தேர்வுக்குத் தயாரா? - ஆங்கிலத்திலும் அசத்தலாம்!

By எஸ்.எஸ்.லெனின்

பத்தாம் வகுப்பு- ஆங்கிலம் தாள்- 1

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வைப் பொறுத்தவரை ஆங்கிலம் என்றாலே தமிழ் வழி மாணவர்களுக்குப் பதற்றமும், ஆங்கில வழி மாணவர்களுக்கு அலட்சியமும் இருக்கிறது. இரண்டுமே தவறானவை. அதேபோல ஆங்கிலத் தாள்களில் நூற்றுக்கு நூறு எடுப்பதுக் கடினமானதல்ல. பொதுத் தேர்வுக்கு இறுதிக்கட்டத் தயாரிப்பின் அடிப்படையில் ஆங்கிலம் முதல் தாளை இங்கே பார்ப்போம்.

விழிப்புடன் எழுதுக

ஆங்கிலம் முதல் தாள், Vocabulary (20 marks), Grammar (25 Marks), Prose (15 Marks), Poetry (20 Marks), Language Function (20 Marks) ஆகியவற்றை உள்ளடக்கியது. Vocabulary பிரிவில் Synonyms, Antonyms ஆகியவை தலா 5 மதிப்பெண்களுடன் இடம் பெறுகின்றன. இவற்றுக்குப் பதில் அளிக்கும் முன்னர் பொறுமையாகப் பல முறை வாசித்துப் பார்த்துச் சரியான விடையை எடுத்து எழுதுவதுடன் நிறைவாகச் சரி பார்ப்பதும் அவசியம். பாடம்தோறும் உள்ள Glossaries பகுதியிலிருந்தும் Synonyms படித்திருக்க வேண்டும். Synonyms எழுதிய வேகத்தில் antonyms எழுதுவதால், கவனக்குறைவாகத் தானறிந்த synonyms விடையையே அங்கேயும் எழுதும் நிலை காணப்படுகிறது. எனவே இப்பகுதியைப் படிக்கும்போதே கூடுதல் கவனத்தோடு படிப்பதும், விடையளிக்கும்போது விழிப்புடன் எழுதுவதும் அவசியம்.

இப்பகுதியின் தொடர்ச்சியாக Homophones, British/American English, Prefix/Suffix, Syllabification உள்ளிட்ட 10 ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு உரிய பதில்களைத் தேர்ந்தெடுத்து எழுத வேண்டும். இப்பகுதிக்குப் படிப்பதோடு, தேர்வு நோக்கில் தொடர்ச்சியான திருப்புதல் அவசியம். தினசரி உறங்கும் முன்னரோ, ஓய்வு நேரத்திலோ 10 நிமிடங்கள் ஒதுக்கித் திருப்புதல் மேற்கொள்வது பயன் தரும். திருப்புதலின்போது எழுதிப் பார்ப்பது அவசியம். வினா எண்கள் 3 முதல் 7 வரையானவை படித்தே ஆக வேண்டியவை. வினா எண் 13 தவறிழைக்க வாய்ப்புள்ளதாகவும், வினா எண் 10 மாற்றி எழுதக் கூடியதாகவும் மாணவர்கள் மத்தியில் உணரப்படுகின்றன. எனவே இப்பகுதிகளை விழிப்புடன் எழுத வேண்டும்.

இலக்கணத்தில் அலட்சியம் கூடாது

அடுத்து வரும் Grammar பிரிவு, If Clause, Sentence pattern, Question Tag, Degrees of comparison, Gerund / Infinity, Preposition உள்ளிட்ட 10 ஒரு மதிப்பெண் வினாக்களைக் கொண்டது. முதலில் விடையைத் தீர்மானித்துவிட்டு, பின்னர் அதனைக் கொடுக்கப்பட்ட விடைகளில் சரி பார்த்து எழுதுவது குழப்பங்களைத் தவிர்ப்பதோடு நேர விரயத்தையும் தவிர்க்கும். சாய்ஸ் இல்லாத பகுதி என்பதால், இதில் கூடுதல் கவனம் தேவை. அடுத்து வரும் தலா 2 மதிப்பெண்கள் அடங்கிய 5 கேள்விகள் Combined sentence, Voice, If clause, Direct / Indirect speech, Degrees of Comparison உள்ளிட்டவை.

இவற்றில் கொடுக்கப்பட்ட நிலை மற்றும் மாற்ற வேண்டிய வகை குறித்து முழுவதும் அறிந்த பிறகே எழுத வேண்டும். அவசரமாகவோ மேம்போக்காகவோ மாணவர்கள் இப்பகுதியில் தவறிழைப்பது தொடர்கிறது. அதிலும் voice மற்றும் direct / Indirect வினாக்களை மாணவர்கள் கடினமாக உணர்கிறார்கள். எனவே படிக்கும்போதே அதற்கேற்றவாறு முன்னெச்சரிக்கையுடன் பயிற்சி பெறுவது நல்லது. அடுத்து வரும் Punctuation பகுதி அனைவருக்கும் எளிமையானது. குறிப்பிட்ட பொதுவான அம்சங்கள் மூன்றைக் குறித்தாலே 5-க்கு 3 மதிப்பெண்கள் கிடைக்கும். எனவே முழு மதிப்பெண்ணுக்குச் சற்றே மெனக்கெட்டால் போதும்.

வேண்டாமே ‘வளவள’

Prose பகுதியில் 5 இரண்டு மார்க் வினாக்கள் மற்றும் ஒரு 5 மார்க் வினா உள்ளன. முந்தைய வினாத்தாள்களின் முக்கிய வினாக்களைப் படித்தாலே இப்பகுதிக்கு எளிதில் விடையளித்துவிடலாம். 2 மார்க் விடைகளை 3 வரிகளில், சரியான பாயிண்ட்களை உள்ளடக்கியதாக எழுதினால் போதும். 5 மதிப்பெண்ணுக்கு உரிய Paragraph வினாவுக்கு 7 பாடங்களில் இருந்து ஏதேனும் 5 பாடங்களைப் படித்திருந்தாலே போதுமானது. 6 முதல் 10 பாயிண்ட்களை உள்ளடக்கியதாக, பத்தி வடிவிலேயே எழுதலாம்.

தனியாக மதிப்பெண் கிடையாது என்ற போதும், உரிய ‘Title’ உடன் தொடங்கி Theme / Moral எழுதி நிறைவு செய்யலாம். Paragraph எழுதும்போது என்ன கேட்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து எழுதுவது அவசியம். படித்திருக்கிறோம் என்பதற்காகக் கேள்வியை ஒட்டி வரும் பாடத்தின் பிற கதைகளை, பதில்களை எழுதி நிரப்பக் கூடாது.

கைகொடுக்கும் ‘சாய்ஸ்’

Poetry பகுதியில் Memory Poem எழுதப் பாடநூலின் 4-ல் ஏதேனும் 3 படித்திருந்தால் போதும். Title, Author name ஆகியவற்றையும் எழுதுவது நல்லது. அடி பிறழாது, கேட்ட எண்ணிக்கையிலான அடிகளை மட்டுமே எழுத வேண்டும். சாய்ஸ் இருப்பதால் முழு மதிப்பெண்களைச் சுலபமாகப் பெறலாம். தொடர்ந்து வரும் 5 ஒரு மார்க் வினாக்கள், பாடநூலில் இருந்தே கேட்கப்படுகின்றன.

எனவே உரிய பயிற்சியுடன், திருப்புதலும் இருந்தால்தான் இப்பகுதிக்கு விடையளிக்க முடியும். Prose போன்றே Poetry Paragraph வினாவும் தாராள சாய்ஸ் உடன் கேட்கப்படுவதால், 7 poem-ல் இருந்து 5 படித்திருந்தாலே போதும். 6 பாயிண்ட்களில் விடையளிப்பது அவசியம். மேற்கோளாகப் பாடல் வரிகளை மட்டும் ஏதேனும் 1 அல்லது 2 இடங்களில் குறிப்பிடலாம்.

கடினப் பகுதிகளில் கவனம்

Language Function பகுதியில் 10 மதிப்பெண்ணுக்குரிய Comprehension வினாக்கள் உள்ளன. கொடுக்கப்பட்ட பத்தியைக் கூடுதலாக ஓரிரு முறை பொறுமையாக வாசித்தாலே பதில் அளித்துவிடலாம். தலா 5 ஒரு மதிப்பெண்ணுக்குரிய Error spotting, Picture Comprehension பகுதிகளுக்கு உரிய பயிற்சிகள் தேவை. இவற்றில் Error spotting பகுதியை மாணவர்கள் கடினமாக உணர்கிறார்கள். இவை உட்பட ஒவ்வொரு மாணவரும் தாம் உணரும் தனித்துவமான கடினப் பகுதிகளைக் கண்டறிந்து, மீதமுள்ள நாள்களில் அவற்றுக்கு எனக் கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிப்பது மதிப்பெண் குவிக்க உதவும்.

(பாடக்குறிப்புகளை வழங்கியவர் ஆர்.தாமோதரன்.
ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்.
தேவாங்க மேல்நிலைப்பள்ளி,
கோயம்புத்தூர்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

8 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்