அடுத்த இலக்கை நோக்கி: ஐபிஎல் நாயகன் நடராஜன்

By வி.சீனிவாசன்

தமிழகத்தில் அரசியல் பரபரப்புக்கு இடையே, ஐபிஎல் ஏலத்தில் ரூ. 3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட சேலத்து கிரிக்கெட் வீரர் நடராஜன் அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறார். அசாத்தியப் பந்து வீச்சால் கிரிக்கெட் உலகில் காலடி எடுத்து வைத்துள்ள நடராஜனின் தந்தை தங்கராஜ் நெசவு தொழிலாளர். தாய் சாந்தா சாலையோரத்தில் கோழிக் கடை நடத்துகிறார். எளிமையான குடும்பத்தில் மூத்த மகனான நடராஜனுக்கு மூன்று தங்கைகள், ஒரு தம்பி.

படிப்பில் சுமார் விளையாட்டில் அதிரடி!

பிளஸ் 2 வரை சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் நடராஜன் படித்தார். “படிப்பில் நான் சராசரிதான்” எனப் புன்னகையோடு பேசத் தொடங்கினார் நட்ராஜன். “கிரிக்கெட் மீது காதல் வந்தது 2010-ல்தான். அதுவும், டென்னிஸ் பந்தைக் கொண்டு கிரிக்கெட் விளையாடும் அளவுதான் வசதி. லெதர் கார்க் என்பதெல்லாம் மாவட்ட அளவிலான போட்டியில் விளையாட ஆரம்பித்த பிறகுதான். எந்தவித வசதியும் இல்லாமல், பள்ளி மைதானத்தில் சாதாரண பேட், டென்னிஸ் பாலை வைத்து விளையாடிய நான் இப்போது அடைந்திருக்கும் நிலையை நினைத்தால் எனக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது” என வெளிப்படையாகப் பேசுகிறார்.

அன்றாட வாழ்க்கையைச் சமாளிக்கவே பெற்றோரின் வருமானம் போதாத நிலையில் சிறு பிராயத்தில் பெரிய கனவுகள் இன்றி இருந்தவர்தான் நடராஜன். பள்ளிப் படிப்புடன் பகுதி நேர வேலைக்கும் சென்றிருக்கிறார். “நண்பர்களுடன், டென்னிஸ் பாலில் கிரிக்கெட் விளையாடுவது என் பொழுதுபோக்கு. எனது பந்து வீச்சின் வேகம், யார்க்கர் வீச்சின் லாவகம், பேட்ஸ்மேனின் திணறல் என்பதையெல்லாம் உன்னிப்பாகக் கவனித்து என்னை அடையாளம் கண்டது நண்பர் ஜெயபிரகாஷ். அவர்தான் என்னை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச்சென்றவர். சென்னையில் டிவிஷன் ஒன், டூ, த்ரி என்பதெல்லாம் தெரியாத காலம் அது. டிவிஷன் நான்கில் நண்பர் ஜெயபிரகாஷ் என்னைச் சேர்த்துவிட்டார். அதன் பிறகு வாழ்க்கை மாறத் தொடங்கியது” என்றார்.

சோதனையும் சாதனையும்

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் விளையாட ஆரம்பித்த பிறகு நடராஜனுக்கு ஊக்கமும் வழிகாட்டுதலும் கொடுத்தவர்கள் பலர். “டிவிஷன் நான்கு அணியில் நண்பர் ஜெயபிரகாஷ், டிவிஷன் இரண்டில் கோச் ராவ், டிவிஷன் ஒன்றில் கோச் சுரேஷ் மூலம் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். எனது யார்க்கர் பவுலிங்கில் கரக் ஷன் இருப்பதாக பி.சி.சி.ஐ. விளையாடத் தடை விதித்தது. அதன் பிறகு ஓராண்டு வீட்டில் முடங்கிப்போனேன். எதிர்காலம் சூனியமாகிப்போனதோ என்ற பயம் மனதைக் கவ்வியது. கடந்த ஆண்டு எனது பவுலிங்கிற்கான குறைபாடு களையப்பட்டு, மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. டி.என்.பி.எல். தொடரிலும், ரஞ்சி கோப்பையிலும் சாதனை புரிந்தது, ஐபிஎல் மூலம் ரூ.3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது மிகழ்ச்சி அளிக்கிறது.” என்கிறார்.

சேலம், ஏ.வி.எஸ். கலை, அறிவியல் கல்லூரியில் விளையாட்டு ஒதுக்கீட்டில் பி.பி.ஏ. படித்து முடித்தார். அதே கல்லூரியில் தற்போது எம்.பி.ஏ. பட்ட மேற்படிப்பு படித்துக்கொண்டிருக்கிறார். “விளையாட்டும் போட்டித் தேர்வுக்குத் தயாராவது போன்றதுதான். கவனத்தைச் சிதற விடாமல் எடுத்த காரியத்தில் கண்ணும் கருத்துமாய் இடைவிடாமல் செயல்பட்டால் ஒருநாள் எல்லோரும் நம்மைத் திரும்பிப்பார்பார்கள்” என்பதே இளைய தலைமுறைக்கு நடராஜன் பகிர்ந்துகொள்ளும் வெற்றியின் ரகசியமாகும்.

ஆனால் திறமையும் உழைப்பும் இருந்தும் பலர் வெற்றி அடைய முடிவதில்லையே எனக் கேட்டால், “உண்மைதான். நானும் அத்தகைய அனுபவங்களைக் கடந்து வந்தவன்தான். இங்கு எல்லோருக்கும் ஏதாவது ஒரு திறமை இருக்கத்தான் செய்கிறது. அதற்கான வாய்ப்பும், அவர்கள் சாதனை புரிய விரும்பும் துறையில், அடுத்த கட்டத்துக்கான விழிப்புணர்வு, வழிகாட்டுதல் இல்லை. அதிலும் கிராமப்புற இளைஞர்களுக்கு வசதி வாய்ப்பு மிகக் குறைவு. சிறிய விளையாட்டு மைதானத்தில் திறனை மேம்படுத்திக்கொள்வது கடினம். இந்நிலையை மாற்ற அரசு உட்படப் பலரின் ஆதரவும் ஊக்கமும் அவசியம்” என்கிறார்.

இந்திய அணியே லட்சியம்

கிரிக்கெட் மீது தீராக் காதல் கொண்டிருக்கும் இவருக்கு ஆஸ்திரேலிய அணியின் மிட்செல்தான் ஆதர்ச நாயகன். “அவரின் பந்து வீச்சு வேகம் 140 முதல் 150 கி.மீ. என்பது என்னை அசத்தியுள்ளது. அவரது ஸ்டைல், பவுலிங் எல்லாம் ரசிப்புக்குரியது. இந்திய வீரர்களில் ஜாகீர்கானை மானசீகமாகப் பிடிக்கும். தற்போது, 140 கி.மீ., அளவுக்கு வேகத்தை அதிகரித்து, இந்திய கிரிக்கெட் அணிக்குள் நுழைவதே லட்சியம்” என்கிறார். படிப்பில் சராசரி மாணவன், பின்தங்கியக் குடும்பச் சூழல் என்றாலும், கிரிக்கெட் விளையாட்டில் அதிரடி விளையாட்டு வீரராக மாறி தன் திறமையான பந்து வீச்சால், ஐபிஎல் போட்டியில் விளையாட இடம் பிடித்துள்ளார் நடராஜன். அடுத்து இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பாகவே ஐபிஎல் போட்டியை கருதுகிறார். நிச்சயம் ஐபிஎல் போட்டியிலும் தன் வீச்சை நிரூபிக்கும் துடிப்புடன் இருக்கிறார் இந்தச் சாமானியச் சாதனையாளர்.

செங்கல் தூக்கிய கரங்கள்

பள்ளியில் படிக்கும்போதே விடுமுறை நாட்களில் பகுதி நேரமாகக் கூலி வேலைக்குச் சென்றிருக்கிறேன். நெசவு நெய்யும் வேலைக்குச் சென்று வந்துள்ளேன். கட்டிடக் கூலி வேலை பார்த்திருக்கிறேன். செங்கல் தூக்கிய கரங்களால், வீசும் கிரிக்கெட் பவுலிங்கிற்கு வலிமை அதிகம் என்பேன்.

மறக்க முடியாத முதல் வெற்றி

சேலம் மாவட்டம் மேச்சேரியில் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் முதல் பரிசு 50 ஆயிரம் ரூபாய் என்றதும் துள்ளிக் குதித்தேன். மாநிலம் முழுவதும் இருந்து பல அணிகள் பங்கேற்கப்போவதை அறிந்ததும், காற்றுப் போன பலூனாக மனம் சுருங்கியது. சரி, ஒரு கை பார்ப்போம் என்று நம்பிக்கையைத் திரட்டி என் குழுவினரோடு களமிறங்கினேன். அன்று அதிரடி ஆட்டத்தால் வெற்றிக் கோப்பையையும் பரிசுத் தொகையையும் வென்றோம். அந்த முதல் வெற்றி இன்றும் மனதில் தித்திப்பாய் இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 mins ago

இந்தியா

50 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்