தேர்தல் 2019: ஜனநாயகத்தைக் காக்கும் ஆணையம்

By கோபால்

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல்களை நடத்தும் வேலையைச் செய்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். புது டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த ஆணையம், அரசியல் சாசன அடிப்படையில் 1950 ஜனவரி 25 அன்று தொடங்கப்பட்ட சுயசார்பு கொண்ட அமைப்பு.

இந்திய அரசியல் சாசனத்தின் உறுப்பு (article) 324-ன் அடிப்படையிலும் 1951-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் அடிப்படையிலும் தேர்தல் ஆணையம் இயங்குகிறது. தொடக்கத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் என்ற ஒற்றை நபர் அமைப்பாக இயங்கிவந்தது.

1993 அக்டோபர் 1-ல் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருவர், இரண்டு தேர்தல் ஆணையர்கள் என மூன்று ஆணையர்களைக் கொண்ட அமைப்பாக இயங்கிவருகிறது. ஆணையர்களின் பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையிலேயே ஆணையத்தின் முடிவுகள் அறிவிக்கப்படும்.

பொறுப்புகளும் அதிகாரங்களும்

இந்தியத் தேர்தல் ஆணையம் நாட்டின் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களையும், நாடாளுமன்றம் (மக்களவை, மாநிலங்களவை), மாநில சட்டப்பேரவைகள், சட்ட மேலவைகள் ஆகியவற்றின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களையும் நடத்துகிறது.

இவற்றில் மக்களவை, சட்டப்பேரவை இரண்டிலும் 18 வயது நிறைந்த குடிமக்கள் வாக்களிக்கிறார்கள். வாக்காளர்கள் தொகுதி வாரியாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு உறுப்பினரை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்தத் தேர்தல் நடைமுறை ‘பொதுத் தேர்தல்’ என்று அழைக்கப்படுகிறது.

ஒரு தொகுதியில் உறுப்பினர் இறந்துவிட்டாலோ தகுதிநீக்கம் செய்யப்பட்டுவிட்டாலோ அத்தொகுதியைக் காலியானதாக அறிவித்து, அதற்கு வேறு உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்கான இடைத்தேர்தல், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டால் மறுதேர்தல் ஆகியவற்றை நடத்துவதும் தேர்தல் ஆணையத்தின் பொறுப்புதான்.

இதுவரை 16 மக்களவைத் தேர்தல்களையும் 380-க்கும் மேற்பட்ட மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களையும் தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது. பொதுத் தேர்தல், இடைத் தேர்தல், மறு தேர்தல் அனைத்தையும் எப்போது நடத்த வேண்டும் என்று ஆணையம்தான் தீர்மானிக்கிறது. 18 வயது நிறைந்த அனைத்துக் குடிமக்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதும் பட்டியலை அவ்வப்போது புதுப்பிப்பதும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை அளிப்பதும் ஆணையத்தின் பணிகள்.

இவைதவிர அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்வதும் அவை பெறும் வாக்கு விகிதத்தின் அடிப்படையில் அவற்றுக்குத் தேசியக் கட்சியாகவோ மாநிலக் கட்சியாகவோ அங்கீகாரம் அளிப்பதும் தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டதே.

தேர்தல் நடைமுறை

தேர்தல் நடத்தும்போது தேர்தல் ஆணையம் பின்வரும் பணிகளைச் செய்கிறது:

> ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னதாகவும் தொகுதிவாரியாக வாக்காளர் பட்டியலை வெளியிடுவது.

> தேர்தல் தேதி, வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கும் திரும்பப் பெறுவதற்குமான கடைசி நாட்களை அறிவிப்பது.

> மாநில அளவிலான தேர்தல்களை மேற்பார்வையிட மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியை நியமிப்பது.

> குறிப்பிட்ட தேதியில் வேட்புமனுக்களைப் பரிசீலித்து, அவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது.

> வேட்பாளர்களின் பிரச்சாரங்களையும் பிரச்சாரச் செலவுகளையும் கண்காணிப்பது.

> தேர்தல் தேதிக்கு 48 மணி நேரம் முன்பு பிரச்சாரம் நிறைவு செய்யப்படுவதை உறுதிப்படுத்துவது.

> தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட வளாகங்களில் தேர்தலை நடத்துவது. இதற்கு அரசு அதிகாரிகளையும் ஆசிரியர்களையும் பணியில் ஈடுபடுத்துவது.

> தேர்தல் முடிந்த பின் வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பாதுகாப்பது.

> பதிவான வாக்குகளை எண்ணி தேர்தல் முடிவுகளை அறிவிப்பது.

 

தேர்தல் நடத்தை விதிமுறை

தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிடும். தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்வரை அந்த விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும். அதன்படி அரசு புதிய நலத்திட்டங்கள் எதையும் அறிவிக்கக் கூடாது.

தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் பிரச்சாரம் - உரைகள், தேர்தல் வாக்குறுதிகள், பிரச்சார செலவுகள் தொடர்பான பல்வேறு விதிமுறைகளைத் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது. வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் இவற்றை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

மீறுபவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். அதேபோல தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, தேர்தல் நடக்கும் அனைத்துப் பகுதிகளிலும் அரசு ஊழியர்களைப் புதிதாக நியமிப்பதோ இடமாற்றம் செய்வதோ தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

மேலும்