கல்லூரி விடுதிகள்: சில ஆலோசனைகள்; சில எச்சரிக்கைகள்

By எஸ்.எஸ்.லெனின்

வெளியூர் கல்லூரியில் படிக்க அடியெடுத்துவைக்கும் மாணவ-மாணவியர்கள், அவர்களின் பெற்றோரின் கவலைகளில் முக்கியமானது தங்கிப் படிக்கும் விடுதி குறித்ததாக இருக்கும். கல்லூரி வளாகத்திலேயே அமைந்திருக்கும் விடுதியாகட்டும், கல்லூரிக்கு வெளியே இருக்கும் விடுதிகயாகட்டும் மாணவரின் எதிர்கால நலன்களைத் தீர்மானிப்பதில் விடுதி வாசத்தின் பங்கு பெரிது.

சமூகத்தின் வாடிவாசல்

பள்ளிப் பருவத்தில் வீட்டுச் சாப்பாடு, பெரியவர்களின் அரவணைப்பு, பாதுகாப்பு, அளவான சுதந்திரம் எனக் கட்டுப்பாடான சூழலிலே வளர்ந்த குழந்தைகளுக்கு விடுதியில் தங்கி மேற்படிப்பை மேற்கொள்வது என்பது முற்றிலும் புதிய அனுபவம். பள்ளிக்காக விடுதியில் தங்கிப் படித்தவர்களுக்கும், கல்லூரிப் பருவத்து விடுதி வாழ்க்கை என்பது தனி அனுபவமே! கூண்டுப் பறவைக்கான வீட்டுச் சூழல், எல்லைகள் அற்ற பொதுச் சமூகச் சூழல் இரண்டுக்கும் இடையேயான இடைவெளியை நிரப்ப விடுதி வாசம் உதவும். பொதுச் சமூகத்தில் சிறப்பாக இயங்குவதற்கான பயிற்சியைப் பெற விடுதி சூழலைப் பயன்படுத்திக்கொள்வது புத்திசாலித்தனம்.

கல்லூரி வளாக விடுதிகள்

பயிலும் கல்லூரி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வளாகத்தில் அல்லது அருகில் இவை அமைந்திருக்கும். கல்விக்கான ஆண்டுச் செலவில் தங்குமிடம், உணவுக்காகப் பெருமளவு வசூலிக்கும் தனியார் கல்லூரி நிர்வாகங்கள் உள்ளன. எனினும் கட்டுப்பாடு, கண்காணிப்பு, நிர்வாகத்தின் ஈடுபாடு, போக்குவரத்து அலைச்சலின்றிப் படிக்க வாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த வளாக விடுதிகளுக்குப் பெற்றோர் முக்கியத்துவம் தருகின்றனர். ஆனால் இதிலும் உணவு, சுகாதாரம், சகவாசம், பாதுகாப்பு அம்சங்கள் போன்றவற்றில் மாணவர்கள் தம்மளவில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

விடுதிக்கும் முன்னுரிமை

தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்வதற்கான கலந்தாய்வின்போது விடுதி வசதிக்கும் முன்னுரிமை தருவது அவசியம். அல்லது தரமான கல்லூரிகளின் மத்தியில் உகந்ததைத் தேர்ந்தெடுக்க, விடுதி வசதிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு முடிவெடுக்கலாம். சில தனியார் கல்லூரிகள், விடுதி வசதிகள் என்ற தலைப்பில் பெரிதாகப் பட்டியலிட்டிருப்பார்கள். ஆனால் சேர்க்கை முடிந்த பிறகு அவை இன்னமும் கட்டுமான நிலையில் இருப்பது தெரியவரும். நிர்வாகத்தின் நேரடி விடுதி என்பதால் பின்வாங்குவதிலும் இழுத்தடிப்புகள் நேரலாம். எனவே, கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், பணியாற்றுபவர்களிடம் விசாரிப்பது, நேரடியாகவே பார்வையிடுவது மூலமாக இந்தக் குளறுபடிகளை முன்கூட்டியே சோதிப்பது நல்லது.

அதிக எண்ணிக்கையில் மாணவர்களை அடைத்து வைக்காத தங்கும் அறை, வரிசையில் காத்திருக்கச் செய்யாத குளியல் அறை, சுகாதாரமான உணவு, சுத்தமான உணவகம், கோடையிலும் தண்ணீர் வசதி ஆகியவை விடுதிக்கு அடிப்படையானவை. பாதுகாவலர், கண்காணிப்பு கேமராக்கள், ஜெனரேட்டர், வைஃபை வசதிகள் வரவேற்புக்குரியவை.

சிக்கலுக்கும் குறைவில்லை

உணவு, கண்காணிப்பு என எவ்வளவுதான் நல்ல சூழலை வழங்கினாலும் அரவணைப்பிலும் பாதுகாப்பிலும் வீட்டைக் கல்லூரி விடுதிகள் ஈடுசெய்ய முடியாது. சீண்டல் தொல்லை (ராகிங்), பொருட்கள் களவு போவது, சக மாணவர்களுடன் சச்சரவு, மன அழுத்தம், உடல்நலக் குறைவு எனப் படிப்பைப் பாதிக்கக்கூடிய சிக்கல்களை மாணவர்கள் எதிர்கொள்ளலாம்.

இவற்றை எதிர்பார்த்து மாணவர்களைத் தயார்செய்வது நல்லது. சீண்டல் என்கிற பெயரில் வரம்பு மீறுபவர்களைப் பற்றிப் பயமின்றிக் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளிக்கலாம். இது பயனளிக்கவில்லை எனில், சமூக ஊடகங்கள், நவீனத் தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தியும் உதவி கோரலாம். கல்லூரி வளாகத்தில் செயல்படும் கண்காணிப்புக் குழுக்கள் அல்லது தொலைபேசி மூலமாக கவுன்சலிங் பெற்று மாணவர்கள் தமது சஞ்சலங்களைப் போக்கித் தெளிவு பெறலாம்.

சொந்த ஊரிலிருந்து எவ்வளவு தொலைவில் விடுதி இருந்தாலும் அந்த ஊரில் தெரிந்த உறவினர் அல்லது நண்பரின் தொடர்புகளை மாணவருக்கு வழங்குவது பெற்றோர் கடமை. அருகில் உள்ள மருத்துவமனை, மருந்தகம், வங்கி, ஏ.டி.எம்., ஊரின் உத்தேச வரைபடம், பேருந்து ரயில் போக்குவரத்து வசதிகள் ஆகிய விவரங்கள் மாணவர் வசமிருக்க வேண்டும்.

உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சையில் இருப்பவர், மருந்துகள் எடுத்துக்கொள்பவர் எனில், அது தொடர்பாகக் கல்லூரி நிர்வாகம், விடுதிக் காப்பாளரிடம் முறைப்படி தெரிவிக்க வேண்டும். அத்துடன், வகுப்பறை, விடுதியறைத் தோழர்களிடம் நெருக்கமானவர்களிடம் தெரிவிப்பது நல்லது. தேவையான மருந்துகள் கையிருப்பில் கொடுத்தனுப்ப வேண்டும். எப்போதுமே சிறிய முதலுதவி தொகுப்பை வைத்திருப்பது நல்லது. உணவில் ஒவ்வாமை இருப்பின் அது குறித்தும் மாணவருக்கு அறிவுறுத்துவது பெற்றோர் கடமை.

கூடுதல் கவனம்

விடுதி வாசத்தில் விலை உயர்ந்த ஆபரணங்கள், பயன்பாட்டுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். லேப்டாப், வாட்ச், ஸ்மார்ட் ஃபோன் போன்ற உடைமைகளைப் பாதுகாப்பாகவும் கவனமாகவும் கையாள வேண்டும். அதுவரை கிடைத்திராத கட்டுப்பாடற்ற சூழல், தனிமை, புதியவர்களின் நட்பு சில நேரம் தேவையற்ற பழக்கங்களையும் அறிமுகப்படுத்தலாம். சுயக் கட்டுப்பாடும் படிப்பில் உத்வேகமும் பெற்றோர் நம்பிக்கையைக் காப்பாற்றும் சிரத்தையும் இருக்கும் மாணவர்கள் விழிப்புணர்வோடு அவற்றைத் தாண்டிவிடுவார்கள். படிப்போடு, விளையாட்டு, உடற்பயிற்சி, யோகா, தனித்திறனை மெருகூட்டும் இசை, பாடப் புத்தகம் கடந்து நல்ல வாசிப்பு வழக்கம் ஆகிய உபரி நேரத்தைச் செலவிடப் பழகுவது கல்லூரிப் பருவத்தை மேலும் இனிமையாக்கும்.

வெளியே விடுதி

கல்லூரி வளாகத்தில் விடுதி, உணவகம் இல்லாமலோ தரமின்றியோ போகலாம். அத்தகைய நிலையில் கல்லூரி வளாகத்துக்கு வெளியே தனியார் மாணவர் விடுதி அல்லது வீட்டில் மாணவர்கள் தங்க நேரிடலாம். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள், ஒன்றாகப் படிப்பவர்கள் என மாணவர்களில் சிலர் கூட்டாகச் சேர்ந்து தனி வீட்டில் தங்கியும் உயர்கல்வியை படிப்பவர்கள். பொருளாதாரக் காரணங்களுக்காகச் சில மாணவர்கள் பகுதி நேரமாக ஏதேனும் பணிக்குச் சென்றவாறே கல்லூரிப் படிப்பைத் தொடர்பவர்களுக்கும் வெளியே தங்குவது உதவும்.

எதுவாக இருந்தாலும் கல்லூரி வளாகத்துக்கு வெளியே தங்குவதற்குப் பல மடங்கு கூடுதலான விழிப்புணர்வு தேவைப்படுகிறது. உள்ளூர்ப் பாதுகாவலரின் கூடுதல் உதவி, கண்காணிப்பு போன்றவற்றைப் பெற்றோர் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும். மாணவியருக்கு எனத் தனி மகளிர் விடுதி கிடைத்தாலும், இந்தப் பாதுகாப்பு அம்சங்களில் கூடுதல் எச்சரிக்கை அவசியம். மகளிர் விடுதிகளை முடிவு செய்யும் முன்னர் தொலைவு, பாதுகாப்பான பாதைகள், உரிய போக்குவரத்து வசதி, அருகில் மதுபானக்கடைகள் இல்லாதது போன்றவற்றையும் கவனத்தில் எடுத்துக்கொள்வது நல்லது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

இலக்கியம்

5 hours ago

தமிழகம்

45 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்