சேதி தெரியுமா? - புதிய தலைமைத் தேர்தல் ஆணையர்

By கனி

இந்தியாவின் 21-வது தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி ஜூலை 6 அன்று பதவியேற்றார். நஜீம் ஜைதி ஓய்வுபெற்றதை அடுத்து, மத்தியச் சட்ட அமைச்சகம் அச்சல் குமார் ஜோதியை அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக நியமித்திருக்கிறது. கடந்த மே 2015-ல், இவர் தேர்தல் ஆணையராகப் பதவியேற்றார். 1975-ன் ஐ.ஏ.எஸ். பேட்சை சேர்ந்த இவர் மாவட்ட நடுவர் மன்ற நீதிபதியாக முதலில் பொறுப்பேற்றார். குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, குஜராத்தின் தலைமைச் செயலாளராகப் பதவிவகித்தார்.

இனி இவர் தலைமையில் குஜராத், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும். இந்தியத் தேர்தல் ஆணையத்தை நிர்வகிக்கும் தலைமை தேர்தல் ஆணையரின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகள். 65 வயதுவரை இந்தப் பதவியில் அவர் நீடிக்கலாம். அந்த வகையில், தற்போது 64 வயதாகும் அச்சல் குமார் ஜோதியின் பதவிக் காலம் ஜனவரி 2018-ம் ஆண்டு முடிவடைகிறது.

பள்ளி பாடத்திட்டக் குழு அறிவிப்பு

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி பாடத்திட்டங்களை மாற்றுவதற்குப் 10 பேர் கொண்ட குழு அமைத்து ஜூலை 4-ம் தேதி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்தப் பாடத்திட்டக் குழுவின் தலைவராக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இந்தக் குழுவில் தமிழக வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமசாமி, இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, கணித அறிவியல் நிறுவனத்திலிருந்து ஆர். ராமானுஜம், பேராசிரியர் ஆர். பாலசுப்ரமணியம், எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். 1,6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு 2018-19-ம் கல்வியாண்டிலும், 2,7,10, 12 ஆகிய வகுப்புகளுக்கு 2019-20-ம் கல்வியாண்டிலும், 3,4,5, 8 ஆகிய வகுப்புகளுக்கு 2020-21-ம் கல்வியாண்டிலும் பாடத்திட்டங்கள் மாற்றப்படவிருக்கின்றன.

‘போலி சாதிச் சான்றிதழ் என்றால் பதவி, பட்டம் பறிக்கப்படும்’

போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து அரசுப் பணியிலோ கல்லூரியிலோ சேர்ந்திருப்பவர்களின் பணியையும் பட்டத்தையும் பறிக்கலாம் என்று ஜூலை 6-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மும்பை உயர் நீதிமன்றம் டிசம்பர் 2014-ல் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. “போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து அரசுப் பணியில் சேர்ந்திருந்தாலோ, இடஒதுக்கீட்டின் மூலம் கல்லூரியில் சேர்ந்திருந்தாலோ, அந்தப் பதவியையும் பட்டத்தையும் ரத்துசெய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இந்தத் தீர்ப்பை முன்தேதியிட்டுச் செயல்படுத்த முடியாது. இப்போதிலிருந்து இது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கலாம்” என்று இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்திருக்கிறது.

இந்தியா-இஸ்ரேல் இடையே ஏழு ஒப்பந்தங்கள்

மூன்று நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக இஸ்ரேல் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 4-ம் தேதி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில், இந்தியா-இஸ்ரேல் இடையே வேளாண்மை, நீர் மேலாண்மை, தொழில்நுட்பம், பாதுகாப்பு, விண்வெளி ஆராய்ச்சி, தீவிரவாத ஒழிப்பு தொடர்பாக ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியா-இஸ்ரேல் இடையே கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தூதரக உறவு நீடிக்கிறது.

ஆனால், பாலஸ்தீனம்-இஸ்ரேல் இடையே நிலவிவரும் பிரச்சினை காரணமாக, இந்தியப் பிரதமர்கள் யாரும் இதுவரை இஸ்ரேல் சென்றதில்லை. 70 ஆண்டுகள் கழித்து இஸ்ரேல் சென்றிருக்கும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிதான். இந்தச் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட மோடி, ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜெர்மனிக்குச் சென்றிருக்கிறார்.

செவ்வாய் கோள் மண்ணில் நச்சுத்தன்மை

செவ்வாய் கோளில் உயிரினங்களுக்கான சாத்தியம் குறித்து சமீப வருடங்களாக ஆய்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன. அதில் செவ்வாய் கோளின் நிலப்பரப்பில் நச்சுத்தன்மைக்கொண்ட வேதிப்பொருட்களின் கலவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை அங்கேயிருக்கும் உயிரினங்களை அழித்துவிடும் என்பது தெரியவந்துள்ளது. இதனால் செவ்வாய் கோளில் அயல் வாழ்க்கையைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியங்கள் குறைந்திருக்கின்றன.

பிரிட்டனின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை நடத்தியிருக்கின்றனர். செவ்வாயின் நிலப்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட ‘பெர்க்ளோரேட்ஸ்’(perchlorates) என்ற வேதிக்கூட்டுப்பொருட்களின் தன்மையைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டிருக்கின்றனர். விண்கலத்தில் எடுத்துச் செல்லப்படும் பாக்டீரியாவை இந்த வேதிப்பொருள் புறஊதா வெளிச்சம் படும்போது கொன்றுவிட முடியும் என்று அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

“விண்வெளிப் பயணங்களின்போது, செவ்வாய் கோளுக்கு எடுத்துச் செல்லப்படும் பாக்டீரியாவும், மற்றப் பொருட்களும் அங்கே நச்சுத்தன்மையை ஏற்படுத்தலாம். செவ்வாய் கோள் பயணங்களின்போது இதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். பல ஆண்டுகளுக்கு முன், செவ்வாய் கோளில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ‘பெர்க்ளோரேட்ஸ்’ செவ்வாயின் வாழிடத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்” என்று சொல்லியிருக்கிறார் எடின்பர்க் இயற்பியல், வானியல் கல்லூரியைச் சேர்ந்த ஜெனிஃபர் வாட்ஸ்வர்த் (Wadsworth).

மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு எதிர்ப்பு

மரபணு மாற்றப்பட்ட கடுகு சந்தைக்குவருவதை உடனடியாகத் தலையிட்டுப் பிரதமர் மோடி நிறுத்தவேண்டும் என்று பதினெட்டு விஞ்ஞானிகள் ஜூலை 6-ம் தேதி, அவருக்குக் கடிதம் எழுதினர். இந்த விஞ்ஞானிகளில் பெரும்பாலானோர் வேளாண் பல்கலைக்கழகங்களின் முன்னாள் துணைவேந்தர்கள். இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகு நாட்டின் விவசாயிகளைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதால் இதைப் பற்றிய விசாரணைக்கு மோடி உத்தரவிடவேண்டும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

“அரசு நிர்வாகத்தில் உயர் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கும் சில விஞ்ஞானிகள், இந்திய விவசாயிகளுக்கும் நம்முடைய பல்லுயிர் சொத்துகளுக்கும் எதிராகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மிகுந்த வேதனை அளிக்கிறது. வணிக நோக்கத்தில் உருவாக்கப்பட்ட உணவுப் பயிர்களை அவர்கள் நம்முடைய பயிர்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிராகப் பயன்படுத்துகின்றனர். இந்தக் கடுகை வெளியிடுவதற்குப் பின்னால் உள்நோக்கம் இருக்கிறது” என்று அவர்கள் அந்தக் கடிதத்தில் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகு, டெல்லி பல்கலைக்கழகத்தின் பயிர் தாவரங்களுக்கான மரபணு கையாளுதல் மையத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மரபணு பொறியியல் மதப்பீட்டு குழு (GEAC) மே மாதம், இந்தக் கடுகை வணிகரீதியாக சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது. இன்னும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷ்வர்தனின் அனுமதி மட்டுமே பாக்கி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்