ஆங்கிலம் அறிவோமே 230: போரடிக்குதா, இல்லை போரடிக்கப்படுகிறீர்களா?

By ஜி.எஸ்.எஸ்

கேட்டேனே ஒரு கேள்வி

கீழே கொடுக்கப்பட்டுள்ள சமன்பாட்டின்(!) மூலம் எதை உணர்த்துகிறேன் என்பதைக் கண்டுபிடியுங்கள். இதற்காக நீங்கள் கணிதத்தில் முதுநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டாம். இது ஆங்கிலம் தொடர்பான கேள்வி என்பதை நினைவில்கொண்டு புதிரை விடுவிக்க முடிகிறதா என்று பாருங்கள்.

>50 = 45

சுவாரசியமான மாற்று விடைகளையும் அனுப்பலாம் - விரைவில், மின்னஞ்சலில், பெயர், ஊருடன்.

**************

Otherwise என்ற சொல்லைப் பயன்படுத்துவதில் குழப்பம் ஏற்படுகிறது என்று கூறுகிறார் வாசகர் ஒருவர்.

என்ன குழப்பம்? “வாக்கியத்தின் தொடக்கத்தில் இதைப் பயன்படுத்தலாமா?” என்பதுதான் அவரது குழப்பம். Otherwise என்றால் ‘மற்றபடி’ அல்லது ‘இல்லையென்றால்’ என்று பொருள். அதாவது on the other hand. அல்லது or else. இந்தச் சொல் இடம்பெற வேண்டுமானால் அதற்கு முன்பு ஏதோ கூறப்பட்டிருக்க வேண்டும் அல்லவா?

Let us walk fast, otherwise we may miss the train. Behave properly, otherwise others in the team may dislike you.

He should be very talented; otherwise he would not have been selected for inter University contest.

எனவே otherwise வாக்கியத்தின் தொடக்கத்தில் இடம்பெறுவதில்லை. கவிஞர்கள் தங்கள் படைப்புகளில் இதற்கு விலக்களித்துக்கொள்வதுண்டு.

**************

“மிக உயரமான கட்டிடங்களை Skyscraper என்றும் சொல்கிறார்கள், Tower என்றும் குறிப்பிடுகிறார்கள். இரண்டும் ஒரே அர்த்தம் கொண்டவைதானா?’’

Skyscraper என்பதற்கும் Tower என்பதற்கும் வேறுபாடு உண்டு. Skyscraper என்பது மனிதர்கள் வாழ்வதற்காக எழுப்பப்படும் ஒரு கட்டிடம். அது எக்கச்சக்கமான தளங்களைக் கொண்டிருக்கும்.

Tower என்பது மிக உயரமானதுதான். ஆனால், அதன் அகலத்தோடு ஒப்பிடும்போது மிகப் பல மடங்கு உயரமானதாகக் காட்சி தரும். தவிரப் பொதுவாக tower என்பது மனிதர்கள் வசிப்பதற்காக எழுப்பப்படுவதில்லை. வேறு பல பயன்கள் இதற்கு இருக்கலாம்.

**************

ஆங்கிலத்தில் உள்ள நான்கு பருவங்களில் ஒன்றான autumn என்பது என்ன என்று கேட்டிருக்கிறார் வாசகர் ஒருவர்.

கோடைக்கும் குளிர்காலத்துக்கும் இடையே வரும் பருவம் இது. தமிழில் இதை இலையுதிர் காலம் என்போம். அமெரிக்காவில் இந்தப் பருவத்தை fall என்கிறார்கள். (leaves fall). இந்தியாவில் இது தோராயமாகச் செப்டம்பர் இறுதியிலிருந்து நவம்பர்வரை எனலாம்.

english 2jpg100 

போரடிக்குது என்கிறோமே, அந்த அர்த்தத்தில் bore என்ற ஆங்கில வார்த்தை உண்டா?

பொதுவாக bore என்ற verb-க்கு துளையிடுவது என்று பொருள். ஆனால், ‘போரடிப்பது’ என்ற பொருளிலும் அது பயன்படுத்தப்படுகிறது!

Bored என்ற சொல் ஆங்கிலத்தில் உள்ளது (அதாவது போரடிப்பதல்ல. He bored us என்பது போல் குறிப்பிடக் கூடாது. Bored என்பது ‘போரடிக்கப்படுவது’ அதாவது boredom என்ற நிலைக்கு உள்ளாவது). Bored என்றால் ஒன்றில் ஆர்வம் இழந்த நிலை. After a while he began to get bored and impatient.

ஆங்கில எழுத்துக்களை ஆங்கில இலக்கியத்தில் சிறப்பு பெற்ற Lord Byron

Society is now one polished horde

Formed of two mighty tribes, the bores and the bored.

என்று கூறியிருக்கிறார்.

 “மாடுகட்டிப் போரடித்தால் மாளாது என்று யானைகட்டிப் போரடித்த இனம் எங்கள் இனம்’ என்பதுபோல பழங்காலப் பெருமையை மட்டுமே பேசுவது சிலருக்கு ஒருவேளை போரடிக்கலாம்J.

**************

“To hit the nail on the head என்றால் என்ன பொருள்?”

நண்பரே, ‘ஐயோ, வீட்டின் சொந்தக்காரர்களுக்குப் பிடிக்காத விஷயமாச்சே இது’ என்று பதற வேண்டாம். இது ஆணி, சுத்தியல் விஷயமல்ல. ஒரு சூழலையோ பிரச்சினையையோ மிகத் தெளிவாகச் சொல்வது. பலரும் தயங்கும்போது பளிச்சென்று ஒன்றைச் சொல்வதைக்கூட அப்படிச் சொல்வார்கள்.

ஒரு கூட்டம் நடக்கிறது. அடிக்கடி பலரது வீடுகளில் பொருள்கள் திருடு போகின்றன. இதைத் தடுப்பதற்காகச் சேர்ந்த கூட்டம் அது. அந்தக் கூட்டத்தில் உட்கார்ந்திருக்கும் ஒருவரின் மகன்தான் இப்படிப் பொருட்களைத் திருடுகிறான் என்பது பலருக்கும் தெரியும். ஆனாலும் அதை எப்படிச் சொல்வது என்று தயங்குகிறார்கள்.

“யாரும் திருடக் கூடாதுன்றதை எல்லாருமே உணரணும்” என்கிறார் ஒருவர். “உடனடியாக இந்தத் திருட்டு நின்றுவிட்டால் நல்லது’’ என்கிறார் இன்னொருவர். “என் வலது பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் மூர்த்தியின் மகன்தான் இப்படித் திருடுகிறான். அவனை நல்வழிப்படுத்த வேண்டும்” என்கிறார் மூன்றாமவர். ஆக மூன்றாவதாகக் கூறியவர் “Hit the nail on the head’’ என்பதைச் செய்கிறார். மிகச் சரியாக ஒன்றைச் செய்வது என்ற பொருளில் இந்த idiom பயன்படுத்தப்படுகிறது.

**************

போட்டியில் கேட்டுவிட்டால்

His writings are _______________. No doubt publishers compete to publish his books.

Prosaic

Egregious

Fulsome

Putative

 ஒருவரது நூல்களை வெளியிடப் பதிப்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்றால் அவரது எழுத்துக்கள் எப்படியிருக்க வேண்டும்? இதற்குப் பொருத்தமான சொல்லைத் தான் கோடிட்ட இடத்தில் நிரப்ப வேண்டும்.

 Prosaic, Egregious, Fulsome என்ற சொற்கள் கேட்பதற்கு இனிமையானவை. இவற்றின் அர்த்தத்தைப் பலரும் தவறாக நினைக்கக் கூடிய வாய்ப்பு உண்டு. Prose, Gorgeous, Full போன்றவை பொதுவாக எதிர்மறை அர்த்தத்தை அளிப்பதில்லை. ஆனால், கேள்வியின் சாய்ஸாக அளிக்கப்பட்டுள்ள (இவற்றோடு தொடர்புடையவை போலத் தோற்றமளிக்கும்) மூன்று சொற்களும் எதிர்மறை அர்த்தம் கொண்டவை.

Prosaic என்றால் ‘போரடிக்கின்ற’ என்று தோராயமாகக் கூறிவிடலாம். அதாவது இதில் கற்பனை வளமும் இல்லை, ஒரிஜினாலிடியும் இல்லை.

Egregious என்றால் மிகமிக மோசமான என்று பொருள்.

Fulsome என்ற சொல்லை sincere என்பதற்கு எதிர்ச் சொல்லாகவே குறிப்பிட்டுவிடலாம். அதாவது அளவுக்கு அதிகமாக ஒருவரைப் பாராட்டுவது.

Putative என்றால் பலரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அல்லது பலரும் மதிக்கக் கூடிய என்று பொருள்.

எனவே, putative என்பது பொருத்தமான விடை என்பது இந்நேரம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

எனவே His writings are putative. No doubt publishers compete to publish his books என்பதுதான் சரியான வாக்கியம்.

 

சிப்ஸ்

#  Infringement என்றால்?

சட்டமீறல். அல்லது சட்டப்படி அனுமதிக்கப்பட்ட ஒரு விஷயத்தைச் செய்யவிடாமல் தடுப்பது.

# என் மேலதிகாரி விவாதத்தின்போது நடுவே ‘End of story’ என்கிறார் அப்படியென்றால் என்ன?

“இதைப் பற்றி விவாதம் தேவையில்லை, அவ்வளவுதான்” என்று அர்த்தம்.

# Correct செய்வது என்றால் என்ன?

Correct என்பதை verb ஆகப் பயன்படுத்தும்போது ‘(தவறை) சரிசெய்வது’ என்றுதான் அர்த்தம் (வழிக்குக் கொண்டு வருவது அல்ல).

தொடர்புக்கு - aruncharanya@gmail.com | ஓவியம்: வெங்கி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

36 mins ago

வணிகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

கல்வி

42 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்