‘டிஜிட்டல் இந்தியா’ தரும் வேலையும் கல்வியும்

By த.நீதிராஜன்

முன்பெல்லாம் மின்சாரக் கட்டணம் உள்பட அரசு அலுவலகங்களுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களைக் கட்டுவதற்கு நமது நேரமும் உழைப்பும் வீணாகும். நீண்ட வரிசைகளில் காத்துக் கிடப்போம். தற்போது உட்கார்ந்த இடத்திலிருந்தே ஆன்லைனில் பணத்தை ஒரு கிளிக்கில் அனுப்பிவிட்டு வேறு வேலையைப் பார்க்கிறார்கள். அரசின் செயல்பாடுகள் நவீனமாவது மக்களுக்கு நல்லதுதானே!

நவீனமான அரசு நிர்வாகத்தை இப்போது ‘இ-கவர்னன்ஸ்’ என்று அழைக்கிறார்கள். இந்த நவீனமும் காலாவதியாகிக்கொண்டிருக்கிறது. அடுத்த தலைமுறை அதிநவீனத்தை எம்- கவர்னன்ஸ் (மொபைல் கவர்னன்ஸ்) என்று அழைக்கிறார்கள்.

இன்றைய உலகில் பல நாடுகள் இந்த அதிநவீன நிர்வாக முறைக்கு மாறிவருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முன்னேறுவதற்காக ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இணைக்கும் இணையம்

உலகளவில் அரசுகளின் செயல்பாடுகளில் இணையத்தின் பங்கு மேலும் மேலும் அதிகரித்துவருகிறது. உலகளவில் இணையத்தில் இணைக்கப்பட்ட சாதனங்களின் எண்ணிக்கை 2011-ம் ஆண்டிலேயே சுமார் 1,250 கோடியைத் தாண்டிவிட்டது. உலகில் உள்ள மனிதர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை விட இது அதிகம். இது இன்னும் ஐந்து வருடத்துக்குள் இரு மடங்கு முதல் நான்கு மடங்கு வரை மேலும் அதிகரிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்தையும் இணைத்துப் பிணைத்து இணையம் தொடர்ந்து மேலும் மேலும் விரிந்து வருகிறது.

மத்திய அரசு அறிவித்துள்ள ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தில் இணையத்தால் இணைக்கப்பட்ட பொருள்கள்தான் முதுகெலும்பாக இருக்கின்றன. எத்தனையோ அரசுத் திட்டங்களில் இதுவும் ஒன்று என்று சொல்லக்கூடியதல்ல இந்தத் திட்டம். இது அரசின் பல துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பெருந்திட்டம். இந்தத் திட்டம் சரியாக அமலாக்கப்பட்டால் அரசின் செயல்பாடுகளில் ஒரு தலைகீழ் மாற்றத்தை மக்களால் உணர முடியும்.

இந்தத் திட்டத்தின் கீழ் அடிப்படையான சில மாற்றங்களை முக்கியமான துறைகளில் ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

எங்கும் எதிலும் ஸ்மார்ட்

மக்களுக்குக் கிடைக்கக்கூடிய தண்ணீரை விநியோகிப்பது உள்ளிட்ட அரசின் நிர்வாகச் செயல்பாடுகள் ‘ஸ்மார்ட் தண்ணீர்’ என்ற பெயரில் மாற்றமடைய உள்ளன. தெருக் குழாய்களில் வரும் தண்ணீரின் தரத்தைக் கண்காணிக்கிற கருவிகள் இனி இருக்கும். அவை புதிதாக உருவாகவுள்ளன. ஆறுகளிலும் குளங்களிலும் அணைகளிலும் உள்ள தண்ணீரைக் கண்காணிப்பதற்கும், தண்ணீர் தொடர்பான பேரழிவு நிகழ்வுகளிலிருந்து பாதுகாப்பதற்கும் கருவிகள் தயாரிக்கப்படும். அவை முழுவதும் தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்படவுள்ளன. இந்த மொத்த நடைமுறையும் அதிநவீனப்படுத்தப்படும்.

ஸ்மார்ட் சுற்றுச்சூழல், ஸ்மார்ட் நலவாழ்வு, ஸ்மார்ட் விவசாயம், ஸ்மார்ட் திடக்கழிவு மேலாண்மை என்ற பெயர்களிலும் அரசின் செயல்பாடுகள் அதிநவீனப்படுத்தப்பட்டு தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்படவுள்ளன என்கிறது இது பற்றிய அரசின் கொள்கை அறிக்கை.

ஸ்மார்ட் நகரங்கள்

இந்தியாவில் சுமார் ஆறு லட்சம் கிராமங்கள் உள்ளன. இரண்டரை லட்சம் கிராமங்களிலாவது ‘பிராட் பேண்ட்’ இணையத்துக்கான தொடர்பை ஏற்படுத்துவது என்பதும் இந்தத் திட்டத்தின் நோக்கங்களில் ஒன்று.

இத்தகைய பிரம்மாண்டமான பணிகளுக்கான உள்கட்டமைப்பு களுக்காக அரசு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் சேர்ந்து இந்தத் திட்டத்தில் நான்கு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்களை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளன.

இந்தியாவின் முக்கியமான பகுதிகளில் 100 ஸ்மார்ட் நகரங்களை அறிவித்து அவற்றில் மிக நவீனமான வசதிகளை உருவாக்குவது இதன் நோக்கம். தமிழகத்திலும் 12 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தொழிலும் வேலையும்

இந்தத் திட்டத்தின் மூலம் 18 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்கிறது மத்திய அரசு. அதி நவீன மின்னணுக் கருவிகளை இந்தியாவிலேயே உற்பத்திசெய்ய வேண்டும் என்றும் அரசு முயல்கிறது. தற்போது இந்தியாவுக்குத் தேவையான மின்னணுப் பொருள்களில் 65 சதவீதம் வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இத்தகைய உற்பத்தியைச் செய்ய முயல்பவர்களுக்கு ஆரம்பக் கட்டத்தில் சலுகைகளையும் அரசு அளிக்கும். உற்பத்திப் பொருள்களையும் அரசே கொள்முதல் செய்யவும் உள்ளது.

புதிய கல்வி வாய்ப்புகள்

தற்போதுள்ள பொறியியல் பாடத்திட்டத்தில் பி.டெக். எம்.டெக். அளவிலும், டாக்டர் பட்டம் உள்ளிட்ட, ஆராய்ச்சிப் படிப்புகளின் அளவிலும் ‘இணையத்தால் இணைக்கப்பட்ட பொருள்கள் பற்றிய பாடமும்’ இணைக்கப்படவுள்ளது.

இணையத்தால் இணைக்கப்பட்ட பொருள்கள் பற்றிய பாடம் தொடர்பான படிப்புகளில் 6 வாரங்கள், மற்றும் 2 வாரங்களில் படிக்கக்கூடிய சான்றிதழ் படிப்புகளும் கல்வி நிறுவனங்களால் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்தத் துறையில் ஆராய்ச்சி செய்து அவற்றைச் சமர்ப்பிப்பவர்களுக்குக் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படவுள்ளன.

இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தகவல்தொழில் நுட்பத் திறன் படைத்தவர்களாக ஒரு கோடி மாணவர்களை உருவாக்குவதற்கு அரசு முயல்கிறது என்கிறது மத்திய அரசின் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை.

‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தைத் திறன்மிக்க முறையில் செயல்படுத்தி மேம்படுத்துவதற்கு இத்தகைய மாணவர்களிலிருந்து உருவாகும் ஊழியர்களே அடித்தளமாக இருப்பார்கள்.

கல்வியும் தொழிலும்

தொழில் நிறுவனங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் இடையே இது தொடர்பான மாநாடுகளும் பயிலரங்குகளும் நடத்தப்படவுள்ளன. ஐ.ஐ.டி. நிறுவனங்களில் எம்.டெக் அளவிலான இரண்டு வருடக் கால ஆய்வுகளுக்கு உதவித்தொகைகள் வருடந்தோறும் 150 பேருக்கு வழங்கப்படும்.

தொழில் நிறுவனங்களுக்கு எந்த வகையான திறன்கள் தேவைப்படுகின்றன என்பதைக் கண்டறிந்து கல்வி நிறுவனங்களில் அவற்றை உருவாக்கும் வகையிலான புதிய பேராசிரியர் பதவிகள் கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்படவுள்ளன.

தொழில் நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களும் இணைந்து செயலாற்றக்கூடிய புதிய ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளன. கல்வியாளர்களின் அறிவைத் தொழில் நிறுவனங்கள் பெறுவதற்கும் தொழில் நிறுவனங்களில் ஏற்படும் புதிய மாற்றங்களின் அனுபவங்களைக் கல்வியாளர்கள் பெறுவதுமாக இருதரப்பும் பயன்பெறும் வகையில் திட்டமிட்ட செயல்பாடுகள் ஏற்படுத்தப்படவிருக்கின்றன.

கல்வி வளாகங்களிலும் தொழில்நிறுவனங்களிலும் பல புதிய வாய்ப்புகளை டிஜிட்டல் இந்தியா திட்டம் உருவாக்கவே செய்யும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

21 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்