பிளஸ் 2-க்குப் பிறகு: மாணவர்களை வளர்க்கும் மென்திறன்

By எஸ்.எஸ்.லெனின்

பள்ளிப் பருவம் முடித்துக் கல்லூரியில் காலடி எடுத்துவைக்கும் மாணவர்களுக்கு, மதிப்பெண்களைக் குவிப்பது அத்தனை பெரிய சிரமமாக இருக்காது. ஆனால், அந்த மதிப்பெண்களை மட்டுமே வைத்துக்கொண்டு நல்ல வேலையைத் தேடுவதுதான் குதிரைக்கொம்பு.

மென்திறன்

வேலை தரும் நிறுவனங்களுக்கு உங்களின் மதிப்பெண்கள் ஒரு விசிட்டிங் கார்டு மட்டுமே. ஒரு நிறுவனத்தில் சவாலான பணியைச் சாதிப்பதற்கு மதிப்பெண்களைத் தாண்டி மேலும் நிறைய திறன் தேவைப்படுகிறது. கல்லூரிப் பாடத்துடன் இத்தகைய திறனை வளர்த்துக்கொள்வது இன்றியமையாதது. வேலை தேடலுக்கு மட்டுமல்ல, சமூகத்திலும் தனிப்பட்ட வாழ்விலும் ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து, அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு மென் திறனே கைகொடுக்கிறது.

மதிப்பெண்களைக் குவிக்கத் தெரிந்த மாணவர்கள்கூட, கல்லூரிப் பருவத்தில் சிறிய பிரச்சினைகளுக்கும் துவண்டுவிழுவது இந்தத் திறன் கைவரப்பெறாமல் இருப்பதால்தான். தடாலென்று சூழ்ந்துகொள்ளும் குழப்பம், மாறிமாறி அலைபாயும் மன எழுச்சி, மன அழுத்தம், நல்லதையும் கெட்டதையும் பிரிக்கும் பக்குவமில்லாதது ஆகியவற்றை உதறித் தள்ளவும் கல்லூரிப் பருவத்தில் மென் திறனே பெரிதும் உதவியாக இருக்கும்.

களத்தைப் பொறுத்து மென் திறனை பல வகையாக வல்லுநர்கள் பட்டியலிட்டிருந்தாலும், கல்லூரி செல்லக் காத்திருப்போருக்கு அவசியமானதாக, கீழ்க்கண்டவற்றை அடையாளம் காட்டுகிறார், பெரம்பலூர் ‘மெஜெல் அண்ட் மெஜெல்’ மென் திறன் பயிற்சி மைய இயக்குநர் சேவியர் அமலதாஸ். இந்த விடுமுறையில் உங்கள் பகுதியில் இருக்கும் மென் திறன் பயிற்சி மையம் மூலமாக மாணவர்கள் இவற்றைப் பயிலலாம்.

1. குழுவாக பணியாற்றல் (Team working):

தனித்து இயங்கும் பள்ளிப் பருவ இயல்புக்கு மாறாகத் திறந்த உலகமாக எதிர்கொள்ளப்படும் கல்லூரிப் பருவத்தில் குழுவாகப் பணியாற்றும் திறன் அவசியம். சக மாணவர்கள், ஆசிரியர்கள், வெளியுலகத்தினர் என அதிக எண்ணிக்கையில் மனிதர்களோடு ஊடாடி அவர்களிடமிருந்து தனக்குச் சிறப்பானதைப் பெற்றுக்கொள்வதும், குழுவாக ஒருங்கிணைந்து இலக்கை அடைவதும் இந்தத் திறனின் வெளிப்பாடாகச் சொல்லலாம்.

பின்னாளில் நிறுவனம் ஒன்றில் பலதரப்பட்ட தனி மனிதர்களை, அவர்களுடைய சாதக பாதகங்களை எடைபோட்டு பொது இலக்கு நோக்கி முன்னெடுக்கும் திறமை குழுவாக பணியாற்றுவது மூலமாகவே கிடைக்கும். எனவே வகுப்புகள், புராஜெக்ட் பணிகள், விளையாட்டு, விடுதி தங்கல் என ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு மாணவனாகக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் இயங்கினால் இந்தத் திறன் எளிதில் வசப்படும்.

2. தகவல் தொடர்பு (Communication):

தாராளமயப் பொருளாதாரத்துக்கு உலகம் மாறியதிலிருந்து தகவல் தொடர்புதான் பல்வேறு நிறுவனங்களின் ஆதாரமாக மாறியுள்ளது. இந்த நிலையில் தகவல்தொடர்புக் கலையின் நுட்பங்களை அறிவது முக்கியம். எழுத்து, பேச்சு, உடல் மொழி என்பவை இந்தத் திறனின் உட்கூறுகள்.

பேச்சு மூலம் ஒருவரைத் தன் வசப்படுத்துவது தனிக் கலை. அதே போலத்தான் எழுதுவதும். இந்த இரு திறன்களையும் பயிற்சியால் சாத்தியமாக்கிக்கொள்ளலாம். ஆனால் உடல்மொழி (Body Language) மூலம் ஒருவருடைய மனஓட்டத்தை உணர்வதையும் உணர்த்துவதையும் நிதர்சன உலகில் பழகியே தெரிந்துகொள்ள முடியும். தண்ணீரில் இறங்கினால் மட்டுமே சாத்தியமாகும் நீச்சல் போல, பல்வேறுபட்ட மனிதர்களிடம் பழகியே உடல் மொழி திறனைக் கூர்மைப்படுத்திக் கொள்ள முடியும்.

3. பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் (Problem solving):

பள்ளிப் பருவத்தில் செயல்வழி கற்றல், செய்முறை தேர்வுகளின் நோக்கமே இந்த மென் திறனை மேம்படுத்திக் கொள்வதுதான். பட்டிமன்றம், வாதிடுதல் உள்ளிட்டவையும் செயற்கையாக ஒரு சவாலை உருவாக்கி, அதைத் தன்னுடைய பாணியில் தீர்க்க முயற்சிக்கும் கலைதான். ஆனால், பொத்திப் பொத்தி வளர்க்கும் தற்போதைய பெற்றோர் வளர்ப்பில் குழந்தைகளுக்கு இந்தத் திறனில் பரிச்சயமே கிடைப்பதில்லை.

எனவே, இந்தத் திறனில் புடம் போட்டுக்கொள்ள, தனிப்பயிற்சி அவசியம். கல்லூரிப் பருவத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினை ஒவ்வொன்றையும் தடையாகக் கருதாமல், தங்களுடைய திறமையை உரசிப் பார்த்துச் சொல்லக் கிடைத்த சவாலாக எதிர்கொள்ளும் மனநிலை இந்தத் திறனை வளர்த்தெடுக்கும்.

4. நேர மேலாண்மை (Time management):

படிப்போ, விளையாட்டோ, பொழுதுபோக்கோ... எப்போது, எதில் ஈடுபட்டாலும் அப்போது அதை முழுமையாக மேற்கொள்வதே நேர மேலாண்மைக்கு அடிப்படை. ஒரு செயலைத் தொடங்கும் முன்னர் அதற்கு முறையான திட்டமிடல், எதிர்ப்புகள், எதிர்பார்ப்புகளைக் கணக்கிடல், சரியான நேரத்தில் தொடங்குதல் ஆகியவை இதன் அடுத்த படிகள். நேர மேலாண்மையின் அருமையைப் புரிந்துகொண்டவர்கள், கல்லூரிப் பருவத்தை என்றைக்கும் நினைவுகூரத்தக்கதாக மாற்றிக்கொள்வார்கள்.

5. கூர் நோக்கு (Observation):

வெற்றிகரமான நபர்களைத் தனித்துக் காட்டுவது அவர்களுடைய கூர் நோக்குத் திறனும், நடைமுறையில் அந்தத் திறனை இதர திறன்களோடு பொருந்தச் செய்வதும்தான். விழிப்புடன் இருத்தலும், வருமுன் அறிதலை வளர்த்துக்கொண்டு, எந்த ஒரு விஷயத்தையும் பகுத்தறிந்து பார்க்க கூர் நோக்கல் திறன் உதவும். இணையத்தில் இந்தத் திறன் வளர்ப்புக்குச் சுவாரஸ்யமான விளையாட்டுகள் கொட்டிக்கிடக்கின்றன.

6. முரண்பாடுகளைத் தீர்ப்பது (Conflict resolution):

அடிப்படையான சமூகத் திறனும், மனிதவள மேம்பாட்டுக் கலையில் அத்தியாவசியமானதும் இதுதான். வெவ்வேறு மனிதர்களைக் கையாள்வதில், அவர்களிடமிருந்து சிறப்பானதைப் பெறுவதற்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் இந்தத் திறன் பெரிதும் உதவும். ஆனால், பிரச்சினையைக் கண்டு பின்வாங்குவது, ஒத்திப்போடுவது போன்றவை அண்டாமல் இருப்பது இந்தத் திறன் வளர்ச்சிக்கு உதவும்.

7. தலைமைப்பண்பு (Leadership):

மென் திறனுக்கான பாராட்டு உணர்வு, நகைச்சுவை உணர்வு, குழுவை வழிநடத்தும் ஆற்றல், சிறப்பான மதிப்பீடுகளைப் பின்பற்றுவது என்று தலைமைப்பண்புக்கான பன்முகத்திறன்களை அடையாளம் கண்டு, அவற்றைத் தன்வயமாக்கிக்கொள்ளக் கல்லூரிப் பருவமே சரியான களம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்