சமாளிக்க முடியுமா சரவணனால்?

By ஜி.எஸ்.எஸ்

அந்த நிறுவனத்தின் தலைமையகம் டெல்லியில் உள்ளது. அவர்கள் தங்களிடம் சேர்வதற்கான அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கச் சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேர்முகத் தேர்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

பத்தரை மணிக்கு நேர்முகத் தேர்வு தொடங்குகிறது என்று சரவணனுக்குத் தெரிவித்திருந்தார்கள். பத்து நிமிடம் தாமதமாக வந்து சேர்ந்த சரவணன் இன்னும் யாரையும் கூப்பிடவில்லை என்ற தகவலை அறிந்ததும் சந்தோஷம் அடைகிறான்.

வரவேற்பறையில் உட்காரச் சொல்கிறார்கள். காலி நாற்காலியில் உட்கார்ந்த சரவணன் பக்கத்தில் இருப்பவரிடம் பேசத் தொடங்குகிறான்.

“நீங்க சென்னைதானா?”

“இல்லை. கோயம்புத்தூர்”.

“கோயமுத்தூரிலிருந்தா வறீங்க? இவங்க அங்கேயேகூட நேர்முகத் தேர்வை நடத்தி இருக்கலாமே. தவிர இவங்க ஒழுங்கா நேர்முகத் தேர்வு நடத்தி நம்மைத் தேர்ந்தெடுக்கப் போறாங்களா என்ன?”

சரவணனுக்கு இரு தரப்பிலும் உட்கார்ந்திருந்தவர்கள் திடுக்கிட்டு அவனைப் பார்க்கிறார்கள். “என்ன சொல்றீங்க?” எனக் கேட்கிறார்கள்.

“நாற்பத்தைந்து காலி இடங்கள் இருப்பதாகச் சொன்னங்க இல்லையா?”.

“நாற்பத்தி ஏழு” என்று திருத்துகிறார் நேர்முகத் தேர்வுக்கு வந்த இன்னொருவர்.

“சரி இருக்கட்டும். இதெல்லாம் ஐ வாஷ். ஏற்கனவே அவங்களுக்குத் தெரிஞ்ச முப்பது பேரைத் தேர்ந்தெடுத்துட்டாங்க. பாக்கி இடங்களுக்காகத்தான் நாம முட்டி மோதப் போகிறோம்.”

இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவருக்குக் கண்களில் நீர் ததும்பி விட்டது. “இந்த வேலையை நான் மலைபோல நம்பிட்டிருக்கேன்” என்கிறார்.

“கவலைப்படாதீங்க. எனக்குக் கொஞ்சம் டிப்ஸ் கிடைச்சிருக்கு. நேர்முகத் தேர்விலே என்ன மாதிரி கேள்வி கேட்கப் போறாங்கன்னு தகவல் கிடைச்சிருக்கு”.

அடுத்த கணம் சரவணனை நோக்கிப் பலரும் வரத் தொடங்குகிறார்கள். ஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்த வேறு சிலருக்குச் சைகை காட்ட, சிறிது நேரத்தில் சரவணனைச் சுற்றிப் பதினாறு பேர்!

“ரொம்ப டெக்னிகலாத்தான் கேட்பாங்களாம். சப்ஜக்டிலே இருந்துதான் கேள்விகளாம்”.

‘அடடா, சப்ஜக்ட் புத்தகத்தை எடுத்து வந்திருக்கலாமே. வேகமாக ஒரு ரிவிஷன் நடத்தியிருக்கலாமே’ என்று பலர் பதறுகின்றனர். புத்தகத்தை எடுத்து வந்திருந்த சிலரைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்கள்.

இதற்குள் “மிஸ்டர் சரவணன் யாரு? உள்ளே போகலாம்” என்று கூறுகிறார் அங்கு வந்த நிறுவனப் பிரதிநிதி.

‘அடடா, முதல் ஆளே நாமதானே?’ என்று முணுமுணுத்தபடி நேர்முகத் தேர்வு நடைபெறும் அறைக்குள் நுழைந்தவனுக்குக் கடும் அதிர்ச்சி.

உள்ளே சிசிடிவி கேமராக்கள் காட்சியளித்தன. அறைக்கு வெளியே நடக்கும் நிகழ்வுகளை உள்ளிருந்தே பார்க்க முடியும். “வெளியில் நான் உட்கார்ந்த பகுதியைக்கூட உள்ளிருந்தே இவர்களால் பார்த்திருக்க முடியுமே. நாம் பேசியதெல்லாம் கேட்டு இவர்கள் என்ன நினைத்திருப்பார்கள்!’ என்று தவிக்கிறான். பிறகு வேறொரு விவரம் நினைவுக்கு வந்ததும், அவன் முகத்தில் மலர்ச்சி உண்டாகிறது.

தேர்வாளர் 1 – வெல்கம் மிஸ்டர் சரவணன்... உட்காருங்க... நேர்முகத் தேர்வுக்கு வந்த மீதி பேரிடம் ரொம்ப நேரம் ஏதோ பேசிகிட்டிருந்தீங்க போல.

சரவணன் - உங்க நிறுவனத்தைப் பற்றி அவங்க தெரிஞ்சுக்காம வந்ததாலே என் கிட்டே கொஞ்சம் கேட்டாங்க சார்.

தேர்வாளர் 2 – அப்படி என்ன விவரங்களை நீங்க சொன்னீங்க?

சரவணன் - உங்க நிறுவனத்தைத் தொடங்கியது கிருஷ்ணகாந்த் என்பதிலிருந்தும், அந்த வருடம் 1960 என்பதிலிருந்தும் தொடங்கி அதன் இப்போதைய தயாரிப்புகளைப் பற்றிச் சொன்னேன்.

தேர்வாளர் 2 – எங்கள் நிறுவனத்தின் இப்போதைய தயாரிப்புகள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

(சரவணன் கடகடவென அடுக்கத் தொடங்குகிறான்.)

தேர்வாளர் 3 – நீங்க ஜீன்ஸ் போட்டுட்டு வந்திருக்கீங்களே, நேர்முகத் தேர்விற்கென்று ஒரு டிரஸ் கோடைக் கொடுத்திருக்கோமே.

சரவணன் – (திடுக்கிட்டு) – அப்படியா? எனக்குத் தெரியாதே சார்.

தேர்வாளர் 2 – (சிறிது நேரம் சரவணனை உற்றுப் பார்த்துவிட்டு)

ஓகே. இப்ப இதுக்குப் பதில் சொல்லுங்க...

(நேர்முகம் தொடர்கிறது)

சரவணனின் நடவடிக்கைகள் எந்த அளவுக்கு நேர்முகத் தேர்வில் வெற்றி பெற அவனுக்கு உதவியாக இருக்கும்? பார்ப்போம்.

தாமதமாக நேர்முகத் தேர்வுக்கு வந்தது பெரும் தவறு. எப்போதுமே உங்களுக்குக் குறிப்பிட்ட நேரத்தைவிட அரை மணி நேரம் முன்னதாகவே நேர்முகம் நடக்கும் இடத்தை அடைந்து விடுவது நல்லது.

வரவேற்பு அறையில் இருக்கும்போதுகூடக் கவனம் தேவை. நிறுவனத்தின் ஊழியர் எவராவது அங்கே உட்கார்ந்திருக்கக்கூடும் (வேண்டுமென்றும் உட்கார வைக்கப்பட்டிருக்கலாம்).

ஆனால் இதுபற்றிய கவலை எதுவும் இல்லாமல் ‘அந்த நிறுவனம் நேர்முகத் தேர்வு நடத்துவதே ஏமாற்று வேலை’என்பதுபோல் சரவணன் பேசுவது முட்டாள்தனம்.

நேர்முகத் தேர்வு அறைக்குள் நுழைந்த பிறகுதான் வெளியே நடக்கும் நிகழ்வுகளை உள்ளிருந்தே பார்க்கும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டதைச் சரவணன் கவனிக்கிறான். ஆனாலும் அவன் மனத்தில் ஒரு தெளிவு. “நான் நடந்து கொண்ட விதத்தை இவர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்திருக்கலாம். ஆனால் நான் என்ன பேசினேன் என்பது இவர்களுக்குக் கேட்டிருக்க வாய்ப்பு குறைவு” என்பது மனத்தில் பதிந்ததும், சரவணன் நன்றாகவே சமாளிக்கிறான். அந்த நிறுவனம் குறித்த தகவல்களை அவன் ஏற்கனவே அறிந்துகொண்டது மட்டுமல்ல, அவற்றை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பையும் உருவாக்குகிறான்.

என்றாலும்கூட சரவணன் நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக் குறைவுதான். காரணம், டிரஸ் கோடு குறித்து அவன் தெரியாது என்று கூறுவது. இதுபற்றிய நிபந்தனைகள் நேர்முகத் தேர்வில் பங்கு பெறும் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. போதாக்குறைக்கு ஹோட்டலின் வரவேற்புக் கூடத்திலும் இந்த அறிவிப்பை நிறுவனம் வைத்திருக்கிறது.

தனக்குத் தகவல் வரவில்லை என்று சரவணன் கூறுவது உண்மையாக இருந்தால்கூட, என்ன வகை உடைகளை அணிந்து வரலாம் என்பது குறித்து நிபந்தனைகள் ஏதாவது உண்டா என்பதைச் சரவணனே கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும். இந்தச் சூழலில் சரவணன் மன்னிப்புகூடக் கோராதது அவனுக்கு எதிராகத்தான் பயன்படும்.

பொதுவாக உங்களுக்கு வசதியான உடையை அணிந்துகொண்டு நேர்முகத் தேர்வுக்குச் செல்லுங்கள். என்ன விதமான பதவிக்கான நேர்முகமோ, அதற்கு ஏற்ற மாதிரியான நிறங்கள் மற்றும் டிசைன்கள் கொண்ட உடைகளாக அவை இருக்கட்டும். உடைகள் குறித்த நிபந்தனை உண்டா என்பதை முன்னதாகவே சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஷூக்கள் நன்கு பாலிஷ் செய்யப்பட்டவையாக இருக்கட்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

சினிமா

8 mins ago

தமிழகம்

30 mins ago

இந்தியா

28 mins ago

வாழ்வியல்

47 mins ago

சுற்றுலா

50 mins ago

வணிகம்

6 hours ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்