கள். உங்கள் பெயரைத் தமிழில் மாற்றுக் கையால் எழுதுங்கள். பள்ளியில் முதன்முதலில் சேர்க்கப்பட்ட குழந்தைபோல உணர்ந்தீர்களா? பக்கத்தில் உள்ளவர்கள் கிண்டல் பேசினார்களா? எழுதி முடித்த பின் ஒரு செயற்கரிய செயலைச் செய்ததுபோல உணர்ந்தீர்களா? அதுதான் மாற்றுக் கையால் எழுதுதலின் மகிமை.

நொடிப்பொழுதில் மாற்றம்

கலையை ஆதாரமாகக்கொண்டு இயங்கும் மனச் சிகிச்சை முறைகளில் இந்த மாற்றுக் கை பழக்கத்தைப் பரிந்துரைப்பார்கள். குறிப்பாக சிறுவர், சிறுமியருக்கு. மனக் காயங்களினால் பேசாத குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கும்போது ஒரு பயிற்சி கொடுப்பார்கள். பிரச்சினையை ஏதுவான கையில் எழுதச் சொல்ல வேண்டும். அதற்குப் பதில் அளிக்கையில் மாற்றுக் கையால் எழுத வேண்டும்.

இப்படி வலக்கையும் இடக்கையுமாக அவர்களே தங்கள் பிரச்சினைகளை எழுத வேண்டும். வலக்கை உதவி பெறுபவராகவும், இடக்கை உதவி தருபவராகவும் மாறும். இடக்கை பழக்கக்காரர்கள் இதை மாற்றிச் செய்ய வேண்டும். இப்படி ஒருவரே தன்னுடைய பிரச்சினையை ஒரு கையால் எழுதி இன்னொரு கையால் ஆலோசனை பெறச் செய்வதை ‘Other Hand Technique’ என்பார்கள்.

இருபது வருடங்களுக்கு முன்னால் ‘Art Therapy’ படித்த காலத்தில் இந்தச் சிகிச்சைமுறையைப் பெரிதாகப் பயன்படுத்தியதில்லை. ஆனால், லூயி ஹேயின் தாக்கமும் அஃபர்மேஷன் முறையை நிறைய உடல் உபாதைகளுக்குப் பயன்படுத்த ஆரம்பித்த பின்தான் மாற்றுக் கைப் பழக்கம் பற்றிய தீவிர அனுபவம் வந்தது. இன்று ஒரு எண்ணம் ஸ்திரப்பட வேண்டும் என்றால், அதை முழு வாக்கியமாகக்கூட நான் எழுதுவதில்லை. அதன் ஆதாரச் சொல்லை இடது கையால் சில முறைகள் எழுதுவேன். அதுவே எனக்குப் போதுமானது. எந்தப் பிரச்சினைக்கு எப்படி அஃபர்மேஷன் எழுதுவது என்று அறியப் பயிற்சியும் தேர்ச்சியும் அனுபவமும் அவசியம். என்றாலும், ஒரு நல்ல சொல்லை மாற்றுக் கையால் தொடர்ந்து எழுதி வந்தாலே பலன் கிட்டும். இது என் அனுபவப் பாடம்.

2004-ல் சாண்டி கார்டன் என்ற ஆஸ்திரேலியக் கிரிக்கெட் உளவியல் ஆலோசகர் எம்.ஆர்.எப். பேஸ் பவுண்டேஷனுக்கு வந்து பயிற்சி அளித்தார். அவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. சாந்த், வெங்கடேஷ் பிரசாத் போன்றவர்கள் அணியில் சேராத பாலகர்கள். விளையாட்டு வீரர்களுக்குக் குறுகிய கால உளவியல் ஆலோசனை தருவது எப்படி என்று கிரிக்கெட் பயிற்சியாளர்களுக்குக் கற்றுத்தந்தார். நொடிப்பொழுதில் தோன்றும் எண்ணத்தை மாற்றினால் விளையாட்டின் போக்கு மாறும் என்று வகுப்பெடுத்தார். அவர் சொல்லிக் கொடுத்த முக்கிய விஷயம் என்ன தெரியுமா? அஃபர்மேஷன்தான்!

கே: அலைபேசி என்பதே ஒரு சாபக்கேடாகிவிட்டது. படிக்க முடியவில்லை. வெளியே போகப் பிடிக்கவில்லை. நண்பர்களிடம்கூட சாட்டிங்தான் செய்கிறேன். சதா இன்ஸ்டாகிராமில்தான் இருக்கிறேன். அல்லது வாட்ஸ் அப், யூடியூப் வீடியோக்களைப் பார்க்கிறேன். தனியே வசித்துப் படிப்பதால் நிறைய நேரம் உள்ளது. எல்லாம் தெரிந்தும் கட்டுப்படுத்த முடியவில்லை. இது பிரச்சினையா அல்லது நான் அப்படி நினைக்கிறேனா?

ப: உங்கள் கட்டில் நீங்கள் இல்லை என்று நீங்கள் உணர்ந்தது பாராட்டுக் குரியது. மொபைலை வைத்துக்கொண்டு அதைப் பயன்படுத்தாமல் இருப்பது மிகக் கடினம்தான். இதுவும் போதைதான். வெளி நடமாட்டத்தை அதிகரியுங்கள். உடற்பயிற்சி, யோகா, விளையாட்டு என்று மொபைல் வைத்துக்கொள்ள முடியாத காரியங்களில் முதலில் தொடங்குங்கள். இரவில் தூங்கும்போது மொபைலை அருகில் வைக்காதீர்கள். அடுத்த அறையில் வைத்துவிடுங்கள். 90 சதவீத வாட்ஸ் அப் குழுக்களிலிருந்து வெளியேறுங்கள். பெரும்பாலும், அலைபேசியை ம்யூட்டில் வையுங்கள். சில உயர்ந்த நோக்கங்கள் வைத்து உங்கள் நேரத்தை அதற்குச் செலவழியுங்கள்.

‘மனசு போல வாழ்க்கை-2.0’ பகுதியில் நீங்கள் எதிர்கொண்டுவரும்
மனச் சிக்கலுக்கு பதில் அளிக்கத் தயாராக இருக்கிறார்
டாக்டர் ஆர். கார்த்திகேயன். உங்களுடைய கேள்விகளை அனுப்பலாம்.
முகவரி: வெற்றிக்கொடி, இந்து தமிழ், கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல்: vetrikodi@hindutamil.co.in
கட்டுரையாளர் தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

(தொடரும்)
கட்டுரையாளர், மனிதவள பயிற்றுநர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

இந்தியா

56 secs ago

தமிழகம்

35 mins ago

ஓடிடி களம்

37 mins ago

விளையாட்டு

52 mins ago

சினிமா

54 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

57 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்