இப்படியும் கற்கலாம்: இந்தியாவின் முதல் மனநல அருங்காட்சியகம்

By ஷங்கர்

மூளை, மனநலம் தொடர்பான முதல் அருங்காட்சியகம் இந்தியாவின் நாக்பூர் நகரத்தில் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகிறது. மனநலம், மனநலக் குறைபாடுகள் தொடர்பாகத் தெளிவின்மையும் தவறான கற்பிதங்களும் மூட நம்பிக்கைகளும் இருக்கும் நாட்டில் தனிநபர் முயற்சியாக இந்த அருங்காட்சியகத்தை மனநல மருத்துவர் அவிநாஷ் ஜோஷி உருவாக்கியுள்ளார்.

மூளை, மனநலக் குறைபாடு தொடர்பான விழிப்புணர்வுச் செய்திகளையும் மனநல மருத்துவத்தின் பல்வேறு அம்சங்களையும் சாதாரண மக்களும் தெரிந்துகொள்ளும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மனநலக் குறைபாடு, மனநலச் சிகிச்சைகளின் உலகளாவிய வரலாறு ஆகியவை இங்கே சுவரொட்டிகளாகவும் ஓவியங்களாகவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மனநலக் குறைபாட்டின் வகைகள், சிகிச்சைகள் பற்றிய விவரங்களும் இங்கே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

மூளை, நரம்பியல் அறுவை சிகிச்சை தொடங்கிக் குழந்தைகள் உளவியல்வரை இந்த அருங்காட்சியகத்துக்கு வருபவர்கள் தெரிந்துகொள்ள இயலும். ஒவ்வொரு சுவரொட்டியிலும் ஒரு பள்ளிச் சிறுவனும் புரிந்துகொள்ளும் அளவில் இந்தி மொழியில் விவரணைகள் தரப்பட்டுள்ளன.

அறிவியல்பூர்வமாக அணுகப்படாத மனநலம்

உடல் நலக் குறைபாடுகளுக்கான காரணங்களைஅறிவியல்பூர்வமாக ஏற்கும் மக்கள்கூட மனநலக் குறைபாடுகளை விதி என நினைக்கிறார்கள். அத்துடன் மனநலக் குறைபாடுகளுக்கு வெளிப்படையாக மருத்துவர்களை அணுகுவது இன்னும் சங்கடமாகவே உணரப்படுகிறது. இந்தியாவில் நிலவும் மனநலப் பிரச்சினைகளின் அடிப்படையில் 11 ஆயிரத்து 500 மனநல மருத்துவர்கள் தேவை. ஆனால், வெறுமனே 3,000 மனநல மருத்துவர்களே தற்போது உள்ளனர். இந்தியா முழுவதும் மனநலக் குறைபாடுகளுக்கென்றே சிகிச்சை தர பிரத்யேகமாக 43 அரசு மனநல மருத்துவமனைகள் செயல்படுகின்றன.

அத்துடன் 400 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மனநலச் சிகிச்சைப் பிரிவு செயல்பட்டுவருகிறது. இங்கே 7 கோடிக்கும் அதிகமான மக்கள் மனநலப் பிரச்சினைகளுக்காகச் சிகிச்சைகள் எடுத்துக்கொள்கின்றனர். ஒரு லட்சம் மன நோயாளிகளுக்கு 0.3 மனநல மருத்துவர்கள், 0.17 மருத்துவத் தாதிகள், 0.05 உளவியல் நிபுணர்களே இருக்கின்றனர். கிராமப்புறங்களைப் பொறுத்தவரை பெரும்பாலான மனநலக் குறைபாடுள்ளவர்கள் மனநலப் பிரச்சினைகளுக்காக மந்திரவாதிகளையும் ஜோதிடர்களையும் நாடும் வழக்கம்தான் நீடித்துவருகிறது.

இந்நிலையில், நகர்ப்புறக் கட்டிடக் கழிவுகள், குப்பைகளிலிருந்து சிற்பங்களை உருவாக்கிய கலைஞர் நேக் சந்தின் தொகுப்புகளைப் பார்த்து உண்டான உத்வேகத்தில்தான் அவிநாஷ் ஜோஷி இந்த அருங்காட்சியகத்தை உருவாக்கியுள்ளார். நேக் சந்துக்குப் பாறைகள் என்றால், தனக்கு வார்த்தைகள் என்கிறார் ஜோஷி.

கிருஷ்ணன் முதல் சிக்மண்ட் ப்ராய்ட் வரை

புராணத்திலிருந்து நவீன அறிவியல்வரை மனநலம் தொடர்பான வெவ்வேறு தகவல்களை ஆராய்ந்து சேகரித்துள்ளார் அவிநாஷ் ஜோஷி. போர்க்களத்தில் தன்னுடைய உறவினர்களை எதிர்த்துப் போராட மனமின்றி அர்ஜுனன் நிலைகுலைந்து நின்றபோது கிருஷ்ணர் அறிதிறன் சிகிச்சையை (cognitive theraphy) கையாண்டதாகக் கூறுகிறார் ஜோஷி. இந்த அருங்காட்சியகத்துக்காக 5 லட்சம் ரூபாய்வரை செலவழித்துள்ளார் இவர்.

மூளையின் செயல்பாடு, நரம்பியல் செயல்முறைகளைக் குடிநோய், மனநிலை மாறுபாடுகளின் பின்னணியில் புரிந்துகொள்வதற்கான தகவல்களை இந்த அருங்காட்சியகம் வழங்குகிறது. காளை, நாய், ஆட்டின் மூளைகளும் இங்குப் பாடம் செய்துவைக்கப்பட்டுள்ளன. மனித மூளையுடன் ஒப்பிடுவதற்கு இவை உதவியாக உள்ளன.

இந்த அருங்காட்சியகத்துக்கு வரும் பார்வையாளர்கள், தங்களுக்கு ஏதேனும் மனநலப் பிரச்சினை இருப்பதை உணர்ந்தாலோ ஆலோசிக்க விரும்பினாலோ இங்குள்ள பெட்டியில் தங்கள் கருத்துகளையும் பிரச்சினைகளையும் எழுதிப்போடலாம்.

- அவிநாஷ் ஜோஷி

இதய நோய் தொடர்பான ஆழமான பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு பேசும் மக்கள்கூட மனநலப் பிரச்சினைகள் குறித்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் இருக்கும் நிலையில், மூளையும் புரிந்துகொள்ளப்பட்டுப் போஷிக்கப்பட வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்கிறார் டாக்டர் ஜோஷி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தொழில்நுட்பம்

17 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

47 mins ago

விளையாட்டு

55 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்