யோகாசனம் தரும் வாய்ப்புகள்

By வா.ரவிக்குமார்

அது 1952-ம் ஆண்டு. உலகப் புகழ் பெற்ற வயலின் மேதையான யஹூடி மெனுஹின் பம்பாய் நகரத்துக்கு வந்திருந்தார். தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமூர்த்தியின் அறிவுறுத்தலின்பேரில் பி.கே.எஸ்.அய்யங்கார் யகூடி மெனுஹினைச் சந்தித்தார்.

“உங்களுக்கு யோகா பயிற்சி அளிக்க வந்திருக்கிறேன்” என்றார் பி.கே.எஸ். அய்யங்கார்.

“நான் சோர்வாக இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும்? ஐந்து நிமிடத்தில் சொல்லுங்கள்” என்றார் யஹூடி மெனுஹின்.

“ஒரு விரிப்பைத் தரையில் விரித்து, அதில் படுங்கள்” என்றார் பி.கே.எஸ். அய்யங்கார்.

அவ்வளவுதான். யஹூடி மெனுஹின் அப்படியே ஒருமணி நேரம் கண்ணயர்ந்துவிட்டார். அதன்பின் உற்சாகமாக எழுந்து, அய்யங்காரிடம் “யோகாசனம் கற்றுக் கொடுப்பதாகச் சொன்னீர்களே..” என்று கேட்டிருக்கிறார்.

“இப்போது செய்தீர்களே அதுதான் சவாசனம்” என்றார் அய்யங்கார். அதன் பிறகு வேறு சில யோகா பயிற்சிகளை அளித்தார். அவற்றைத் தொடர்ந்து செய்ததால் தன்னுடைய வயலின் வாசிப்பு மேலும் மெருகேறியதை உணர்ந்தார் மெனுஹின்.

யோகாசனத்தால் கவரப்பட்ட யஹூடி மெனுஹின் பின்னாளில், சுவிட்சர்லாந்துக்கு பி.கே.எஸ். அய்யங்காரை வரவழைத்து `என்னுடைய சிறந்த வயலின் ஆசிரியர் பி.கே.எஸ். அய்யங்கார்’ என்று பொறிக்கப்பட்ட கைக்கடிகாரத்தை கொடுத்தார். இந்தச் சம்பவத்துக்குப் பின்னர்தான் உலகம் முழுவதும் பல பிரமுகர்களுக்கு யோகா பயிற்சிகளை அளித்தார் பி.கே.எஸ். அய்யங்கார்.

பாரம்பரிய யோகா

உடலை வருத்திக்கொள்ளும் ஒரு பயிற்சி வடிவமாகக் கருதப்பட்ட யோகாசனத்தை எளிமையும் இனிமையும் கொண்ட அனுபவமாக மக்களுக்குக் கொண்டுசென்றவர் பி.கே.எஸ். அய்யங்கார்.

இந்தியாவில் உருவாகி உலகம் முழுவதும் இன்றைக்குப் பின்பற்றப்படும் ஒரு கலையாக மதிக்கப்படுகிறது யோகக் கலை. வேதங்கள், உபநிஷதங்கள், பகவத் கீதை, ஹத யோக பிரதிபிகா, சிவசம்ஹிதா முதலான பல நூல்கள் யோகாவின் சிறப்புகளைப் பற்றிப் பேசுகின்றன.

யோகாசனம் என்பது ஓர் ஒழுக்க நெறி. மனதைக் கட்டுப்படுத்தி நம்முடைய செயல்திறனை அதிகரிக்கச் செய்வது. ஆண்டாண்டு காலமாக மக்களிடையே புழங்கும் இந்த ஆரோக்கியப் பயிற்சியின் வடிவம் தற்போது உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.

உடலைப் பலப்படுத்தும் யோகா

யோகா பயிற்சியின் மூலம் ஒருவரின் உடலில் இருக்கும் தேவையற்ற அமிலங்கள் வெளியேறுகின்றன. ரத்த ஓட்டம் சீரடைகிறது. ஆக்ஸிஜனை அதிகம் உள்ளிழுக்கும் திறனை நுரையீரல் பெறுகிறது. உடல் ஆரோக்கியத்துக்கு ஐந்து ஆசனங்களை தினமும் செய்தாலே போதும் என்கின்றனர் யோகாசன நிபுணர்கள். பத்மாசனம் மன ஒருமைப்பாட்டை வளர்க்கும். நினைவாற்றலைத் தூண்டும். நாடி சுத்தி செய்வதன்மூலம் ரத்தத்தில் சிவப்பணுக்களின் திறன் கூடும். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதயக் கோளாறுகள் போன்றவற்றை வராமல் தடுப்பதற்கு யோகா பயிற்சிகள் பெரிதும் காரணமாக இருக்கின்றன.

யோகாவின் தேவை

யோகாவை இன்றைக்கு அன்றாட வாழ்வுக்கான உடற் பயிற்சியாகவும், சில வகையான நோய்கள் மற்றும் உபாதைகளிலிருந்து விடுபடுவதற்கான வழியாகவும் பார்க்கத் தொடங்கி இருக்கின்றனர். இதன் காரணமாக பி.எஸ்சி., எம்.எஸ்சி., முதுகலை டிப்ளமோ, எம்.ஃபில் மற்றும் பி.எச்டி., ஆகிய பட்டங்கள் வரை யோகாவில் பெறுவதற்கு வழியிருக்கிறது. பயிற்சியாளர் ஆவதற்கு, யோகாவில் முதுநிலை டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது. யோகா படித்தவர்கள் சொந்தமாக யோகா நிலையங்கள் அமைத்தும் மக்களுக்குக் கற்றுக்கொடுக்கலாம்.

பணியிடங்கள்

யோகா பயிற்சியாளர் தவிர யோகா ஆசிரியர், யோகா சிகிச்சை நிபுணர், உடற்பயிற்சி மையத்தில் யோகா பயிற்சியாளர் மற்றும் யோகா பேராசிரியர் ஆகிய பணிகள், அரசு சார்ந்த பள்ளிகளிலும் தனியார் பள்ளி, கல்லூரிகளிலும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. தகுந்த கல்வி நிலையங்களிலும் புகழ்பெற்ற பல தனியார் யோகா மையங்களிலும் யோகா பயிற்சிகளைப் பெறுவோருக்கு உள்நாட்டிலும் பல வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

பெருகும் பணி வாய்ப்புகள்

பிளஸ் 2 முடித்ததும் தகுதியான ஒரு யோகா பயிற்சி நிலையத்தில் ஒரு டிப்ளமோ படிப்பை முடித்தவரிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் யோகாவில் டாக்டர் பட்டம் பட்டம் பெற்றிருப்பவர் வரை, அவரவரின் தகுதிக்கு ஏற்ற பணியிடங்கள் நாடு முழுவதும் பரவலாக உள்ளன.

கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், நலவாழ்வு மையங்கள், முதியோர் இல்லங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஊடகம், திரைத்துறை என எல்லா இடங்களிலும் யோகா பயிற்றுநர்களின் தேவை இன்றைக்கு இருக்கிறது.

இந்தியா முழுவதுக்குமான யோகா பயிற்றுநர்களுக்கான தேவையை நாம் இன்னும் எட்டவில்லை. தற்போது இந்தியாவில் யோகா பயிற்சி அளிக்கும் வெளிநாட்டு அமைப்புகளையும் சேர்த்து ஏறக்குறைய 2,500 கோடி ரூபாய் புழங்கும் துறையாக யோகா பயிற்சி நாட்டில் விரிவடைந்துள்ளது.

வெளிநாடுகளில் யோகா

அமெரிக்காவில் மட்டும் 2.4 கோடிப் பேர் தினமும் யோகப் பயிற்சிகளை செய்கின்றனர். இங்கிலாந்து பள்ளிகளுக்கான பாடத் திட்டத்தில் யோகா சேர்க்கப்பட்டுள்ளது. ரஷ்யா, சீனா, மத்தியக் கிழக்கு நாடுகள், ஜெர்மனி என நூற்றுக்கணக்கான நாடுகளில் இன்று மக்களின் கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் யோகா இடம்பெற்றுவருகிறது. மேலைநாடுகளில் 14 லட்சம் கோடி ரூபாய்களுக்கும் மேலாக புழங்குகிற ஒரு துறையாக இது மாறிவருகிறது. எனவே, யோகாசனம் இனி வெறும் ஆசனம் மட்டும் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

9 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

மேலும்