கடலின் அரிய உயிரினங்கள்

By ராஜலட்சுமி சிவலிங்கம்

கடல் என்பது உப்பு நீர் நிரம்பிய மிகப் பெரிய நீர்நிலை. பூமியில் மூன்றில் இரண்டு பகுதி கடல் நீராக உள்ளது. பரப்பையும் ஆழத்தையும் பொறுத்து கடல், பெருங்கடல் என இது வகை பிரிக்கப்படுகிறது.

பெருங்கடலுடன் இணைந்தோ தனித்த நீர்நிலையாகவோ கடல் இருக்கலாம்..

பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், ஆர்ட்டிக் பெருங்கடல்,அண்டார்ட்டிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் ஆகியவை பெருங்கடல்கள். அரபிக் கடல், ஆரல் கடல், அயோனியன் கடல், இன்லான்ட் கடல், வங்காள விரிகுடா ஆகியவை கடல்கள் என அழைக்கப்படுகின்றன. அரிய கடல் உயிரினங்கள் இவற்றில் உள்ளன.

வில் மீன்: இது ஒரு அதிசயமான உயிரினம். இதனை ‘தண்ணீர் அம்புடன்’ வேட்டையாடும் வில் மீன் என்கிறார்கள். இந்த மீன் தனது இரைகளைப் பிடிக்கத் தன்னுடைய வாயை வில்லாகப் பயன்படுத்துகிறது. தன்னைச் சுற்றியுள்ள தண்ணீரை வாயினால் உள்ளிழுத்து, பின் அந்தத் தண்ணீரையே அம்பு போலப் பாய்ச்சுகிறது. ஏறக்குறைய 3 மீட்டர் தூரத்துக்கு இந்த நீர் அம்பு பாய்கிறது.

இதில் மாட்டிக்கொள்ளும் தெள்ளுப்பூச்சி, சிலந்தி, பட்டாம்பூச்சி போன்றவை கீழே விழுந்துவிடுகின்றன. அவற்றை இது இரையாகத் தின்கிறது.

சோக மீன்: சிறிதளவே தசைகள், எலும்புகள் கொண்டது இது. பிதுக்கிய வாழைப்பழம் போலக் கொழ கொழ என்று இருக்கும். எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் சோகமான முகத்துடன் இருக்கும். கடல் நீரின் அடர்த்தியைவிட இந்தச் சோக மீனின் உடம்பின் அடர்த்தி குறைவே. இந்த மீன் இனம் வேகமாக அருகிவருகிறது.

கடற்குதிரை: கடற்குதிரையின் முக அமைப்பு குதிரையின் அமைப்பைப் போல இருக்கும். உடல் வித்தியாசமாக இருக்கும். மனித இனமாகட்டும், இதர உயிரினங்களாகட்டும், கர்ப்பம் தரித்துக் குழந்தைகளைப் பெற்றெடுப்பது பெண்கள்தான். ஆனால், இந்தக் கடற்குதிரைகளில் தம் சந்ததியைச் சுமந்து பெற்றெடுப்பது ஆண்கள் என்பது ஒரு அதிசயம்.

கடற்குதிரைகள் 2.5 செ.மீ. முதல் 35 செ.மீ.வரையிலான நீளம் கொண்டவை. இவை உலகின் எல்லாக் கடற்பகுதியிலும் உள்ளன. இவற்றில் 35க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. கடலின் ஆழம் குறைந்த பகுதிகளிலே கடலின் ஓரப் பகுதியில் கடல் பாசிகளுக்கிடையே வாழ்கின்றன. இதன் உடலின் மேற்பகுதி கடினமான ஓடு போன்று இருப்பது இதன் பாதுகாப்புக்கு உதவுகிறது. நிறம் மாறுவதில் பச்சோந்திகளைவிட இவை கில்லாடிகள்.

ஸ்குவிட்: இது ஒருவிதச் சிப்பி மீன். இதை, புரியாத புதிர்களைக் கொண்ட உயிரினம் என்கிறார்கள். உலகின் பெரும்பாலான பெருங்கடல்களின் ஆழத்தில் இது வாழ்கிறது. கடலில் வாழும் மிகப் பெரிய உயிரினங்களில் ஒன்று. பெண் ஸ்குவிட் 13 மீட்டரும் ஆண் பத்து மீட்டரும் நீளமும் இருக்கும்.

பவளப் பாறைகள்

பவளப் பாறைகள், சுண்ணாம்புக் கற்களாலான உயிரினமாக இருந்தாலும் இவை மற்ற நுண்ணுயிரிகளை உண்டு உயிர் வாழ்கின்றன. பவளப் பாறைகளை ஒரு வகையான விலங்கு அல்லது தாவரம் என்றுகூடச் சொல்லலாம். இவற்றிலுள்ள பாலிப்ஸ் என்ற உயிரினம் இறந்துவிட்டால் இந்தப் பவளப் பாறைகளும் இறந்துவிடும்.

இந்தப் பாலிப்ஸ் உயிரினங்கள், கடலிலுள்ள சுண்ணாம்பை எடுத்துக்கொண்டு இவற்றுக்குக் கடினத் தன்மையையும் பல வகையிலான தோற்றங்களையும் தருகின்றன. இவை உண்பதற்காக மட்டும் தலையை வெளியில் நீட்டி தாவர மற்றும் பிற சிறிய மிதவை நுண்ணுயிரிகளைத் தின்று வாழ்கின்றன.

இந்தியாவில் மட்டும் 200 வகையான பவளப் பாறைகள் உள்ளன. இவை கடினமானவை, மிருதுவானவை என்று இரண்டு வகைப்படும். பல வடிவங்களிலும் காணப்படும். மனித மூளை வடிவம், மான்கொம்பு வடிவம், மேஜை மற்றும் தட்டு வடிவம் போன்ற வடிவங்களிலும் இருக்கின்றன.

கடல் விசிறி உயிரினமும் மிருதுவான பவளப் பாறை வகையைச் சேர்ந்தவை. இவை பார்ப்பதற்குச் செடிகள் அல்லது சிறு கொடிகள் போன்று இருக்கும்.

பவளப் பாறைகள் பல உயிரினங்களுக்குத் தஞ்சம் அளிக்கின்றன. ஏறக்குறைய 250க்கும் மேற்பட்ட பலவிதமான கண்ணைக் கவரும் வண்ண மீன்கள், பாசி வகைகள் போன்றவையும் கடற் பறவைகள், பாலூட்டிகள், ஒட்டு உயிரினங்கள், முள் தோல் விலங்குகள் போன்றவையும் பவளப் பாறைகளைச் சார்ந்து வாழ்கின்றன.

எனவே இந்தப் பவளப் பாறைகள் பல கடல்வாழ் உயிரினங்களுக்கு உறைவிடமாகவும் உணவளிக்கும் இடமாகவும் இருக்கின்றன. கடலோரப் பகுதிகளை மண் அரிப்பிலிருந்தும் பாதுகாக்கின்றன. வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவைக் குறைத்துச் சுற்றுப்புறச்சூழலையும் மேம்படுத்துகின்றன. ராமேசுவரம் பகுதியில் பவளப் பாறைகள் அதிகம் இருந்ததால்தான் அப்பகுதி சுனாமியால் தாக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடல் பாதுகாப்பு

தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கடல் பகுதியான மன்னார் வளைகுடாவில் கடற்பசு, கடற்குதிரைகள், கடல் ஆமைகள், பவளப் பாறைகள், கடல் அட்டைகள் உட்பட மூவாயிரத்து அறுநூற்றுக்கு மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன.

வனத் துறையினர், இப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட தேசியக் கடல்வாழ் உயிரினப் பகுதியாக அறிவித்துக் கண்காணித்துவருகிறார்கள். அரிய வகை கடல் வாழ் உயிரினங்களைப் பிடிப்பவர்களுக்கு அபராதமும் ஏழாண்டுச் சிறை தண்டனையும் விதிக்கப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

17 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

51 mins ago

தமிழகம்

2 hours ago

கார்ட்டூன்

3 hours ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்