சைகோமெட்ரிக் தேர்வுகள்: அந்நியனாய் நடந்து கொள்ளலாமா?

By ஜி.எஸ்.எஸ்

சிலர் ஏனோதானோ என்று வேலை செய்வார்கள். ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் தங்கள் பணிகளை அவர்களுக்குச் செய்யத் தெரியாது. நிறுவனங்களின் சிலவகைப் பணிகளுக்கு இப்படிப்பட்டவர்களை அமர்த்திக் கொண்டால், நிறுவனத்துக்கு மிகவும் சிக்கல்தான்.

சிலர் தேர்ந்த நடிகர்களாக இருப்பார்கள். நேர்முகத் தேர்வு நடக்கும் நிமிடங்களில் மிகவும் சாமர்த்தியமாகத் தங்கள் உண்மை முகத்தை மறைத்துக் கொண்டு நிறுவனத்தின் எதிர்பார்ப்பு அனைத்தையுமே பூர்த்தி செய்பவர்கள்போல தங்களைக் காட்டிக் கொள்வார்கள்.

இந்த விதத்தில் அவர்கள் உண்மை முகத்தை வெளிக் கொண்டுவர நிறுவனத்துக்குப் பெரிதும் உதவுகின்றன சைக்கோமெட்ரிக் தேர்வுகள். எடுத்துக்காட்டாக இதோ ஒரு கேள்வி.

“உங்கள் டூவீலரில் பெட்ரோல் முற்றிலும் காலியாகிவிட்டது போன்ற நிலைமை, என்ன செய்வீர்கள்?’’.

இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால், உங்கள் பதில் என்னவாக இருக்கும்? வண்டியைத் தெரு ஓரமாக நிறுத்திவிட்டு பெட்ரோல் பங்க்கிற்கு நடந்து சென்று பெட்ரோல் வாங்கி வருவீர்களா? டூவீலர் ஓட்டிவரும் வேறொருவரிடம் உதவி கேட்டு உங்கள் வண்டியை அவர் வண்டியுடன் ‘டோ’ செய்தபடி பெட்ரோல் பங்க்கை அடைவீர்களா? அல்லது எதிர்படும் ஒவ்வொரு டூவீலர் மற்றும் ஆட்டோ ஓட்டுநரிடமும் “கொஞ்சம் பெட்ரோல் கொடுங்கள்” என்று கெஞ்சுவீர்களா?

இப்பப்பட்ட பதில்களை அளிக்காமல், “ஒருபோதும் இப்படிப்பட்ட நிலைமை நேராது. என் வண்டியில் பெட்ரோல் ரிசர்வ் நிலைக்கு வந்துவிட்டால், உடனே பெட்ரோலை நிரப்பிக் கொண்டு வருவேன்” என்பது உங்கள் பதிலானால் உங்கள் ஒழுங்குமுறைத் தன்மை அதில் வெளிப்பட வாய்ப்பு உண்டு.

அதை மேலும் சோதிக்க வேறொரு கேள்வியை உங்களிடம் கேட்டு அதற்கு மூன்று விடைகளும் அளிக்கப்பட்டு அவற்றிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்யக் கூறலாம். இதோ ஒர் உதாரணம்.

உங்கள் வண்டியின் பெட்ரோல் இப்போதுதான் ரிசர்வில் வந்திருக்கிறது. என்ன செய்வீர்கள்?

(அ) எப்போதுமே நம்பகமான, குறிப்பிட்ட பெட்ரோல் பங்க்கில்தான் பெட்ரோல் போடுவேன்

(ஆ) வழியில் எந்த பெட்ரோல் பங்க்காக இருந்தாலும் அதில் பெட்ரோல் நிரப்பிக்கொள்வேன்

(இ) குறிப்பிட்ட பிராண்ட் (இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் என்பதுபோல்) பெட்ரோல் பங்க்கில்தான் பெட்ரோல் நிரப்பிக்கொள்வேன்

இப்போது உங்கள் பதிலை, ஒரு மூன்றாவது நபர் கோணத்தில் யோசித்துப் பாருங்கள். நீங்கள் எந்த அளவுக்கு ஒழுங்குமுறையில் நடந்து கொள்வீர்கள் என்பது உங்களுக்கே தெரியும்.

வேறொரு எளிமையான, நேரடியான கேள்வியின் மூலம்கூட இந்தத் தன்மையை அறிந்துகொள்ள முடியும்.

நாளைக்கு என்னென்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டால் அதற்கான உடனடி பதில் உங்களிடம் உண்டா?

அ) நடப்பது நடக்கப் போகிறது என்ன திட்டம் போட்டு என்ன பயன்?

ஆ) என்னென்ன செய்ய வேண்டும் என்பதை டைரியில் எழுதிவைத்து அதன்படியே செயலாற்றுவது என் வழக்கம்.

இ) அடுத்த நாள் செய்ய வேண்டியதை அதற்கு முன்தின இரவே திட்டமிடுவதுதான் என் வழக்கம்.

ஒழுங்குமுறையோடு நீங்கள் இருக்கிறீர்களா என்பதோடு ஒழுங்குமுறை இல்லாதவர்களை நீங்கள் எப்படி நோக்குகிறீர்கள் என்பதை அறிந்து கொள்வதும் நிறுவனங்களைப் பொறுத்தவரையில் முக்கியம்தான். எனவே கீழ்க்கண்டது போன்ற ஒரு கேள்வி அளிக்கப்படலாம்.

அசுத்தமான உணவை ரயில் பயணிகளுக்கு அளிப்பது, உயிருக்குப் போராடுபவரை தன் காரில் ஏற்றிக்கொள்ளாமல் செல்வது, போன்ற தவறுகளைச் செய்பவர்களை ‘அந்நியன்’ விக்ரம் கொலை செய்வது சரியா?

(அ) மிகவும் அதிகப்படியான தண்டனை. அந்தக் குற்றங்களெல்லாம் சகஜமாக நடப்பவைதானே?

(ஆ) நிச்சயம் சரி. எனக்கும்கூட அப்படி இருக்கத்தான் ஆசை.

(இ) கொலை என்று இல்லாவிட்டாலும் மிகக் கடுமையான தண்டனைகளை அவர்களுக்கு அளிக்கத்தான் வேண்டும்.’’

எது போன்ற நபர்கள் எந்த விதமான பதிலைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

இப்படி விதவிதமான கேள்விகளைக் கேட்பதன் மூலம் ஒரு பதிலில் இல்லையென்றால், இன்னொரு பதிலில் உங்கள் சுயரூபத்தைக் காட்டிவிடுவீர்கள்.

எனவே சைகோமெட்ரிக் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற உத்திகளையும், சாமர்த்தியங்களையும் பயன்படுத்தலாம். அதைவிட மேலானது நிறுவனங்கள் எதிர்பார்க்கும் சிறப்புத் தன்மைகளையும், இயல்புகளையும் நீங்கள் நிஜமாகவே அடைய முயல்வதுதான்.

(aruncharanya@gmail.com)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 min ago

விளையாட்டு

10 mins ago

சினிமா

11 mins ago

இந்தியா

48 mins ago

தமிழகம்

45 mins ago

சினிமா

51 mins ago

இந்தியா

32 mins ago

கருத்துப் பேழை

41 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்