ரஷ்யாவின் கதவு திறந்தது!

By செய்திப்பிரிவு

ஜெயந்தன் 

விண்வெளிச் சுற்றுலா சென்றுவர உலகச் செல்வந்தர்கள் தயாராகிவிட்டார்கள். இன்னொரு பக்கம், ‘ஸ்பேஸ் பஸ்’ எனப்படும் நவீன விண்வெளி ஓடத்தில், பூமியிருந்து 62 கிலோ மீட்டர் பயணித்து, வானம் என்று நாம் நம்புகிற கார்மன் லைன் வட்டப் பகுதியில் சில மணிநேரம் மிதக்கலாம். அங்கிருந்து பூமியையும் நிலவையும் பார்த்து வியந்து திரும்பலாம். இதுபோன்ற பட்ஜெட் சுற்றுலாக்களும் விரைவில் சாத்தியமாக உள்ளன. இவையெல்லாம் எதிர்காலத்தில் நடக்க இருப்பவை. ஆனால் நிகழ்காலத்தில் ஆக்கபூர்வமான விண்வெளி தொழிற்கல்விச் சுற்றுலாவை ஒருங்கிணைத்து வருகிறது இந்திய - ரஷ்ய வர்த்தக சபை. 

அமெரிக்காவில் இருக்கும் நாசாவுக்கு விண்வெளிக் கல்விச் சுற்றுலா சென்றுவருவது நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால், விண்வெளி அறிவியலில் ‘குளோபல் லீடர்’ என்று அனைத்து தேசங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ரஷ்யாவுக்கு விண்வெளிக் கல்விச் சுற்றுலா என்பது நீண்ட காலமாக அனுமதிக்கப்படாமல் இருந்துவந்தது. தற்போது தமிழக மாணவர்களுக்கான அந்த அரிய வாய்ப்பின் கதவைத் திறந்துவிட்டிருக்கிறது ஓர் ஒப்பந்தம்.

இந்தியாவுக்கான ரஷ்யக் கலாச்சாரத் தூதரகத்தின் ஒரு அங்கமாகச் செயல்பட்டுவருகிறது இந்திய - ரஷ்ய வர்த்தக சபை (Indo Russian Chamber of Commerce & Industries). இந்த சபையோடு ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், ஆர்வலர்களை ஒருங்கிணைத்துவரும் தொழில்கள் - விண்வெளிச் செயல்பாட்டாளர்களின் சர்வதேசச் சங்கம் (Industries And The International Association Of Space Activities Participants) ஓர் வர்த்தக ஒப்பந்தம் இட்டுக்கொண்டுள்ளது. தமிழக மாணவர்களை ரஷ்யாவின் புகழ்பெற்ற விண்வெளி நிலையங்கள், செயற்கைக்கோள் தயாரிப்பு மையங்கள், புகழ்பெற்ற விண்வெளி அருங்காட்சியகங்கள் ஆகியவற்றைக் காண அழைக்கிறது. அத்துடன் முன்னாள் விண்வெளி வீரர்கள், இன்றைய விண்வெளி அறிஞர்கள் ஆகியோருடன் கல்விச் சுற்றுலாவில் கலந்துரையாடவும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.

அபாரமான அறிவியல் அனுபவம் பெற!

ரஷ்யாவுக்கான விண்வெளிக் கல்விச் சுற்றுலாவைத் தமிழகத்தில் ஒருங்கிணைத்துவரும் இந்திய - ரஷ்ய வர்த்தக சபையின் பொதுச் செயலாளர் ப. தங்கப்பனிடம் இது பற்றிக் கேட்டோம். 
“விண்வெளி அறிவியலில் உலக நாடுகள் வியந்து பார்க்கும் இந்தியா - ரஷ்யா இடையிலான நட்பு, 70 ஆண்டுகால பந்தம். செழுமையான இலக்கியம் தொடங்கி இன்றைக்கு இந்தியாவை உலக நாடுகள் அண்ணார்ந்து பார்க்கும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம்வரை இந்தியாவுடன் ரஷ்யா பரிமாறிக்கொண்டது ஏராளம்.

ரஷ்யக் கலாச்சார மையத்தின் ஒருபகுதியாகச் செயல்பட்டு வரும் இந்திய - ரஷ்ய வர்த்தகச் சபையின் முயற்சியால் தமிழக மாணவர்களுக்கான விண்வெளிக் கல்விச் சுற்றுலாவை மிகக் குறைந்த கட்டணத்தில் ஒருங்கிணைத்து வருகிறோம். இக்கல்வி சுற்றுலாவின் நோக்கம், விண்வெளி அறிவியல் தொழில்நுட்பத்தில், கால வாரியாகத் தொடங்கி இன்றுவரை ரஷ்யா அடைந்திருக்கும் எல்லைகளை மாணவர்கள் அணுவணுவாகப் பார்த்து உணர்ந்து உரையாடித் தெளிய வேண்டும் என்பதுதான்.

ஆறு இரவு ஏழு பகல் கொண்ட இச்சுற்றுலாவில் விமானக் கட்டணம், மூன்று நட்சத்திரத் தங்கும் விடுதி, இந்திய, பன்னாட்டு உணவு, விண்வெளி மையங்களுக்குச் செல்லும் கட்டணம், புகழ்பெற்ற இடங்களுக்குச் செல்லும் கட்டணம் என அத்தனையையும் ஒரு லட்சத்து 33 ஆயிரம் ரூபாயில் ஒருங்கிணைத்திருக்கிறோம். ஒருவர் தனியாக ரஷ்யா சென்று விண்வெளி மையங்களைக் காண முடியாது.

நிபுணர்களைச் சந்திக்கவும் முடியாது. ஆனால், இது ரஷ்ய அரசாங்கத்தில் ஆதரவுடன் சாத்தியமாகிறது. நடைமுறைக் கட்டணங்களில் கல்விச் சுற்றுலாவுக்கான முழு வரி விலக்கு தள்ளுபடி பெற்று அழைத்துச் செல்கிறோம். இருபது மாணவர்களைக் குழுவாகத் தங்கள் பொறுப்பில் அழைத்துவரும் இரண்டு ஆசிரியர்களை அவர்களுக்குத் தலைமையேற்று வழிநடத்த இலவசமாக அழைத்துச் செல்கிறோம்” 
என்கிறார். ரஷ்யாவுக்கான விண்வெளிச் சுற்றுலா பற்றி முழுமையான விவரங்களைத் தெரிந்துகொள்ள 044 - 4210 9580, 99625 96501 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 mins ago

சினிமா

13 mins ago

உலகம்

27 mins ago

விளையாட்டு

34 mins ago

ஜோதிடம்

16 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

53 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்